Friday, May 11, 2012

நித்தியானந்தா நியமனம்-சில விவாதக் குறிப்புகள்


மதுரை ஆதீனத்தை நித்தியானந்தா கைப்பற்றியிருப்பது அல்லது ஆதீனமாக அவர் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து இந்துத்துவ அமைப்புகள் அல்லது பிரமுகர்கள் என்ன நினைக்கின்றனர் என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கின்றது.
காஞ்சி ஜெயேந்திரர் நியமனத்தை எதிர்த்துள்ளார்.
'மதுரை ஆதீனம் என்பது இந்தியாவின் தலைமையான ஆதீனங்களில் ஒன்று. திருஞான சம்பந்தரால் தலைமை தாங்கப்பட்டது. இந்த மடத்தில் ஆதீனமாகப் பொறுப்பேற்பவர்கள் தலையை மொட்டையடித்து, தலையில் ருத்ராட்சக் கொட்டைகளைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்பது மரபு. நித்தியானந்தா அவ்விதம் மொட்டையடித்து ருத்ராட்சம் அணியவில்லை. மேலும், அவர் மீது செக்ஸ் புகார் உள்ளது. அவரது நியமனம் முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல என்று ஜெயேந்திரர் கூறினார்.' (தீக்கதிர், 10.5.12)
செக்ஸ் புகார் பற்றி இவர் பேசலாமா கூடாதா என்பது தனிக்கதை.
இனி சகல இந்துத்துவ சக்திகளையும் ஆட்டுவிக்கும் ஆர்எஸ்எஸ்சின் தமிழகப் பிரச்சாரகர் துக்ளக் சோ என்ன கூறுகிறார் பார்ப்போம்.
'நடந்திருப்பது சரியா தவறா என்பது பற்றிய என் கருத்து என்னோடு இருக்கட்டும். ஆனால், பொதுவாகப் பேசுவது என்றால், இந்த மாதிரி பீடாதிபதிகளை நியமிப்பது (வாரிசுகளை நியமிப்பது) அந்தந்த மடத்தில் ஒரு பரம்பரை வழக்கப்படி நடந்து வருகிறது. இதில் மதுரை ஆதீனம் செய்திருக்கும் நியமனம், அந்த மடத்தின் வழக்கப்படிதான் நடந்திருப்பதாக மடத்தின் சார்பில் கூறப்படுகின்றது. செய்யப்பட்ட தேர்வு சரியா தவறா என்பது பற்றிப் பலவிதக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், நியமனம் செய்கிற உரிமை மதுரை ஆதீனத்திற்கு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
'சரி, இந்த நியமனம் தவறு என்று நாம் ஆரம்பித்தோமானால், ஒரு மடத்தின் நியமனத்தோடு நாம் நின்று விடுவோமா? அல்லது ஒவ்வொரு மடத்திலும் எப்படிப்பட்ட ஆதீனங்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், அவர்களுக்குள்ள தகுதிகள் என்ன என்றெல்லாம் ஆராயத் தொடங்குவோமா? அதன் பிறகு மடங்கள் முனிசிபாலிடிகள் மாதிரி விமரிசனத்திற்கு உள்ளாகுமே தவிர, மத ரீதியான அமைப்புகளாக மதிக்கப்படாது. ஒரு மடத்தில் நடக்கிற காரியங்கள் அதைச் சார்ந்துள்ள பக்தர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றால், தங்களுடைய அதிருப்தியைத் தெரிவித்துவிட்டு, அவர்கள் ஒதுங்கிக் கொள்ளலாமே?' (துக்ளக் 16.5.12).
தன்னுடைய கருத்து என்ன என்பது பற்றி சோ கூறவேயில்லை. ஆனால், மத பீட நியமனங்களை கேள்வி கேட்கக் கூடாது என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.
சங்பரிவார அமைப்புகள் தவிர்த்து வேறு சில இந்து அரசியல் அமைப்புகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. அவை நித்தியானந்தாவின் நியமனத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதற்கு அடிப்படை அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு. அதே போல், சன் தொலைக் காட்சியில் நித்தியானந்தாவின் படுக்கையறைக் காட்சிகள் (?) ஒளிபரப்பான போது கர்நாடகாவில் சங்பரிவார அமைப்புகள் நித்தியானந்தாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்து மதத்தின் பெயரைக் கெடுத்தவர் என்பது அவர்களது புகார்.
பொதுவாக ஒரு கருத்து சமூக அக்கறையுள்ள சிந்தனையாளர்களின் மத்தியில் நிலவுகிறது. சாமியார்களில் இரண்டு வகைதான் உண்டு; ஒன்று, சிக்கிக் கொண்டவர்கள்; மற்றொன்று, சிக்கிக் கொள்ளாதவர்கள். ஆக, இந்த விவகாரத்தில் அது மையப் பிரச்சனை அல்ல.
ஜெயேந்திரரோ, சோவோ, மற்ற இந்து மதவாதிகளோ மரபுகள் கறாராகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதில் ஒத்த கருத்து கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் சோ-தான் எதிர்கால விளைவுகள் குறித்தும் எச்சரிக்கை அடைந்தவராக இருக்கிறார். மட விவகாரங்களை ஆராயவே கூடாது என்கிறார். நாளைக்கு பிராமணீய மடங்களும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டால் என்ன ஆவது என்கிற பயம் அவருக்கு இருக்கலாம். அத்துடன் மதம் சார்ந்த முடிவுகளை கேள்வி கேட்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறார்.
வலியுறுத்தப்படும் மரபுகளில் சாதியும் ஒன்று என்பதைக் கவனிக்க வேண்டும். இந்த நியமனத்தை பார்ப்பன ஜெயேந்திரர் மட்டும் எதிர்க்கவில்லை; இதர சைவ மடாதிபதிகளும் எதிர்க்கின்றனர். அவர்கள் எதிர்ப்பிற்குச் சொல்லும் பிரதானமான காரணம், நித்தியானந்தா சைவப் பிள்ளை அல்ல என்பதாகும்; எனவே, பிராமணீயத்தை எதிர்த்து, அதற்கு மாற்றாக (பவுத்த, சமண மதங்களையும் எதிர்த்ததுதான், தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒழித்ததுதான் சைவ மதம். மதுரை ஆதீனத்தை நிறுவிய திருஞானசம்பந்தர் பற்றி 'ஆயிரம் சமணர்களின் தலை வாங்கியவர்' என்று புகழ் போற்றும் பக்திப் பாடல்கள் இன்றும் மதுரை மாவட்டத்தில் பிரபலம்.) உருவாக்கப்பட்ட சைவ மதம் சாதிக் கட்டமைப்பை மாற்ற விரும்பவில்லை என்பது மட்டுமின்றி, அதைக் கட்டிக்காப்பாற்றியே வந்திருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். இன்ன சாதியினர்தான் மடாதிபதியாக முடியும் என்றால் அதற்கு வேறு என்ன பொருள் இருக்க முடியும்? தீண்டாமையை இன்னும் கடைப்பிடிக்கும் மடங்கள்தான் சைவ மடங்கள்.
கிட்டத்தட்ட அனைத்து மடங்களுக்குமே ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இதில் மதுரை ஆதீனம் உள்ளிட்ட சைவ மடங்களும் அடங்கும். மடாதிபதிகள் இவற்றை அனுபவிக்கலாமே ஒழிய தங்களுக்கு உரியதாக ஆக்கிக் கொள்ளக் கூடாது. எனினும், இவற்றை தங்களுடையதாக ஆக்கிக் கொள்ள அவ்வப்போது சில மடாதிபதிகள் முயற்சிப்பது வழக்கம்தான். நித்தியானந்தாவின் நியமனத்திலும் சொத்துக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது என்பது இப்போது ஊரறிந்த ரகசியம். பழைய ஆதீனம் தனக்குச் சொந்தமாக சொத்துக்களில் ஒரு பகுதியை லவட்டிக் கொண்டு போக நித்தியானந்தாதான் உதவுவார் என்றோ, உதவ வேண்டும் என்றோ அல்லது அவர் மூலம் வேறு வழியில் வேறு சொத்துக்கள் கிடைக்கும் என்றோ, இப்படி ஏதேனும் ஒரு ஏற்பாட்டின் அடிப்படையில்தான் இந்த நியமனம் நிகழ்ந்திருக்க வேண்டும்.
மேலும், கலாச்சார ரீதியாக பார்க்குமிடத்து ஹைடெக் சாமியாரான நித்தியானந்தாவை ஆதீனமாக நியமித்திருப்பதன் மூலம் மடத்தின் செயல்பாடுகளையும் ஹைடெக்காக ஆக்கும் ஒரு திட்டமும் இருக்கலாம். இருக்கிறது என்றே கூடச் சொல்லலாம். மடத்தின் பக்தர் குடும்பங்களில் சமீபத்தில் கல்வி கற்று உருவான நவீன தலைமுறைக்கு ஏற்ப, உலகமய-தாராளமய-தனியார்மய ஆன்மீக வடிவங்களுக்கு ஏற்ப மடத்தின் ஆன்மீகச் செயல்பாட்டு வடிவங்களை மாற்ற வேண்டிய அவசியத்தை ஆதீனம் உள்ளிட்ட மட நிர்வாகிகள் உணர்ந்ததன் வெளிப்பாடே அல்லது இப்படி ஒரு தொன்மையான மடம் தனக்குத் தேவை என்று நித்தியானந்தா நினைத்ததன் வெளிப்பாடே இந்த நியமனம். உலகமயம் அனைத்து கலாச்சார வடிவங்களின் உள்ளடக்கத்தையும் அப்படியே வைத்துக் கொண்டு தன்னுடைய மேலாடையை அவற்றுக்கு அணிவித்து விடுகின்றது. (இது குறித்து சு.பொ.அகத்தியலிங்கம் உள்பட வேறு சிலரும் எழுதியிருக்கிறார்கள்)
இதன்றி வேறு ஏதேனும் கலாச்சார உள்நோக்கம் இருக்குமா என்பது பற்றியும் யோசிக்க வேண்டும். அதாவது, வைதீகக் கலாச்சாரத்தைத் திணிக்கும் திட்டம் எதுவும் இருக்குமா? நித்தியானந்தாவைப் பொருத்தவரையில், அவர் சாதியில் வேளாளராக இருந்தாலும், சில வேத மரபுகளைப் பின்பற்றுபவராக இருப்பதால் மதுரை சைவ மடத்தின் செயல்பாடுகளில் அது தாக்கத்தைச் செலுத்தலாம். ஆனால், வைதீக சக்திகள் திட்டமிட்டு சைவ மடத்தை வைதீக மடமாக மாற்றுவதற்காக அவரை அனுப்பியிருக்கின்றன என்று கருதுவதற்குப் போதுமான ஆதாரங்கள் இதுவரையிலும் இல்லை. அப்படியரு திட்டமே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.
மேலும், காஞ்சி ஜெயேந்திரர் மற்றும் சில இந்துத்துவ அமைப்புகள் அவரது நியமனத்தை எதிர்க்கின்றன; ஏற்கனவே நித்தியானந்தா பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான போது விஎச்பி போன்ற இந்துத்துவ அமைப்புகள் அவரைக் கடுமையாக விமரிசித்தன. ஆனால், சோ மதம், மடம் சம்பந்தமான விவகாரங்களைக் கேள்வி கேட்கக் கூடாது என்கிறார். தன்னுடைய கருத்து என்று அவர் எதுவும் சொல்லவில்லை. மேலும், நித்தியானந்தாவின் நியமனத்தை எதிர்க்கும் இதர சைவ மடாதிபதிகளும் தங்களுடைய எதிர்ப்பிற்கு இப்படி ஒரு காரணத்தைக் கூறவில்லை. எனவே, இது பற்றி முடிவிற்கு வரும் முன் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இக்கருத்துக்களைச் சொல்ல வேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது?
சைவம் வைதீகத்திற்கு மாற்றாக மட்டும் எழுந்த மதமில்லை. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி அது சமணம் மற்றும் பவுத்தம் ஆகியவற்றுக்கு எதிராகவும் எழுந்த மதம். ஆனால், வைதீகத்திற்கு மாற்றாக என்பதற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இந்த அம்சத்திற்குக் கொடுக்கப்படுவதில்லை (பார்க்க: அருணன் அவர்களது கட்டுரை, தீக்கதிர், 12.5.12).
சாதியக் கட்டமைப்பில் சைவம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. பார்ப்பன பூசாரிகளின், சமஸ்கிருதத்தின் தேவையற்ற ஒரு வழிபாட்டு முறையை உருவாக்கியிருக்கிறது; அவ்வளவுதான். அதற்காகவே அதை விமரிசிக்காமல் இருப்பது சரியல்ல. திராவிட இயக்கங்கள் வைதீக மதத்தை எதிர்த்த அளவு, வைதீக மடங்களை எதிர்த்த அளவு சைவ மடங்களின் சாதீய, பிற்போக்குத்தனமான மரபுகளையோ, அவற்றின் கொடூர கடந்த காலத்தையோ (எண்ணாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றியது) விமரிசிக்கவில்லை. கண்டிக்கவில்லை.
இன்னும் சொல்லப் போனால் வைதீகத்தின் கொடூரத்தை, அநீதியைக் காரணம் காட்டி இவை வளர மறைமுகமாக உதவின. அவ்வறாக தலித்துகளுக்கு எதிரான, பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர வழிவகுத்தன. சுருக்கமாகச் சொன்னால், பார்ப்பனர்களின் சமூக ஆதிக்க நிலையை பார்ப்பனரல்லாத மேல்சாதியினர் கைப்பற்றுவதற்கு உதவின. சைவத்தின் பிரதான குறிக்கோள்களில் அதுவும் ஒன்று. மற்றொன்று சமண, பவுத்த எதிர்ப்பு.
இப்போது சமூகத்தின் எல்லா தளங்களில் இல்லை என்றாலும் பல்வேறு தளங்களில் இதர மேல்சாதியினர் ஆதிக்க நிலையை எட்டிக் கொண்டிருக்கும் பின்னணியில், அரசு அதிகாரத்திலும், பொருளாதார அதிகாரத்திலும் கணிசமான பங்கு வகிக்கும் நிலையிலும் வெறும் வைதீக எதிர்ப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது தாழ்த்தப்பட்ட மக்களின், பெண்களின், தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்கு உகந்ததல்ல. எல்லாப் பழியையும் தூக்கி வைதீகத்தின் மீது அல்லது பார்ப்பனீயத்தின் மீது போடுவது இதர மேல்சாதியினரின் ஆதிக்க நலன்களுக்கே உகந்தது. (கீழவெண்மணிப் படுகொலைகளுக்கு பார்ப்பனீய சதியே காரணம் என்றும் ஒரு கருத்து சொல்லப்பட்டது. இத்தனைக்கும் அங்கு நடந்தது ஒரு வர்க்க, அரசியல் போராட்டம். அதில் பிரதான குற்றவாளி கோபாலகிருஷ்ண நாயுடு என்கிற இதர மேல்சாதிக்காரர்; அவருடன் ஒன்றிரண்டு பார்ப்பன நிலப்பிரபுக்கள் உள்பட வேறு மேல் சாதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்களும் கூட்டு சதி செய்தனர். இன்றும் கூட தலித்துகளின் ஆலய நுழைவுப் போராட்டங்களுக்கு எதிரான அடக்குமுறையை பிற்படுத்தப்பட்ட சாதியினரும், பிற்படுத்தப்பட்ட சாதியினரை மட்டுமே கொண்ட அரசாங்கங்களும் கட்டவிழ்த்து விடுகின்றன. வன்னியப் பெண்களுக்கு 'சாதிக் கலப்புத்' திருமணம் செய்து வைத்தால் கொன்று போடுவேன் என்று வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மிரட்டுகிறார். இப்படி ஏராளமான உதாரணங்களைக் கொடுக்க முடியும்).  
வகுப்புவாதத்தைப் பற்றி வரலாற்றாசிரியர் பிபன் சந்திரா எழுதியிருக்கும் 'நவீன இந்தியாவில் வகுப்புவாதம்' எனும் நூலின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
'வகுப்புவாதம் குறித்த இப்பகுப்பாய்வு 19ம் நூ£ற்றாண்டின் மத்தியிலிருந்து இந்தியாவில் வளர்ச்சி பெற்று வந்துள்ள வட்டார, சாதிய, மொழி போன்றவற்றின் அடிப்படையிலான மற்ற பிளவுவாதப் போக்குகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. சாதி, வட்டார, மொழிப் பிரச்சனைகள் ஒவ்வொன்றும் வேறுபட்ட, தனித்த அம்சங்களைக் கொண்டிருந்தபோதிலும் அவற்றுக்கும் வகுப்புவாதத்திற்கும் இடையில் பல்வேறு பொதுத்தன்மைகளும், கட்டமைப்புக் கூறுகளும், அதே போல் வேர்களும் செயல்பாடுகளும் ஒத்த தன்மையைக் கொண்டுள்ளன. அவை ஒரே மாதிரியான சமூகப் போக்குகளைப் பிரதிபலிக்கின்றன. மேலும், இந்த இசங்கள் தங்களுக்கு இடையிலான போட்டியில் ஒன்றையன்று அகற்ற முற்படுகின்றன.' (பக். 8,9).
ஆம், ஒன்றையன்று அகற்றி விட்டு, அதன் இடத்தைப் பிடித்துக் கொள்ளவே இம்மாதிரியான அடையாள அரசியல்கள் முற்படுகின்றன.

12.5.12
------------------------------------------------------------------------------------------------------------------







பண்டையக் கால இந்தியா


நூல் அறிமுகம்:


   
பேராசிரியர் டி.என்.ஜா
தமிழில்: அசோகன் முத்துசாமி
முதல் பதிப்பு: டிசம்பர் 2011
வெளியீடு: பாரதி புத்தகாலயம், சென்னை

கி.ரவீந்திரன் (சேலம்)

முனைவர் திவிஜேந்திர நாராயண் ஜா டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராக பணியாற்றி வருகின்றார். இந்திய வரலாற்றுப் பேரவையின் பண்டைய இந்திய வரலாற்றுத் துறையின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் திறம்படச் செயலாற்றியவர். இந்து தேசியவாதம் மற்றும் இந்துத்துவம் ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறவர். அந்த வகையில் 'கிஸீநீவீமீஸீt மிஸீபீவீணீ வீஸீ பிவீstஷீக்ஷீவீநீணீறீ ஷீutறீவீஸீமீ' என்ற நூல் மிகவும் குறிப்பிடத்தக்கது. அசோகன் முத்துசாமி இந்நூலை 'பண்டையக் கால இந்தியா' என்கிற பெயரில் மிகச் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி குப்தர்கள் காலம் வரையிலான வரலாற்று நிகழ்வுகளை ஜா இந்த நூலில் விரிவாக ஆய்வு செய்துள்ளார். அறியப்பட்ட வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறுகளே என்கிற புரிதலுடன் கூடிய நூலாசிரியரின் தேடுதலும் ஆய்வும் நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் வெளிப்படுகின்றன.
எகிப்து, மெசபடொமியா நாகரீகங்களைக் காட்டிலும் மிகச் சிறப்பான நகர நாகரீகமாக விளங்கிய சிந்து சமவெளி நாகரீகத்தை நூலாசிரியர் நுணுக்கமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். பிரம்மாண்ட நகர அமைப்பும், மாட மாளிகைகளும் இருந்த அதே நேரத்தில், நகருக்கு வெளியே வறியவருக்கான இரு அறைக் குடில்கள் வரிசை வரிசையாகக் கட்டப்பட்டிருந்தன என்பதை ஆசிரியர் விவரிக்கும்போது, ஹரப்பா காலத்திலும் வர்க்க வேற்றுமை நிலவி வந்ததை நம்மால் உணர முடிகின்றது. சிந்து சமவெளி மக்கள் வலமிருந்து இடமாக எழுதும் முறையைக் கொண்டிருந்தனர் என்பதையும், இறந்தவர்களைப் புதைத்து கல்லறை கட்டும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதையும் ஆசிரியர் விளக்கும்போது நமக்கு பல புதிய பரிமாணங்கள் புலப்படுகின்றன.
மாட்டிறைச்சி மற்றும் பசு மாமிசம் உண்ணும் வழக்கம் இஸ்லாமியர் வருகையை ஒட்டியே இந்தியாவிற்குள் நுழைந்தது, பசு புனிதமானது, அதைக் கொல்வது இந்து மத விரோதம் என்றெல்லாம் கதைக்கும் இந்துத்துவ அமைப்புகளின் கூற்றுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்பதை வரலாற்றுச் சான்றுகள் வாயிலாக ஜா நிரூபிக்கின்றார். 'கோக்னா' எனப்படும் விருந்தாளிகளுக்கு பசு மாட்டு இறைச்சியை வழங்கி வேதகால ஆரியர்கள் கௌரவித்தனர்; ரிக்வேதம் பல்வேறு பலிச் சடங்குகளை விவரிக்கும் 428 பாடல்களைக் கொண்டது; ராஜரூய யாகம், அசுவமேத யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்களின் போது பசு மாடுகள் பலியிடப்பட்டு அவற்றின் இறைச்சி விருந்தாக வழங்கப்பட்டது என்பன போன்ற ஆதாரங்களை முன்வைக்கிறார். ஆனால், இன்றோ பசுவைப் புனிதமாக்கி, கொன்றால் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று சட்டம் இயற்றுகின்றனர் சங்பரிவாரிகள். எதிரிகளின் நிலத்தைக் கைப்பற்றி புனிதப்படுத்தும் ஆரியர்கள் ஹரப்பாவையும் அவ்வாறே வீழ்த்தியிருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். ஹரியுப்பா என்கிற இடத்தில் ஆரியர்கள் மேற்கொண்ட போரைப் பற்றி ரிக்வேதப் பாடல்கள் சில பாடுவதைச் சுட்டிக் காட்டுகின்றார். நகர்புபற சிந்து வெளி நாகரீகம் அழிந்து, புராதன கிராமப்புற வேதகால நாகரீகம் தொடங்குகிறது. ரிக்வோத கால ஆரம்பத்தில் சமூகம் தாய் வழிச் சமூகத்தின் எச்சமாகவே இருப்பதையும், சமூக ஒழுங்குமுறை எதுவும் உருவாகாத சூழல் நிலவியதையும் ஆசிரியர் விளக்குகின்றார். தாய்-மகன், தந்தை-மகள், அண்ணன்-தங்கை போன்ற பாலுறவுகள் நிலவி வந்ததை ஆசிரியர் ரிக்வேதப் பாடல்கள் மற்றும் யாமா-யாமி உரையாடல்கள் உள்ளிட்ட சான்றுகளுடன் சுட்டிக் காட்டுகிறார். ஜனா என்றழைக்கப்பட்ட இனக்குழுத் தலைவனை வழிநடத்த சபா, சமிதி என்ற அமைப்புகள் இருந்தன. அரசருக்குச் செலுத்த உபரியாக மக்களிடம் எதுவும் இருக்கவில்லை. இது போன்ற தகவல்கள் மூலம் அன்று நிலவிய தாய்வழிச் சமுதாயத்தின், புராதனப் பொதுவுடமைச் சமுதாயத்தின் தன்மையை நம்மால் உயர முடிகின்றது.
ரிக்வேத கால முடிவில் இதர மூன்று வேதங்கள் உருப்பெற்றன. (கிமு 1000-600). சபா, சமிதி அமைப்புகள் வலுவிழந்து வாரிசு முறையில் மன்னராட்சி அமைப்பு வலுப் பெற்றதையும், ரிக்வேதப் பலிச் சடங்கு முறைக்கு எதிர்ப்பு மற்றும் மாற்றாக தனிமனித ஒழுங்கு, உயர்வு, ஆன்மா, துறவு போன்றவற்றை உயர்த்திப் பிடிக்கும் உபநிஷத்துகளின் தோற்றத்தையும் தெளிவுபடுத்தும் ஆசிரியர், இவற்றை தனதாக்கிக் கொள்ளும் வகையில் வேதமதம் ஆசிரமம், பிரம்மச்சரியம், கிரகஸ்தம் மற்றும் வனப்பிரஸ்தம் ஆகிய நான்கு தளிமனித நிலைகளை முன்னிறுத்தியதையும் தெளிவுபடுத்துகிறார். இதே காலத்தில் இதே பிரச்சனைகளை முன்வைத்து பௌத்தஇ சமண மதங்கள் உருவாகி வலுப் பெற்றதையும் பதிவு செய்கின்றார்.
வணிக வளர்ச்சி, கடல் கடந்த வணிகம், அங்காடிகள், உணவு விடுதிகள் போன்றவற்றை வேத மதம் மறுத்தது; அதே நேரத்தில் பௌத்த, சமண மதங்கள் இவற்றை ஆதரித்தன. வட்டிக்குப் பணம் கொடுப்பதை வைதீக மதம் கண்டித்தது. பௌத்த சமண மதங்களோ வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்காமல் இருப்பதையும், வட்டி கட்டாமல் இருப்பதையும் கண்டித்தன. அவை அடிமைகளையும், கடன்காரர்களையும் ஏற்றுக் கொள்ள மறுத்தன. வரலாறு தோறும், மதங்கள் தோறும் பொருளாதார ஏற்றதாழ்வுகளே தீர்மானகரமான சக்திகளாக இருந்திருக்கின்றன என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.
வேத மதத்தின் வர்ண மற்றும் சாதிப் பிரிவினைகளுக்கு எதிராக பௌத்த சமண மதங்கள் வலுவான போராட்டங்களை நடத்தவில்லை என்கிற குற்றச்சாட்டை ஜா அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.
கிமு 6ம் நூற்றாண்டு முதல் 3ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் பெரிய அளவிலான அரசுகள் தோன்றியதைச் சுட்டிக்காட்டும் ஜா, சத்திரிய குலத்தைச் சாராத முதல் சூத்திர அரச வம்சமாக நந்த வம்சம் விளங்கியதையும், அதன் முதல் மன்னன் மகாபத்ம நந்தனின் தாய் ஒரு சூத்திர சாதியைச் சேர்ந்தவர் என்பதையும் குறிப்பிடுகிறார்.
நந்தர்களைத் தூக்கி எறிந்து அரியணை ஏறிய மௌரியர்களே முதல் பேரரசை உருவாக்கினர். சந்திரகுப்தரும் சாணக்கியரும் தங்களது அரசியல் சாதுர்யத்தின் காரணமாக பேரரசிற்கு வழி கோலினர். கலிங்கப் போரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டதே கொடுங்கோலன் அசோகரின் மனமாற்றத்திற்கும், பௌத்த மதமாற்றத்திற்கும் காரணம். மௌரியப் பேரரசிற்கு பெருமளவில் வரிப்பணம் வந்தபோதிலும் (விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு விவசாய வரி) மிகப் பெரிய பேரரசையும், படையையும் நிர்வகிக்கப் போதுமானதாக இல்லை. இறுதியில் அசோகரின் புத்த மதத்தழுவலும், அகிம்சையும், தர்மப் பணிகளும் கஜானாவைக் காலி செய்தன. அசோகரின் இறுதி நாட்களில் அவரிடம் ஒரு அரை மாம்பழம் மட்டுமே இருந்ததாக ஒரு பௌத்த ஜாதகக் கதை தெரிவிப்பதாக ஜா கூறுவது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
கிமு 180ல் கடைசி மௌரிய மன்னன் பிருஹத்ரதரை அவருடைய பிராமணப் படைத்தளபதி புஷ்யமித்ர சுங்கர் கொன்று ஆட்சியைக் கைப்பற்றுகிறார். அதுவே சத்தியரல்லாத முதல் பிராமண வம்ச ஆட்சி என்று அறியப்படுகிறது. நூறு வருடங்கள் நீடித்த பிராமண மன்னர்களின் ஆட்சியை வேத மதம் தன்னுடைய மீட்சிக்குப் பயன்படுத்திக் கொண்டது. 84000 பௌத்த ஸ்தூபிகள் புஷ்யமித்திரனால் அழிக்கப்பட்டன. மௌரியப் பேரரசிற்கும் அதற்குப் பின்னர் அமைக்கப்பட்ட குப்தப் பேரரசிற்கும் இடைப்பட்ட காலத்தில் (கிமு 200 முதல் கிபி 300வரை) பல்வேறு இனமன்னர்களின் ஆட்சிகள் நடைபெற்றன. கிமு முதலாம் நூற்றாண்டில் ஆண்ட பார்த்திய மன்னன் தோன்டோ பர்னசின் அரசவைக்கு புனித தாமஸ் முக்கிய விருந்தினராக வந்தார் என்று ஜா குறிப்பிடுகிறார்.
கிமு முதலாம் நூற்றாண்டிலிருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டு வரையிலான மன்னர்கள், குறிப்பாக சாதவாகனர்கள் தங்களைக் கடவுளின் அவதாரம் என அறிவித்துக் கொண்டனர். இவர்களின் காலத்தில் வர்த்தக நடவடிக்கைகள் முழு வீச்சில் துவக்கப்பட்டன. தொழில் கழகங்கள் (கில்டுகள்)  துவக்கப்பட்டன. நால் வருண முறையை சட்டப்படுத்தக் கூடிய மனுதர்மக் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டது இந்த காலத்தில்தான். உயர் வர்ணத்தவருக்குச் சேவை செய்வதற்காகவே சூத்திரர்கள் படைக்கப்பட்டுள்ளனர் என்கிற கோட்பாடு, பெண்களின் சொத்துரிமையையும் திருமண உரிமையையும் பறிக்கும் சட்டங்கள் அதில் இடம் பெற்றன. பல்வேறு புராணங்களும், மகாபாரதம் மற்றும் ராமாயணம் போன்ற இதிகாசங்களும் இந்தக் காலத்தில்தான் படைக்கப்பட்டன. சிவன், விஷ்ணு, கிருஷ்ணன் போன்ற கடவுளர்களும் இக்காலத்தில்தான் சிருஷ்டிக்கப்பட்டனர். பக்தி என்கிற கருத்தாக்கமும், பகவத் கீதையும் இக்காலத்திலேயே உருப்பெற்றன. பரத முனியின் நாட்டிய சாஸ்திரமும் இக்காலத்தைச் சேர்ந்ததே.
கிபி நான்காம் நூற்றாண்டில் நிலை பெற்றது குப்தப் பேரரசு. பள்ளிகளில் போதிக்கப்படுவது போல் குப்தர்களின் காலம் பொற்காலமல்ல  என்பதைத் தெளிவுபடுத்துகிறார், ஜா. குப்தர்களின் காலத்தில் கலை, இலக்கிய, கணித, அறிவியல் வளர்ச்சி ஒரு புதிய பரிமாணத்தை எட்டிய போதிலும், பொது சமுதாயம் சீர் கெட்டது; மனு தர்மமும், வருண வேறுபாடுகளும் தங்களது புதிய உச்சங்களை எட்டின; பாடலிபுத்திரம், அயோத்தி, மதுரா போன்ற நகரங்கள் தங்கள் பொலிவை இழந்தன. அந்நிய வர்த்தகம் வீழ்ச்சியடைந்தது. பட்டு நெசவாளர்கள் சௌராஷ்டிரத்தை விட்டு வேறு பகுதிகளுக்குப் புலம் பெயர்ந்தனர். தொழில் கில்டுகள் தொழில் அடிப்படையிலான சாதிகளாக உருப்பெற்றன. நிலத்துடன் அதில் பணியாற்றியவர்களும் மன்னரால் சிலருக்கு தானமாக அளிக்கப்பட்டதும், தானமாக அளிக்கப்பட்ட பகுதிகளில் வரி வசூல் செய்யும் உரிமை அவர்களுக்கு அளிக்கப்படடதும் நில உடமைச் சமுதாயம் உருப் பெற்று, வலுப் பெற உதவின. இத்தகைய நிகழ்வுகள் குப்தர்களின் காலம் பொற்காலம்தானா என்கிற கேள்வியை எழுப்புகின்றன.
அம்பா பாலி என்கிற பாலியல் தொழிலாளியின் வீட்டிற்கு புத்தர் விருந்தாளியாகச் சென்றார், சீனாவைச் சேர்ந்த பௌத்தப் பயணி யுவான் சுவாங்க் ஒரு துர்க்கை முன்பு தீ வைத்து பலியடப்பட இருந்தார், திடீரென வீசிய புயல் அவரைக் காப்பாற்றியது போன்ற பல சுவாரஸ்யமான வரலாற்றுத் தகவல்கள் நிறைந்த நூல். வரலாற்றியல் பொருள்முதல்வாத நோக்கில் ஒரு தேடல் கோர்வையாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ள இந்நூலை அனைவரும் அவசியம் படிக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.
(புத்தகம் பேசுது மே 2012 இதழில் வெளிவந்துள்ளது)--------------------------------------------------------------------------------------------------------------
 
----



Saturday, May 5, 2012

நரபலியிலும் சாதியம்

மதுரை அருகே வாடிப்பட்டியில் ஒரு ஐந்து வயது தலித் சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட கொடுரம் அம்பலமாகியுள்ளது . திமுகவைச் சேர்ந்த அயுப்கான் என்பவர் புதிதாக ஒரு கல்லூரி தொடங்கியிருக்கிறார்.(அவருடன் மதுரைச் சேர்ந்த வேறு சிலரும் பங்குதாரர்களாக இருப்பதாக ஜூனியர் விகடன் 9.5.12 இதழ் செய்தி கூறுகிறது).அந்த வியாபாரம் லாபகரமாக நடக்க என்ன செய்யவேண்டும் என்று ஒரு சோதிடரிடம் ஆலோசனை கேட்கிறார். அவர் ஒரு சிறுமியை நரபலி கொடுக்க வேண்டும என்கிறார். எந்த சாமிக்கோ அந்தச் சிறுமியின் ரத்ததால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்கிறார். (சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது அதில் ஒரு துளிகூட ரத்தம் இருக்கவில்லையாம்!இதில் கைதேர்ந்தவர்கள்தான் இக்கொலையைச் செய்திருக்க வேண்டும் என்கிறது காவல்துறை. அவர்கள் தற்போது கைதும் செய்யப்பட்டுவிட்டார்கள்.ஒரு மாதத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்ட மகாமுனி, அவரது மகன் மலபார் கருப்பு இருவரில் ஒருவர் 'உடல்நலமின்றியும்', மற்றொருவர்  தற்கொலை செய்து கொண்டும் செத்துப் போயுள்ளார்கள் )அவர் தலித் சிறுமி என்று குறிபாகச் சொன்னாரா என்று தெரியவில்லை. (தீட்டுப்பட்ட சாதியின் ரத்தம் சாமிக்கு ஒத்துக் கொள்ளுமா என்று தெரியவில்லை.). நிற்க.  சோதிடரின் 'சக்தி' பற்றி முஸ்லீமான அயுப்கானுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும். பலி கேட்கும் சாமியின் 'சக்தி' பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். அதாவது அது கேட்பதைக் கொடுத்தால் தொழில் நன்றாக நடக்கும் என்கிற சக்தியை பிறரது அனுபவத்திலிருந்து (?) தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.   அது இந்துச் சாமியாக இருந்தாலும் முஸ்லீமான அயுப்கான் (என்ன ஒரு மத நல்லிணக்கம் ! இதை அவர் தன்னுடைய மதச்சார்பற்ற கட்சியிலிருந்து பெற்றிருப்பாரோ? ) அதை வழிபடத் தயாராக இருந்திருக்கிறார். அது கேட்பதைக் கொடுக்கத் தயாராக இருந்திருக்கிறார். (பணத்திற்கு சாதியும் இல்லை, மதமும் இல்லை) தொழில் நன்றாக நடக்க வேண்டுமே?  மொத்ததில்  பணம் சம்பாதிக்கும் ஆசை என்ன கொடூரங்களையெல்லாம் செய்ய வைக்கிறது?! இவர்கள் கல்விக் கூடங்கள் நடத்தி, மணவர்கள் அதில் படித்து ........சமுதாயம் உருப்பட்டுவிடும். யாரைப் பலி கொடுத்தாலும் அதை யாரும் ஏற்கப் போவதில்லை. ஆனால், பலி கொடுக்க இவர்கள் தலித் சிறுமியைத் தேர்வு செய்திருப்பதற்கு சாதியம் தவிர வேறு காரணம் இருக்க முடியாது என்பது என் அனுமானம். அவர்கள் கேள்வி கேட்டால் அடித்து ஒடுக்கிவிடலாம் என்று நினைத்திருக்கலாம். வேறு சாதி இந்துச் சிறுமியாக இருந்தால் தப்பிக்க முடியாது, விளைவுகள் கடுமையாக இருக்கும்  என்று பயந்திருக்கலாம்.அல்லது நம் சாதிகளைச் சேர்ந்த சிறுமியை ஏன் பலி கொடுக்க வேண்டும் என்று கூட நினைத்திருக்கலாம். மனிதத்தன்மையற்ற அரக்கர்கள்!  வரலாற்றில் இது போல் பலி கொடுக்க வேண்டும் என்று வந்தால் தாழ்த்தப்பட்டவர்களைப் பலி கொடுக்கும் வழ்க்கம் இருந்த்தாகக் கூறப்படுகிறது. என்ன்ன கொடுமை அய்யா இது? ஆவேசத்தை அடக்க முடியவில்லை. மூட நம்பிக்கை ஒழிப்பிற்கும் சாதி ஒழிப்பிற்கும் இவர்களைப் பலி கொடுக்க வேண்டும் போல் ஆத்திரம் வருகிறது.

Monday, April 9, 2012

அடையாள அரசியலின் உள் முரண்பாடுகள்-4


 கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக தமிழகத்தில் நடந்த போராட்டம் மெல்ல வடிந்து வறண்டு கொண்டிருக்கையில் தென்னிந்தியாவில் உள்ள அணுஉலைகளால் தங்களுக்கு ஆபத்து என்று சர்வதேச அணுசக்தி முகமையிடம் புகார் தெரிவிக்கப் போவதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. உலைகளில் ஏதேனும் ஒன்றில் விபத்து ஏற்பட்டால் கூட கதிர் வீச்சு பல நூறு மைல்களுக்கு அப்பாலும் பாதிப்பை உண்டாக்கும் என்கிற அடிப்படையில், இந்தியாவின் கரையிலிருந்து வெறும் இரண்டு டஜன் மைல்கள் தொலைவில் இருக்கும் தங்களது நாடும் பாதிப்பு எல்லைக்குள் வருகின்றது என்பது இலங்கையின் வாதம். இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமைகள் மீறல் நடந்தது குறித்து இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததற்கு தன்னுடைய கண்டனத்தை இலங்கை தெரிவிக்கிறது அல்லது பழிக்குப் பழி வாங்குகிறது என்று இலங்கையின் இந்தச் செயல் குறித்து ஒரு கருத்து கூறப்படுகிறது. இருக்கலாம். ஏனெனில், இத்தனை காலம் இல்லாமல், தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடந்த பல மாதங்கள் சும்மா இருந்து விட்டு, இந்தத் தீர்மானத்திற்குப் பின்னர் இலங்கை இப்படிச் சொல்வது அந்தக் கருத்திற்கு வலு சேர்க்கிறது. இருக்கட்டும். எப்படியாயினும், அணுஉலை எதிர்ப்பாளர்களில்  கூறிய பல்வேறு காரணங்களில் ஒன்றை இலங்கையும் கூறுகின்றது. விபத்து பாதிப்பு. ஆனால், கூடங்குளம் எதிர்ப்பாளர்களில்  சிலர் அதை மட்டும் முன்வைக்கவில்லை. அல்லது அத்துடன் வேறு சில கருத்துக்களையும் முன்வைத்தார்கள். இங்கு அணுஉலை அமைப்பதே 'தமிழினத்திற்கு' எதிரான செயல் என்றார்கள். இந்த அணுஉலையை ஏன் தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்? குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அருகிலோ, மன்மோகன் சிங் வீட்டிற்கு அருகிலோ, அல்லது வேறு எங்காவது அமைத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். விபத்து ஏற்பட்டால் தமிழன் மட்டும்தான் பாதிக்கப்படுவான், ஆனால் இந்த மின்சாரத்தை வேறு மாநிலங்களும் பங்கு போட்டுக் கொள்ளும் என்றார்கள். ஆபத்து தமிழனுக்கு, மின்சாரம் மற்றவர்களுக்கா என்றார்கள். தமிழர்கள் என்ன இழிச்சவாயர்களா என்றார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் இலங்கைக்குத்தான் போகப் போகிறது, அதற்குத் தமிழன் பலியாக வேண்டுமா என்று கூடச் சிலர் பேசினார்கள். (இப்போது இலங்கையே தென்னிந்திய அணுஉலைகள் அனைத்தையும் எதிர்ப்பதைப் பார்த்தால் அது தவறான செய்தி என்று தெரிகின்றது). அணுஉலையை ஆதரிப்பவர்கள் 'தமிழின' விரோதிகள் என்றார்கள். தனக்கு எந்த அரசியல் சார்பும் இல்லை என்று சொல்லிக் கொள்ளும் (அதுவே ஒரு அரசியல்தான்) உலை எதிர்ப்புப் போராட்டக்காரர் உதயகுமாரும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றார். தன்னைத் 'தமிழினத்தின்' நண்பன் என்று காட்டிக் கொள்ள அவர் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தார். தமிழினத்தின் பெயரால் தன்னுடைய போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் மிகச் சாதுர்யமான ஒரு அரசியல் நடவடிக்கை அது. அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்த கஙட்சிகளில் சிலவும், எதிர்த்த இலங்கையும் இப்போது அணுஉலையை எதிர்ப்பு என்கிற நிலையில் ஒன்றாக இருக்கின்றன. இப்போது நமது கேள்வி என்னவென்றால், உலையை எதிர்ப்பவர்கள் தமிழினத்தின் நண்பர்கள் என்றால், இப்போது ராஜபட்சேவும் தமிழினத்தின் நண்பராகிவிட்டார் என்றுதானே பொருள்? ராஜபட்சே தலைமையிலான இலங்கை அரசாங்க எதிர்ப்பு, இந்திய அரசாங்க எதிர்ப்பு, தமிழக அரசாங்க எதிர்ப்பு, அணுஉலை எதிர்ப்பு என எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து தமிழ் அடையாள/இனவாத அரசியலை முன்வைத்தவர்கள் இப்போது ஒன்று ராஜபட்சே எதிர்ப்பைக் கைவிட வேண்டும். அல்லது அணுஉலை எதிர்ப்பைக் கைவிட வேண்டும். ராஜபட்சே எதையெல்லாம் எதிர்க்கின்றாரோ அதையெல்லாம் ஆதரிக்க வேண்டும் இல்லையா? இல்லை என்றால் ஒன்று ராஜபட்சேவை ஆதரிக்க வேண்டும். அல்லது அணுஉலையை ஆதரிக்க வேண்டும். தர்க்கப்படி அதுதானே நியாயம்? சாதி, மத, மொழி, தேச அடிப்படையிலான அடையாள அரசியல் எல்லா விஷயங்களையும் தட்டடையாகவே பார்க்கும். தட்டையாக மட்டுமே பார்க்க முடியும். தமிழன்-தமிழன் அல்லாதவன், இந்து-இந்து அல்லாதவன் இப்படியாக மட்டுமே பார்க்கும். தமிழர்களுக்கு எதிரானது என்று அணுஉலையை எதிர்ப்பவர்களால் தமிழ் இனவிரோத 'சிங்கள இனவெறியன்' என்று அழைக்கப்படுகின்ற ராஜபட்சேவும் அணுஉலையை எதிர்த்தாரென்றால் அவரை ஆதரிப்பார்களா, எதிர்ப்பார்களா? இல்லை, அப்படிப் பார்க்கக் கூடாது; நாங்களும் எதிர்க்கிறோம்; அவரும் எதிர்க்கிறார்; அதற்காக நாங்களும் அவரும் ஒன்று சேர வேண்டும் என அர்த்தமில்லை என்று பதில் சொல்லக் கூடும். ஆனால், அவர்களது செயல் 'சிங்கள இனவெறியன்' ராஜபட்சேவிற்கு மறைமுகமாக உதவுகின்ற செயல்தான். இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டின் அடிப்படையிலான அமெரிக்க தீர்மானத்தை குற்றம் சாட்டப்பட்டுள்ள தேசம் என்கிற அடிப்படையிலிருந்து எதிர்க்கும் இலங்கை, அந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தற்காக இப்படிப் பழி வாங்குகின்றது என்றாலும், அதில் இலங்கைக்கு இவர்கள் துணை போவதாகத்தான் உலை எதிர்ப்பு என்பது இருக்கும். இல்லை, அணுஉலை எதிர்ப்புதான் எங்களுக்குப் பிரதானம் என்றால், அதற்கு தமிழ்ச் சாயம் பூசுவதைக் கைவிட வேண்டும். உலை எதிர்ப்பாளர்கள் அனைவரையும் நாங்கள் ஆதரிக்கின்றோம் என்கிற நிலை எடுக்க வேண்டியிருக்கும். இதன் பொருள், அடையாள அரசியலைக் கைவிட வேண்டியிருக்கும் என்பதாகும். ஒரு குறிப்பிட்ட பிரச்சனையில் அனைவரையும் இணைத்துக் கொண்டு போராடுவோம், எந்தப் பேதமும் பார்க்க மாட்டோம் என்கிற நிலை எடுக்க வேண்டியிருக்கும். அணுமின்சாரமும் தற்போது தேவையாக இருக்கிறது என்கிற நிலையில் அதை ஆதரிப்பவர்களில் ஒருவன் நான் என்பதைத் தெளிவுபடுத்திட விரும்புகிறேன். ஆனால், சில நியாயமான அச்சங்களின் அடிப்படையில் (ஆனால் போக்கப்படக் கூடிய அச்சங்கள்தான், சமாளிக்கப்படக் கூடிய அச்சங்கள்தான்) மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது என்பது வேறு. அந்த அச்சத்தை பிற மொழி பேசும் மக்களுக்கு எதிராகத் திருப்பிவிடுவது என்பது வேறு. பிந்தையதை எந்தச் சூழலிலும் ஏற்க முடியாது என்பதற்கு அடையாள அரசியலின் எண்ணற்ற முரண்பாடுகளே போதுமான காரணங்களாக இருக்கின்றன. பொதுவாக எதிரெதிர் இனவாதம், மதவாதம், மொழிவாதம், சாதி வாதம் ஆகியவை பரஸ்பரம் ஒன்றுக் கொன்று உதவிக் கொண்டே இருக்கின்றன, இருக்கும் என்பது இந்தப் பிரச்சனையில் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. -------------------------------------------------------10.4.12



Saturday, March 24, 2012

மனித உரிமைகள், அமெரிக்கா, இலங்கை



அசோகன் முத்துசாமி

இலங்கைக்கு எதிரான அமெரிக்கா ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் தாக்கல் செய்துள்ள நகல் தீர்மானத்தின் சுருக்கம்:
'ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், மனித உரிமைகள் குறித்த சர்வதேச ஒப்பந்தங்கள், மற்றும் சம்பந்தப்பட்ட இதர ஆவணங்கள் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படியும்,
'பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் சர்வதேசச் சட்டங்கள், குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள், அகதி மற்றும் மனிதாபிமான சட்டத்திற்கு (எது பொருந்துமோ) உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியும்,
'இலங்கையின் லெசன்ஸ் லேர்ன்ட் அன்ட் ரிகான்சிலேஷன் கமிஷனின் (கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம்-எல்எல்ஆர்சி) விசாரணை முடிவுகள் மற்றும் பரிந்துரைகள், ஆகியவற்றை கவனத்தில் கொண்டும், மற்றும் இலங்கையின் தேசிய இணக்கப் போக்கிற்கு அது பங்களிக்கக் கூடிய சாத்தியத்தையும் ஏற்றுக் கொண்டும்,
'நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் ஆட்களைக் காணமல் போகச் செய்வது போன்ற பரவலான குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமான முறையில் விசாரிக்க வேண்டிய தேவை, வட இலங்கையை ராணுவ நீக்கம் செய்ய வேண்டும், நிலத் தகராறுகளைத் தீர்ப்பதற்கு பாரபட்சமற்ற நிர்வாக ஏற்பாட்டைச் செயல்படுத்த வேண்டும், கைது செய்து சிறையிலடைக்கும் கொள்கையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும், முன்னர் சுயேச்சையாக இயங்கிய சிவில் அமைப்புகளைப் பலப்படுத்த வேண்டும், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் ஒரு அரசியல் தீர்வை எட்ட வேண்டும், அனைவருக்கும் கருத்துச் சுதந்திரத்தை வளர்க்கவும், பாதுகாக்கவும் வேண்டும், மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான சீர்திருத்தங்களை வகுக்க வேண்டும் போன்றவை உள்ளிட்ட அந்த அறிக்கையில் உள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை வரவேற்றும்,
'சர்வதேசச் சட்டங்கள் மீறப்பட்டது போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகள் விஷயத்தில் எல்எல்ஆர்சி அறிக்கை போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை, மற்றும் அது தொடர்பான தனது சட்டபூர்வமான கடப்பாடுகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை மற்றும் அத்தகைய விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது சுயேச்சையான, நம்பகமான விசாரணையை நடத்தி, அத்தகைய விதி மீறல்களுக்குக் காரணமானவர்களைத் தண்டிப்போம் என்று தான் அளித்த உறுதி மொழியை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பது குறித்த கவலையைத் தெரிவித்துக் கொண்டு,
'1. அறிக்கையில் உள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நிறைவேற்றுமாறும், அத்துடன் அது தொடர்பான சட்டப்படியான கடப்பாடுகளை பூர்த்தி செய்ய உடனடியாக நடிவடிக்கைகள் எடுத்திடுமாறும், சர்வதேசச் சட்டங்கள் மீறப்பட்டன என்கிற கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமான, சுயேச்சையான விசாரணையை நடத்தி அத்தகைய விதி மீறல்களுக்குக் காரணமானவர்களைத் தண்டிப்போம் என்று தான் அளித்த உறுதி மொழியை நிறைவேற்றிட உடனடியாக நடவடிக்கை எடுத்திடுமாறும் இலங்கை அரசாங்கத்தை அறைகூவி அழைக்கின்றது.
2. எல்எல்ஆர்சி பரிந்துரைகளின் பேரில் இது வரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் மற்றும் சர்வதேசச் சட்டங்கள் மீறப்பட்ட குற்றச்சாட்டுகள் விஷயத்தில் என்ன செய்ய இருக்கிறது ஆகியவை பற்றிய ஒரு விரிவான செயல்திட்டத்தை மனித உரிமைகள் கவுன்சிலின் 20 வது அமர்வில் சமர்ப்பிக்குமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றது.
3. (ஐநாவின்) மனித உரிமைகள் தூதர், மற்றிதர சிறப்பு அதிகாரம் படைத்தவர்கள் ஆகியோர் அந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் இலங்கை அரசுக்கு ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப உதவி அளிக்குமாறும், அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமாறும் ஊக்கப்படுத்துகின்றது.' (ஆதாரம்: டிரான்ஸ்கரன்ட்ஸ் இணையதளம்).
இந்த தீர்மானம் அமெரிக்காவின் முன்முயற்சியால் அல்லது திட்டத்தால் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் முன்மொழிந்திருக்கின்றன. அமெரிக்கா, பிரிட்டன் தவிர நார்வே இதில் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதற்கு இலங்கை உள்நாட்டுப் பிரச்சனையில் அதற்குள்ள நீண்ட கால தொர்பு ஒரு காரணமாக இருக்கலாம். இலங்கையில் அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானம் பேசுவதற்கு அது பல முறைகள் முயற்சித்திருக்கின்றது. போர் நிறுத்த ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கும் காரணமாக இருந்திருக்கின்றது. நிற்க.
இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக, அதிமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கோரின. பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்ட அல்லது ஏற்றுக் கொள்ளாத 'நக்சலைட்' குழுக்கள் சிலவும் கோரின. தெர்தல்களில் ஈடுபடாத சில சமூக இயக்கங்களும் இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரின. (விநோதம் என்னவென்றால் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வந்த, அணுசக்தியை எதிர்ப்பதே தங்களது குறிக்கோள் என்று சொல்லி வந்த உதயகுமார் தலைமையிலான 'அரசியல் சார்பற்ற' கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக் குழுவும் இந்த அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தது).
விடுதலைப் புலி ஆதரவுக் குழுக்களில் ஒரு பகுதி இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்றபோது, மற்றொரு பகுதி இலங்கையில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்த போதெல்லாம் சும்மா இருந்து விட்டு இப்போது அமெரிக்கா திடீரென்று இப்படியொரு தீர்மானம் கொண்டு வந்திருப்பது ஏன் என்கிற அடிப்படையில் மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டனர். பொதுவாக இலங்கைத் தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டவர்களிலும் இப்படி இரண்டு விதமான கருத்துக்கள் இருந்தன. இருக்கின்றன.
இவை தவிர இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் (சிபிஐ, சிபிஎம்) அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், இந்த தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் உள்பட இலங்கைத் தமிழர் புனர்வாழ்வு தொடர்பான வேறு பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன; அவற்றை நிறைவேற்ற இந்தியா இலங்கை மீது ராஜீய ரீதியாக நிர்ப்பந்திக்க வேண்டும் என்று கேருகின்றன. அதற்கான போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன.
கடந்த 22ம் தேதி நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தின் மூன்றாவதாகக் கொடுக்கப்பட்டுள்ள முக்கியமான ஷரத்தில் இந்தியா ஒரு முக்கியமான மாற்றத்தைச் செய்துள்ளது. இலங்கை அரசின் அனுமதியுடன்தான் சர்வதேச அமைப்புகளுடைய பிரதிநிதிகளின் ஆலோசனைகள் மற்றும் உதவிகள் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் அது.
இனி நமது கருத்துக்கள், சந்தேகங்கள், கேள்விகள் ஆகியவற்றைப் பதிவு செய்யலாம். இதே கருத்துக்கள் வேறு பலருக்கும் இருக்கலாம்.
1. இலங்கைக்கு எதிராக அமெரிக்காவும், பிரிட்டனும் தீர்மானம் கொண்டு வரப் போகின்றது என்கிற செய்தி வெளியில் வந்த அதே நேரத்தில் பிரிட்டனின் சேனல் 4 தொலைக் காட்சி இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், கொடூரங்கள் பற்றிய புதிய தகவல்களும் சான்றுகளும் அடங்கிய காணொளி ஒன்றை ஒளிபரப்பப் போவதாகச் செய்தி வெளிவந்தது. ஒளிபரப்பப்பட்டது. இது நிச்சயமாக யதேச்சையாக நடந்திருக்க முடியாது.
2. ஏனெனில், மனித உரிமைகள் பெயரால் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் பல நாடுகளின் உள்விவகாரங்களில் வேறு உள்நோக்கங்களுடன் தலையிட்டிருக்கின்றன. யுகோஸ்லாவியா, இராக், ஆப்கானிஸ்தான், லிபியா ஆகியவை சில உதாரணங்கள். மேலும், பொதுவாக கம்யூனிஸ்ட் நாடுகளுக்கு எதிராக எப்போதுமே அமெரிக்கா மனித உர்மைகள் மீறல் எனும் பழியைச் சுமத்திக் கொண்டேதான் இருக்கின்றது. சுதந்திர வர்த்தகத்திற்கு (சுதந்தரமான சுரண்டலுக்கு?) கம்யூனிஸ்ட் சமுதாயங்களில் வழியில்லை என்கிற அடிப்படையில், தனிநபர் சுதந்திரம் இல்லை என்று ஓயாமல் பிரச்சாரம் செய்து கொண்டேதான் இருக்கின்றது.
இதன்றி, இப்போது சிரியாவை ஆக்கிரமிக்கும் உள்நோக்கத்துடன் அல்லது அங்கு தன்னுடைய கைப்பாவை அரசாங்கத்தை பதவியில் அமர்த்தும் திட்டத்துடன் அந்த நாட்டிற்கு எதிராகவும் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.
இவற்றையெல்லாம் செய்வதற்கு முன்னர் பொது புத்தியை தன்னுடைய திட்டத்திற்கு ஏற்றவாறு கட்டமைப்பதற்கு அனைத்து வகையான பிரச்சார உத்திகளையும் ஏகாதிபத்திய அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் மேற்கொள்வர். எனவே, இலங்கை விஷயத்திலும் அதே உத்தியை அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள் என்றால் அது பிழையில்லை. எனவே, தீர்மானமும் சேனல் 4 காணொளியும் ஒரே நேரத்தில் களத்திற்கு வருவது தற்செயலானதல்ல.
இதன் பொருள் சேனல் 4 கூறும் பதைக்க வைக்கும் செய்திகள் உண்மையல்ல என்பதல்ல. உண்மையான செய்திகளையே அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்; சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றால் வெளியே சொல்வார்கள்; இல்லை என்றால் மறைத்து விடுவார்கள்.
3. ஒரு பலம் பொருந்திய மேற்கு ஐரோப்பிய சோஷலிச நாடாக இருந்த யூகோஸ்லாவியாவில் அமெரிக்கா இதுபோல் தலையிட்டது. தலையிட்டு அந்த நாட்டை சின்னாபின்னப்படுத்தியது; பல துண்டுகளாகச் சிதறடித்தது; பல லட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமான இனமோதல்களைத் தூண்டிவிட்டு, பின்னர் அதையே சாக்காக வைத்து படுமோசமான யுத்தத்தை அந்த நாட்டின் மீது நடத்தியது. தன்னுடைய தாக்குதலை நியாயப்படுத்த அமெரிக்காவும், அதன் நேட்டோ கூட்டாளிகளும் பல பொய்களை கட்டவிழ்த்து விட்டனர். இது குறித்து 'ஐஏசிஇஎன்டிஇஆர்.ஆர்க்' என்கிற இணையதளம் கேள்வி பதில் வடிவில் அந்தப் பொய்களை அம்பலப்படுத்தியுள்ளது. அவற்றில் சில:
'கட்டுக்கதை அ. இந்த மோதலில் யூகோஸ்லாவியாவே ஆக்கிரமிக்கும் நாடு. அதன் அதிபர் மிலோசெவிச் ஒரு புதிய ஹிட்லர்.
உண்மை: யூகோஸ்லாவிய ராணுவ வீரர்கள், போர் விமானங்கள் அல்லது போர்க் கப்பல்கள் எதுவும் மற்றொரு நாட்டை தாக்கவில்லை. கொசோவாவில் நடக்கும் சண்டை ஒரு உள்நாட்டுப் பிரச்சனை. யூகோஸ்லாவியா 1.1  கோடி மக்களைக் கொண்ட ஒரு வளர்ந்து வரும் சிறுநாடு. உலகின் மிகப் பெரும் ராணுவ சக்திகள் உள்பட மொத்தம் 50 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட 19 நாடுகள் அதைத் தாக்குகின்றன. வளைகுடாப் போரின் போது (1991) இராக்கின் சதாம் உசேனை சாத்தான் போல் சித்தரித்தது போல் மிலோசெவிச்சும் ஒரு சாத்தான் போல் சித்தரிக்கப்படுகிறார். 'விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு மிலோசெவிச்சைச் சாத்தான் போல் சித்தரிப்பது அவசியம்' என்று ஒரு அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒப்புக் கொண்டார். (சான் பிரான்சிஸ்கோ கிரானிக்கல், மார்ச் 30, 1999).
கட்டுக்கதை ஆ: இனப்படுகொலைகள் (அல்லது இனத் தூய்மைப்படுத்துதல்), மனிதத் துன்பம் ஆகியவற்றால் கிளின்டன், ஆல்பிரைட் மற்றும் பென்டகன் தளபதிகள் ஆகியோர் செயல்படத் தூண்டப்பட்டார்கள்.
உண்மை: பிரிவினைவாத இயக்கங்களை ஆதரித்தும், அவற்றுக்கு ஆயுதங்கள் வழங்கியும் 1991-2ல் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் நேட்டோ நாடுகள் யூகோஸ்லாவியாவை துண்டாடுவதில் மிக முக்கியமான பாத்திரம் வகித்தன. கொசோவாவிற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என்று 1980களில் கோரியது சர்வதேச நிதியம்தான் (ஐஎம்எப்). இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 45 ஆண்டுகளாக யூகோஸ்லாவியாவில் பல்வேறு தேசிய இனங்கள் ஒன்றாகவும், அமைதியாகவும் தான் வாழ்ந்து வந்தன. யூகோஸ்லாவியாப் பிரிவினையைத் தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போர்களில் அனைத்து தரப்புகளிலும் பெரும் ரத்தக்களறியும், மனித உரிமை மீறல்களும் நடந்தன. 1995ம் ஆண்டு அமெரிக்காவால் பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கப்பட்ட குரோஷிய ராணுவத்தால் ஆறு லட்சம் செர்பியர்கள் முன்னாள் யூகோஸ்லாவியக் குடியரசான குரோஷியாவின் கிராஜினா பிராந்தியத்திலிருந்து பலவந்தமாக அகற்றப்பட்டது தனிப் பெரும் இனத்தூய்மைப்படுத்தும் செயலாகும். கொசோவாவில் மீள் குடியமர்த்தப்பட்ட 55,000க்கும் மேற்ப்பட்ட இந்த செர்பியர்கள் நேட்டோ குண்டு வீச்சுக்களாலும், கொசோவாவில் நடந்த உள்நாட்டுச் சண்டையாலும் அகதிகளான லட்சக்கணக்கானோரில் அடங்குவர். (ஜீலியா டாப்ட், அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர், சி-ஸ்பான், மார்ச் 29, 1999). மக்கள் தங்களது தாய் மண்ணிலிருந்து வெளியேற்றப்படுவது குறித்த அமெரிக்காவின் அக்கறை அதற்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்கிற விருப்பு வெறுப்பு சார்ந்ததாகும். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அமெரிக்கா, கனடா ஆகிய இரு நேட்டோ சக்திகளுக்காக கிட்டத்தட்ட வட அமெரிக்கக் கண்டம் முழுவதும் பூர்வகுடிகள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.  துருக்கியிலிருந்து குர்த் இன மக்களும், மற்றும் பாலஸ்தீனம், கிழக்கு தைமூர், குவாதமாலா ஆகிய நாடுகளின் உள்நாட்டு மக்கள் வெளியேற்றப்பட்டதை அமெரிக்க ஆயுதத்தாலும் பணத்தாலும் ஆதரித்தது அமெரிக்கக் கொள்கை.
கட்டுக்கதை இ: அமெரிக்கச் செய்தி அறிக்கைகள் சமநிலையானவையாகவும் பாரபட்சமற்றவையாகவும் இருக்கின்றன. நமக்கு உண்மைச் செய்திகளைக் கொடுக்கின்றன.
உண்மை: நாம் இன்று காண்பது என்னவென்றால் உண்மைகள் மிகப் பெருமளவு திரிக்கப்படுவதைத்தான். ஊடகங்கள் பெரும் வர்த்தக நலன்களின் ஆதிக்கத்தில் உள்ளன; அவை பென்டகனின் பிரச்சார இயந்திரமாகச் செயல்படுகின்றன. அரசியல் காரணங்களுக்காக ஒரே ஒரு குழு அனுபவிக்கும் துன்பங்கள் மட்டும், கொசோவாவை விட்டு வெளியேறும் அகதிகளில் துன்பங்கள் மட்டும் காட்டப்படுகின்றன; நேட்டோ குண்டு வீச்சுக்களால் பாதிக்கப்பட்ட இதர யூகோஸ்லாவியர்கள் கிட்டத்தட்ட அலட்சியப்படுத்தப்பட்டனர். தி நியூயார்க் டைம்ஸ், சிஎன்என், ஏபிசி, சிபிஎஸ், என்பிசி, தி கிரோனிக்கல் எக்சாமினர் மற்றும் இதர ஊடகங்கள், மிகப் பெருமளவு குண்டுகள் வீசப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில், யூகோஸ்லாவியச் சம்பவங்கள் பற்றி ஒரு பக்கச் சார்பான கருத்துக்களையேக் கொடுத்தன. நேட்டோ போர் விமானங்களுக்கு இயந்திரங்களை விநியோகிக்கும் அமெரிக்காவின் பெரும் ராணுவ ஒப்பந்த நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் எலக்டிரிக்கிற்குச் சொந்தமானது என்பிசி தொலைக்காட்சி; எம்எஸ்/என்பிசியின் பங்குதாரர்.'
'கட்டுக்கதை ஈ: அமெரிக்கா மற்றும் நேட்டோவின் குறிக்கோள் கொசோவாவில் பெரும்பான்மையாக இருக்கும் அல்பானிய முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுதான்.
உண்மை: அமெரிக்காவின் கொள்கைகள் மற்றும் தடைகள் ஈராக்கில் தினசரி பெரும்பாலும் 300 முஸ்லிம்களைக் கொன்று கொண்டிருக்கின்ற (அவர்களில் பாதி பேர் ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகள்) அதே வேளையில் யூகோஸ்லாவியாவில் உள்ள முஸ்லிம் மக்களைப் பாதுகாப்பதாக அமெரிக்க அதிகாரிகள் நடிக்கிறார்கள். பென்டகன் ஒன்றும் மனிதாபிமான நிவாரண அமைப்பும் அல்ல; பெரும் நிறுவனங்மளுக்குச் 'சொந்தமான' அமெரிக்க அரசியல்வாதிகளும் உண்மையிலேயே எந்த மக்களைப் பற்றியும் கவலைப்படுவதில்லை-அல்பானியர்கள், செர்பியர்கள், குர்துகள், ஈராக்கியர்கள் அல்லது இந்த நாட்டின் ஏழை உழைக்கும் மக்கள் என எவரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. இந்த யுத்தம் யூகோஸ்லாவியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த மக்களைக் கொன்று கொண்டிருக்கின்றது. அவர்களின் மண்ணை கதிரியிக்கத் தன்மை கொண்ட செறிவிழந்த யுரேனியம் ஆயுதங்களைக் கொண்டு அவர்களது மண்ணை விஷமாக்கிக் கொண்டிருக்கின்றது.'
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் என்கிற பெயரில் அமெரிக்காவைத் தலையிட அனுமதித்தால் அது தமிழர்களைப் பாதுகாக்கும் அல்லது நீதி கிடைக்க வழி செய்யும் என்பது மூட நம்பிக்கையே என்பதற்கு இந்த மேற்கோள்கள் உதாரணங்களாகும்.
யூகோஸ்லாவியா குறித்த செய்திகளுக்கு முடிவு கிடையாது. அவ்வளவு கொடூரமும், வஞ்சகமும், துயரமும் நிறைந்தவை அவை. பல்வேறு தேசிய இனங்கள் ஒன்றாக வாழ்ந்த அந்த நாட்டில் இன மோதல்களைத் து£ண்டிவிட்டு, மனித உரிமை மீறல்கள் என்கிற பெயரில் தலையிட்டு, பல லட்சக்கணக்கான உயிர்களைப் பலியிட்டு அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தங்களது வர்த்தக மற்றும் அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக் கொண்டன. மேற்கு ஐரோப்பாவிற்கும் எண்ணை வளம் மிக்க மத்திய கிழக்கு மற்றும் காஸ்பியன் கடல் பகுதிகளுக்கும் இடையிலான பாதையாக யூகோஸ்லாவியா இருந்தது.
மேலும், இலங்கை பூகோள ரீதியாக ராணுவ கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் இருப்பதால் அமெரிக்காவின் கை நீண்ட நாட்களாக பரபரத்துக் கொண்டிருந்தது. 4. லிபியாவிற்கு எதிராகவும் மனித உரிமைகளின் பெயரால்தான் அமெரிக்கா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தின் மூன்றாவது பத்தி என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.
'ஐக்கிய நாடுகளின் ஏழாவது அத்தியாயத்தின்படி,
'சர்வதேச மனிதாபிமானச் சட்டம், மனித உரிமைகள் மற்றும் அகதிகள் சட்டம் ஆகியவை உள்ளிட்ட சர்வதேசச் சட்டங்களின் கீழ் தங்களுடைய கடப்பாடுகளுக்கு ஏற்ப லிபிய அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும், பொது மக்களைப் பாதுகாக்கவும், அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மனிதாபிமான உதவிகள் தடையின்றி அதிவிரைவாக மக்களுக்குச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இத்தீர்மானம் கோருகின்றது.' (ஐநா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானம், தி கார்டியன்).
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திலும் இதே மாதிரி வாசகங்கள் இருப்பதைக் கவனியுங்கள். சிரியாவிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திலும் இதே மாதிரியான வாசகங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இந்த தீர்மானத்தின் அடிப்படையில் அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் லிபியாவின் மீது குண்டு மழை பொழிந்தன. கடாபியின் ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்ட படைகளுக்கு ஆயுதங்கள் வழங்கின. ஆயிரக்கணக்கான அமெரிக்க, நேட்டோ போர் விமானங்கள் மக்கள் மீது குண்டு மழை பொழிவது எப்படி மனித உரிமைகளைக் காக்கும் செயல் என்று தெரியவில்லை. அறிஞர் அய்ஜாஸ் அகமது 'லிபியா மீண்டும் காலனியாக்கப்பட்டது' என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அமெரிக்காவை 'மனித உரிமைகள் ஏகாதிபத்தியம்' என்று வர்ணிக்கின்றார்.
'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயராலும், மனித உரிமைகளின் பெயராலும் ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்கப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம், அணுஆயுதப் பரவலைத் தடுப்பது மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் பெயரால் இராக் மீது படையெடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட மனித உரிமைகளின் பெயரால் மட்டுமே ஆக்கிரமிக்கப்பட்ட முதல் நாடு லிபியாதான்.
'பெங்காஷியில் ஒரு லட்சம் பேர் படுகொலை செய்யப்படவிருக்கிறார்கள் என்ற ஒபாமாவின் கூற்றுக்கு நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் தென்படவில்லை; போரின் ஆரம்ப கட்டங்களில் கடாபியின் படைகளால் கைப்பற்றப்பட்ட கலகக்காரர்களின் நகரங்களில் படுகொலைகள் எதுவும் நடக்கவும் இல்லை. அதற்கு மாறாக, நேட்டோவின் கூலிப்படைகளால் படுகொலைகள் நடத்தப்பட்டிருக்கின்றன என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன. லிபியாவில் குடியிருந்த கறுப்பு ஆப்பிரிக்கர்களில் சுமார் மூன்று லட்சம் பேர் லிபியாவை விட்டு வெளியேற்றப்பட்டனர் என்று நைஜர், மாலி மற்றும் சாட் போன்ற அண்டை நாடுகள் தெரிவிக்கின்றன; நேட்டோவின் உள்ளூர் கூட்டாளிகளும், வாடிக்கையாளர்களும் நேட்டோவின் 40000க்கும் மேற்பட்ட குண்டு வீச்சுகளின் நாசகரமான பாதுகாப்பில் திரிபோலி நோக்கி முன்னேறியபோது இது நிகழ்ந்தது. அண்டை நாடுகளைச் சேர்ந்த இந்த அகதிகளையும், தொழிலாளர்களையும் தன்னுடைய நாட்டின் விரிவடைந்து கொண்டிருந்த பொருளாதாரத்தின் தொழிலாளர் பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக கடாபியின் ஆட்சி வரவேற்றிருந்தது; அந்த மூன்று லட்சம் பேர் மட்டுமின்றி, லிபியாவைச் சேர்ந்த கறுப்பின மக்களே படுகொலை செய்யப்பட்டனர் என்பதற்கு நம்பகமான தகவல்கள் இருக்கின்றன. இந்த சூறையாடலின் அளவு இன்னும் அறுதி செய்யப்படவில்லை; ஆனால், ஐநாவின் பாதுகாப்புக் கவுன்சிலுடன் சேர்ந்து நேட்டோ கட்டவிழ்த்துவிட்ட இந்த யுத்தத்தால் 50000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது ஏற்கனவே தெளிவு; ஐந்து லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டோர் வீடிழந்துள்ளனர்;  பெரும்பாலும் நேட்டோவிடம் ஆயுதம் பெற்ற கலகக்காரர்களினால்தான் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; அவர்கள்தான் இப்போது அந்த நாட்டின் அரசாங்கமாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.' (மீண்டும் காலனியாக்கப்பட்ட லிபியா, அய்ஜாஸ் அகமது, பிரன்ட்லைன் நவம்பர் 18, 2011).
மனித உரிமைகள் பெயரால் லிபியாவில் தலையிட்டவர்கள் அந்நாட்டின் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று அடக்கினார்கள். அந்நாட்டின் எண்ணை வளங்களை ஏற்கனவே கொள்ளையடிக்கத் துவங்கிவிட்டார்கள்.
5. இப்படிப்பட்ட அமெரிக்கா இப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு நோக்கம் என்னவாக இருக்க முடியும்? நிச்சயமாக மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக இருக்க முடியாது.
'அமெரிக்காவின் நலன்களுக்கும், (இந்த தீர்மானத்தைப் போலவே) எல்எல்ஆர்சியின் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று கோரும் இந்தியாவின் நலன்களுக்கும் இடமளிக்க வேண்டும் என்று ராஜபட்சே அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க ஒரு கருவியாக ஒபாமா நிர்வாகம் இந்த தீர்மானத்தை முன்னுக்குத் தள்ளுகிறது. இலங்கையில் தமிழர்கள் நடத்தப்படும் விதம் குறித்து தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சிங்கள மற்றும் தமிழ் மேட்டுக்குடியினருக்கு (அல்லது அரசியல்வாதிகளுக்கு) இடையில் ஒரு அதிகாரப் பகிர்வு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று புதுதில்லி ஒரு அரசியல் தீர்வை வலியுறுத்துகிறது' என்று உலக சோஷலிச இணையதளம் கருத்து தெரிவித்துள்ளது. (சரத் குமாரா, டபிள்யூஎஸ்டபிள்யூஎஸ் இணையதளம், மா£ச் 7, 2012).
இப்படியரு தீர்மானம் கொண்டு வரப்படப் போவது பற்றி அமெரிக்க வெளிறவுத் துறை முன் கூட்டியே ராஜபட்சேவிற்குத் தெரிவித்துள்ளது. மேற்குறிப்பிட்ட இணையதளம் மேலும் பின்வருமாறு கூறுகிறது:
'விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராஜபட்சேவின் யுத்தத்தை ஆதரித்த வாஷிங்டன் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவை விட அதிகமாக இலங்கையில் மனித உரிமைகள் பற்றி கவலைப்படவில்லை. (அந்நாடுகளில் மனிதஉரிமைகள் பற்றிய அதன் அக்கறை எத்தகையது என்பதை மேலே உள்ள விவரங்கள் தெளிவாக்குகின்றன-இந்தக் கட்டுரை ஆசிரியர்). கொழும்பு சீனாவுடன் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நெருக்கமாக பொருளாதார, ராஜீய உறவுகளை விட்டு விலகும்படி இலங்கையை நிர்ப்பந்திப்பதற்கு இந்தப் பிரச்சனை ஒபாமா நிர்வாகத்திற்கு ஒரு வசதியான கருவியாகும்'.
6. இந்த தீர்மானத்தில் உருப்படியாக ஒன்றும் இல்லை என்பது இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அக்கறை கொண்டுள்ள பலரின் கருத்து. இருந்தாலும், இலங்கையில் அப்பாவித் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையைப் பற்றிய சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்க இது பயன்பட்டிருக்கின்றது என்பது வேறு பலரின் கருத்து.
ஆனால், உண்மையில் இப்படியொரு தீர்மானத்தைக் கொண்டு வந்திருப்பதன் மூலம் சர்வதேச விமரிசனங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், அரசாங்கத் தவைர்கள் போர்க்குற்ற விசாரணையைச் சந்திக்க வேண்டிய அபாயத்திலிருந்து தப்பிப்பதற்கும்  இலங்கைக்கு ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது, அமெரிக்கா என்று சரத் குமாரா கூறுகிறார்.
ஆம், அது சரிதான். ஏனெனில், அமெரிக்காவின் நோக்கம் இலங்கையைப் பகைத்துக் கொள்வேதா அல்லது அங்குள்ள தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதோ அல்ல. இலங்கையில் தான் காலூன்றுவதுதான் அதன் திட்டம். இலங்கையின் சர்வதேச அரசியல் கொள்கை முடிவுகளிலும், இலங்கைப் பொருளாதாரத்திலும் தன்னுடைய செல்வாக்கை செலுத்துவது அதன் நோக்கம். அதே நேரத்தில், மனித உரிமைகள் விஷயத்தில் தனக்கு உண்மையிலேயே அக்கறை இருப்பதாகவும் காட்டிக் கொள்ளலாம்.
காரியம் முடிந்ததும் இந்த முகமூடியைக் கழற்ற அமெரிக்கா சற்றும் தாமதிக்கவில்லை. தீர்மானம் மார்ச் 23ம் தேதி நிறைவேற்றப்படுகின்றது. 24ம் தேதியே இலங்கை மீது 1980களில் தான் விதித்திருந்த ஆயுதக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது.
'..தீர்மானம் வியாழனன்று (23.3.12) நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இலங்கைக்கான ஆயுத விற்பனைக் கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு தடாலடியாகத் தளர்த்தியுள்ளது. வியாழக்கிழமை முதல் இந்தக் கட்டுப்பாடு தளர்வு அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவுப்படி இலகு ரக விமானங்கள், கண்காணிப்பு கேமராக்கள், அது தொடர்பான பொருட்களை இலங்கை அமெரிக்காவிலிருந்து வாங்கிக் கொள்ளலாமாம். குறிப்பாக, கடல் மற்றும் வான் மார்க்கமான கண்காணிப்புக்குத் தேவையான உபகரணங்களை இனி அமெரிக்காவிடமிருந்து  இலங்கை பெற முடியும்'. (தீக்கதிர், 24.3.12).
       கொள்கைகளில் செல்வாக்கு செலுத்துவதற்காகத்தான் ஐநாவின் மனித உரிமைகளுக்கான தூதர் மற்றும் சிறப்பு அதிகாரம் பெற்ற இதரர்களின் ஆலோசனைகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் பெற்றுக் கொள்ள இலங்கையை வலியுறுத்துகிறது தீர்மானம். அப்படி உதவி செய்யப் போகிறவர்கள் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளின் ஆட்களாகத் தான் இருப்பார்கள். அதில், இலங்கையின் சம்மதத்துடன் என்கிற சொற்றொடரை இந்தியா சேர்த்துள்ளது. அவ்வளவுதான்.
இப்போது ஆயுதங்கள் வாங்குவதற்கு இருந்த தடைகளை நீக்கிய பின்னர் இலங்கை சம்மதிக்க மாட்டேன் என்றா கூறப் போகிறது?
7. எப்படியாயினும், சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் இலங்கைத் தமிழர்கள் ஒரு பகடைக் காயாகப் பயன்படுத்தப்படுவது இனியாவது முடிவிற்கு வர வேண்டும். அப்பாவித் தமிழர்களைக் கொன்ற குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கும், தமிழர்களுக்கு சம அரசியல் உரிமையும், தமிழர் வாழும் வட கிழக்குப் பகுதிக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதற்கும் இலங்கையின் மீது ராஜீய ரீதியான நிர்ப்பந்தம் கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை. இந்தியாவிற்குத்தான் இந்த விஷயத்தில் முக்கிய பாத்திரம் இருக்கின்றது.
ஆனால், இப்போது அமெரிக்காவும் மூக்கை உள்ளே நுழைத்துவிட்டதால் என்ன நடக்கும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்.

-----------------------------------------------------------24.3.12
(இக்கட்டுரையின் சற்று சுருக்கப்பட்ட வடிவம் 'இளைஞர் முழக்கம்' ஏப்ரல் 2012 இதழில் வெளிவந்துள்ளது).

Thursday, March 15, 2012

நீலப்படமும் காவிக் கும்பலும்




அசோகன் முத்துசாமி

கடந்த சில வருடங்கள் போல் அல்லாமல் இந்த வருடம் காதலர் தினக் கொண்டாட்டங்கள் அமைதியாக நடந்திருக்கின்றன. காவிக் குண்டர்கள் கைகளில் தாலியுடன் அலைவதும், பொது இடங்களில் ஜோடியாக இருக்கும் ஆண்-பெண்களுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைப்பதும் அது போன்ற எதுவும் நடந்த மாதிரி செய்திகள் இல்லை. (அப்போது சாதி பார்ப்பார்களா அல்லது பார்க்க மாட்டார்களா?).
இத்தனைக்கும் சங்பரிவாரம் அப்படியேதான் இருக்கின்றது. அது ஒன்றும் அழிந்து போய்விடவில்லை. பின்னர் ஏன் காவிப் பொறுக்கிகள் வெளியில் தலை காட்டவில்லை என்பதற்கு இந்நேரம் வாசகர்களுக்குக் காரணம் புரிந்திருக்கும். எந்த முகத்தை வைத்துக் கொண்டு கலாச்சார காவலர் வேடம் போடுவது என்று அவர்கள் பதுங்கியிருக்க வேண்டும்.
ஆம், முன் எப்போதையும் விட அவர்களது கள்ளத்தனம் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அம்பலமாகிவிட்டது. கலாச்சாரக் காவலர்கள் என்று தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டவர்கள் உண்மையில் எந்தக் கலாச்சாரத்தைப் பாதுகாக்க விரும்புகிறார்கள் என்பது கர்நாடக சட்டமன்றத்தில் அதிகாரபூர்வமாக பதிவாகிவிட்டது.
லட்சுமண் சாவடி, சி.சி.பாடீல் மற்றும் ஜெ.கிருஷ்ணா பாலெமர் ஆகிய மூவரும் கர்நாடக மாநில பாஜக அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள். கடந்த பிப்ரவரி 7ம் தேதி மாநில சட்டமன்றத்தில் மாநிலத்தில் நிலவும் வறட்சி நிலைமை பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்தது. ஆனால், அந்த மூன்று அமைச்சர்களுக்கும் அதைவிட முக்கியமான வேலை சட்டமன்றத்திற்குள்ளேயே இருந்தது. மூவரும் தங்களது அதி நவீன செல்போன்களில் நீலப்படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். (கலாச்சார வளர்ச்சி இல்லாமல் அறிவியல் வளர்ச்சி மட்டும் ஏற்படுவதால் விளையும் தீமைகளில் இதுவும் ஒன்று. கேமரா போன்களை வைத்துக் கொண்டு ரவுடிகளும், பொறுக்கிகளும் செய்கின்ற அயோக்கியத்தனத்திற்கு அளவே இல்லை).
பொது இடங்களில் திருமணமாகாத ஆண்-பெண் சேர்ந்து நடமாடக் கூடாது என்பவர்கள் பொது இடங்களின் பொது இடமான சட்டமன்றத்தில் படுக்கையறைக் காட்சிகளைக் கண்டு களித்திருக்கிறார்கள். என்னவொரு தெனாவெட்டு! அது சரி, ஜனநாயகத்தையே மதிக்காதவர்கள் சட்டமன்றத்திற்குள் மட்டும் ஒழுக்கமாக நடந்து கொள்வார்களா என்ன?
உண்மையில் இதில் ஆச்சரியப்படுவதற்கோ அல்லது அதிர்ச்சியடைவதற்கோ எதுவும் இல்லை. ஏனெனில், சங்பரிவாரிகள் பாலியல் ஊழல்களில் ஈடுபடுவது இது ஒன்றும் புதிதல்ல.
சஞ்சய் ஜோஷி என்பவர் ஒரு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர். வகுப்புவாதத் தத்துவங்களை சங்கின் ஊழியர்களுக்கும், ஏன் மேல் மட்டத் தலைவர்களுக்கு இல்லை என்றாலும், அடுத்த கட்ட தலைவர்களுக்கே கூட போதிப்பவர். பாஜக ஆர்எஸ்எஸ் தத்துவத்திலிருந்து ஒரு அங்குலம் கூட விலகிச் செல்லக் கூடாது என்பவர்.
திருமணம் செய்து கொள்ளாதவர்; அது மட்டுமல்ல, உண்மையிலேயே அவர் ஒரு பிரம்மச்சாரி என்றும் கூட நினைத்திருந்தனர். 2005ம் ஆண்டு ஒரு பெண்ணுடன் அவர் படுக்கையறையில் இருக்கும் வீடியோ ஒன்று வெளியானது. ஆர்எஸ்எஸ்சின் சார்பாக பாஜகவிற்குள் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்த அவர் பதவி விலக வேண்டியதாயிற்று. கட்சிக்குள் இருந்த, இருக்கும் அவரது விரோதிகளே (நரேந்திர மோடி, உமாபாரதி போன்றவர்கள்) அந்த காட்சியைப் பதிவு செய்திருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. உமாபாரதி கட்சியை விட்டு நீக்கப்பட்ட கோவிந்தாச்சார்யாவுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தார் என்று ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டங்களில் ஜோஷி அடிக்கடி குற்றம் சாட்டிக் கொண்டே இருந்ததால் அவர் பழி வாங்கிவிட்டார் என்றார்கள். காரணம் எதுவாயினும், பாஜக பரிவாரத்தை அன்று பீடித்த வீடியோ கண்டம் (வீடியோ காண்டம் என்றும் சொல்லலாம்) இன்று வரை விடவில்லை.
எப்படியாயினும், ஆர்எஸ்எஸ் அவரைக் கைவிட்டு விடவில்லை. சிறிது காலம் கழித்து வேறு பொறுப்புகள் கொடுத்து கௌரவித்தது.
மத்தியப் பிரதேசத்தில் பாபுலால் கௌர் என்பவர் பாஜக முதலமைச்சராக இருந்தார். உமாபாரதிக்குப் பின்னர், சிவராஜ் சிங் சௌகானுக்கு முன்னர் 2004 ஆகஸ்டிலிருந்து 2005 நவம்பர் வரை பதவியில் இருந்த அவர் மீது பாஜக தொண்டர் சலீம் கபீர் என்பவரின் மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். கபீரே இந்தப் புகாரைப் பகிரங்கமாகக் கூறினார்.
ஏற்கனவே தன்னுடைய இடத்தை பிடித்துக் கொண்டு விட்டார் என்று கடுப்பில் இருந்த உமாபாரதி கோஷ்டி கௌருக்கு இடைவிடாமல் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தது. போதாதற்கு இந்த அசிங்கம் வேறு. இது அவர் முதல்வர் பதவியை இழப்பதற்கு இட்டுச் சென்றது. ஆனால், அவரை ஒழுக்கத்தின் மொத்த குத்தகைதாரர்கள் ஒதுக்கி வைத்துவிடவில்லை. இன்றும் கூட அவர் மத்தியப் பிரதேசத்தில் அமைச்சர்தான்.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியிலிருக்கிறது. அதன் அமைச்சர் மகிபால் என்பவர் ஏற்கனவே பன்வாரி தேவி என்கிற நர்ஸ் ஒருவரை பாலியல் வன்முறை செய்து கொன்றுவிட்டார் என்கிற குற்றச்சாட்டில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. ஆனால், பாஜக எதிர்க்கட்சியாக இருப்பதால் அது அரசாங்கத்திற்கே ஆபத்து உண்டாக்கும் சிக்கலாக ஆகவில்லை. காரணம், பாஜகவினர் அதை விட பெரிய பெரிய தப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜகவைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சரும், ஒரு முன்னாள் எம்பியும் இதர 15 பேருடன் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது கடந்த நவம்பர் மாதம் அம்பலமானது. வழக்கும் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
இப்போது மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கு வருவோம். மூன்று அமைச்சர்கள் நீலப்படம் பார்த்து பதவியை இழந்த இந்த சம்வபத்திற்கு முன்பாகவே கடந்த வருடம் ஹாலப்பா என்கிற அமைச்சர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி பதவி விலகியுள்ளார். அவர் வேறு ஒன்றும் செய்யவில்லை. சிமோகாவில் உள்ள தன்னுடைய நண்பர் ஒருவரின் மனைவியை பலாத்காரம் செய்துள்ளார், அவ்வளவுதான். போலிசிடம் சொன்னால் கொன்று விடுவேன், குழந்தைகளைக் கடத்தி விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.
இன்னும் சில உதாரணங்களும் இருக்கின்றன. சுருக்கம் கருதி அவற்றைத் தவிர்க்கிறோம்.
நீலப்படம் பார்த்த விவகாரம் பாஜகவின் அதன் பரிவாரத்தின் ஒழுக்க முகமூடியைக் கிழித்துவிட்டது என்று பலரும் சாடுகிறார்கள். அது ஒரு வகையில் சரிதான். ஆனால், சட்டசபையில் நீலப்படம் பார்க்காதிருந்திருந்தால் அவர்கள் முன்னர் செய்தது-காதலர்களை அடித்து விரட்டுவது, கட்டாயக் கல்யாணம் செய்து வைப்பது, சதி போற்றுவது போன்ற இன்னிதரவை- எல்லாம் சரி என்று ஆகிவிடுமா என்ன?
பிரச்சனை அதில் இல்லை. அவர்களது அடிப்படையான சமூகக் கண்ணோட்டத்தில் இருக்கிறது. ஆணாதிக்க குணத்தில் இருக்கிறது. கலாச்சாரம் குறித்த அவர்களது வியாக்கியானங்களில் இருக்கிறது.
காதலுக்கு எதிரான இந்துத்துவம் உள்ளிட்ட மதவாத, இனவாத, சாதிவாத பாசிச சக்திகளின் கலாச்சார ரவுடித்தனத்தை பிற்போக்கு எண்ணம் கொண்ட, பழைமையில் இன்னும் ஊறிப்போன, அதை விட்டுத் தொலைக்க மனமில்லாதவர்கள் ஆதரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதன் அடிப்படை பெண்ணை ஏககாலத்தில் ஆணின் புனித அடிமையாகவும் போகப் பொருளாகவும் கருதும் ஆணாதிக்கக் கலாச்சாரத்தில் இருக்கிறது. ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால், பெண் இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால், அதே வேளையில் கட்டற்ற காம லீலைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக தனியாக பரத்தையர் குலத்தையும் உருவாக்கி வைத்துக் கொள்கிறது, ஆணாதிக்கம்.
உண்மையில் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் ஒரு தார மணமுறையைக் கொண்டு வந்ததில் பெண்களுக்குத்தான் முக்கிய பங்கு இருக்கிறது என்பதை பாகோபென் என்கிற அறிஞர் கூறுவதை பிரெடிரிக் ஏங்கெல்ஸ் முற்றிலும் சரி என்று ஆமோதிக்கிறார். புராதன பாலுறவு முறை ஈனமானவை என்றும், ஒடுக்கும் தன்மை கொண்டவை என்றும் அவர்களே முதலில் கருதினர் என்று ஏங்கெல்ஸ் மேலும் கூறுகிறார். '(ஒரு தார மணமுறை எனும் முன்னேற்றம்) ஆண்களிடமிருந்து தோன்றியிருக்க முடியாது. இன்றைய நாள் வரையுங்கூட ஆண்கள் குழு மணத்தின் இன்பங்களைக் கைவிடக் கனாக் கண்டது கூட கிடையாது என்ற காரணமே இதற்குப் போதும். பெண்கள் முயன்று இணை மணமுறை நோக்கி மாற்றம் கண்டபிறகுதான் கண்டிப்பான ஒரு தார மணத்தை-பெண்களுக்கு மட்டும்தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை-ஆண்கள் புகுத்த முடிந்தது'. (பிரெடிரிக் ஏங்கெல்ஸ்; குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்; பக். 67).
ஆம், ஆண்கள் மட்டுமே உறுப்பினர்களாகக் கூடிய ஆர்எஸ்எஸ்சின் கலாச்சாரம் ஆணாதிக்கக் கலாச்சாரம்தான். அதன் துணை அமைப்புகளும் அப்படியே நடக்க வேண்டும். அவர்கள் ஒரு பக்கம் பெண்களுக்கு 'ஒழுக்கத்தைப்' போதித்துக் கொண்டு மறுபக்கம் தாங்களே அதை மீறுவார்கள் என்பது நீலப்பட விவகாரத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டுவிட்டது. அத்தகைய கலாச்சாரத்தையே அவர்கள் காப்பாற்ற விரும்புகிறார்கள். அந்த மூவரும் அமைச்சர் பதவியிலிருந்து மட்டுமே மேலிட உத்தரவுப்படி விலகியிருக்கிறார்கள்; ஆனால், அவர்கள் இன்னும் பாஜகவின் உறுப்பினர்கள்தான். வேறு அரசியல் காரணங்களுக்காவோ அல்லது உள்கட்சிப் பிரச்சனை காரணமாகவோ அவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படலாம்; அல்லது வெளியேறலாம். ஆனால், இந்தக் குற்றத்திற்காக அவர்களை இந்துத்துவவாதிகள் கட்சியைவிட்டு வெளியேற்றப் போவதில்லை.
இளைஞர் முழக்கம், மார்ச் 2012.
-----------------------------------------------------------------------------18.2.12          




Thursday, March 8, 2012

கடவுளர்களால் கைவிடப்பட்ட பாஜக



அசோகன் முத்துசாமி

1991லிருந்து அயோத்தி சட்டமன்றத் தொகுதி பாஜக வசம்தான் இருந்தது. லல்லு சிங் என்பவர் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். ஆனால், இம்முறை (2012 சட்டமன்றத் தேர்தல்) சமாஜவாதிக் கட்சியின் பாண்டே என்கிற இளைஞர் அவரையும், பாஜகவையும் தோற்கடித்துவிட்டார். தன்னுடைய ஜன்மபூமியிலிருந்து பாஜகவை ராமரே விரட்டியடித்து விட்டார்.
இத்தனைக்கும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமருக்குக் கோவில் கட்டுவோம் என்று அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வாக்குறுதி அளித்தனர். போங்கடா, நீங்களும் உங்கள் கோவிலும் என்று சீதாமணாளன் மறுத்துவிட்டார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் உபி மாநில அயோத்தி சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட பைசாபாத் பாராளுமன்றத் தொகுதியிலும் பாஜக தோல்வி அடைந்தது மட்டுமின்றி நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருந்தது.
அது போல்  இந்துத்துவ சக்திகள் இடிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்த வேறு இரண்டு முக்கியமான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான மதுராவிலும் கூட கடவுளர்கள் பாஜகவை தங்கள் தொகுதியை விட்டு வெளியேற்றி விட்டிருந்தனர். இப்போது சட்டமன்றத் தேர்தலிலும் அதுதான் நிலைமை. மதுரா சட்டமன்றத் தொகுதியில்  காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பாஜகவிற்கு இரண்டாவது இடம்.(ஆனால், காசி விஸ்வநாதர் ஆலயம் இருக்கும் வாரணாசி நகரில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது).
சரி, கடவுளர்களைக் காட்டி நடத்திய அரசியல்தான் வெற்றி பெறவில்லை. வகுப்புவாதத்தை வேறு வகையில் பிரயோகித்துப் பார்த்தது. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்போம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டிலிருந்து 4.5 சதவீதத்தை முஸ்லிம்களுக்கு ஒதுக்குவதாக காங்கிரஸ் கூறியது. இட ஒதுக்கீட்டை எப்போதுமே எதிர்த்து வந்துள்ள பாஜக இதை தனக்கே உரிய வகையில் பயன்படுத்திக் கொண்டது.
பிற்படுத்தப்பட்ட சாதி இந்துக்களின் வேலை வாய்ப்புகளைப் பறித்து காங்கிரஸ் முஸ்லிம்களுக்குக் கொடுக்கப் போகிறது என்று பிற்படுத்தப்பட்ட சாதிகளின் இந்துக்களின் வாக்குகளைக் கவர முயற்சித்தது. பாஜகவிற்கு அந்த வாக்குகள் கிடைக்கவில்லை என்பது தேர்தல் முடிவுகளில் தெரிகிறது. அது போல் முஸ்லிம்களின் வாக்குகளும் காங்கிரசுக்குப் பெரிதாகக் கிடைக்கவில்லை. இவ்விஷயத்தில் மாயாவதியின் கணிப்பு சரி போல்தான் தோன்றுகிறது. பிற்படுத்தப்பட்ட சாதி இந்துக்களின் வாக்குகள் பாஜகவிற்குப் போய்விடும் என்று முஸ்லிம்கள் பயந்தனர். ஆனால், அதே நேரத்தில் காங்கிரஸ் வெற்றி பெறக் கூடியநிலையில் இல்லை. எனவே, சுமார் 70 சதவீதம் முஸ்லிம்கள் சமாஜ்வாதிக் கட்சிக்கு வாக்கிளித்துவிட்டார்கள் என்பது அவரது கணிப்பு.
ஆக, இதுவும் பலிக்கவில்லை. கடவுளர்களும் கைவிட்டு விட்டார்கள். வழக்கம் போல் முஸ்லிம் வெறுப்பை உருவாக்க முயற்சித்ததும் பலிக்கவில்லை.
அடுத்து, காந்தியைக் கொன்ற ஆர்எஸ்எஸ்சின் அதரவு பெற்ற காந்தியவாதியான (?) ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு அஸ்திரத்தைக் கையில் எடுத்துப் பார்த்தார்கள். (அது அஸ்திரமா என்ன? கேளிக்கைக் கொண்டாட்டம் போல் அல்லவா இருந்தது?).
ஆனால், மக்கள் பாஜகவின் உத்தமர் வேடத்தை மக்கள் நம்பவில்லை. நம்பியிருந்தால் பாஜகவிற்கு அல்லவா வாக்களித்திருக்க வேண்டும். சமாஜ்வாதிக் கட்சியை ஆட்சியில் அமர வைத்துள்ளார்கள். இரண்டாம் இடத்தை பகுஜன் சமாஜீக்குக் கொடுத்துள்ளார்கள். பாஜகவிற்கு மூன்றாவது இடம்தான். காரணம் தெளிவு. சங்பரிவாரிகளும் ஊழலில் ஊறித் திளைப்பவர்கள் என்பது மக்களுக்கும் தெரிந்துவிட்டது.
ஆட்சியில் இருந்தது பகுஜன் சமாஜ் கட்சி. அது தேர்தலுக்குச் சற்று முன்பாக ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு அமைச்சரை கட்சியை விட்டு நீக்குகிறது.  அவர் நேராக பாஜகவில் வந்து சேருகிறார். நம்ம ஆள் வந்துவிட்டார் என்று இவர்களும் அவரைச் சேர்த்தணைத்துக் கொண்டனர். போதாக்குறைக்கு எடியூரப்பா காண்டம் வேறு. (இவை சில சமீபத்திய உதாரணங்கள் மட்டுமே. பழைய உதாரணங்கள், புதிய உதாரணங்கள் என ஏராளம் இருக்கின்றன).
பாஜக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றாக வெளியில் வர வர அது தன்னை வித்தியாசமான கட்சி என்று கூறிக் கொள்வது வெறும் வார்த்தை ஜாலம்தான் என்று பல ஊடக அறிவாளிகள் கருத்துரைக்கிறார்கள். ஆனால், அது சரியான மதிப்பீடு அல்ல. ஏனெனில், அது உண்மையிலேயே வித்தியாசமான கட்சிதான். அது ஒரு வகுப்புவாத பாசிசக் கட்சி. சிவசேனையைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளிலிருந்தும் அது ஒரு வித்தியாசமான கட்சிதான்.
தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும் அது தன்னுடையக் கொள்கைகளைக் கைவிடப் போவதில்லை. தன்னுடைய மதவெறிக் கொள்கைகளைச் செயல்படுத்துவதற்குத்தான் அது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கிறது.
எடுத்துக் காட்டாக, மத்தியப் பிரதேசத்தில் அதிகாரத்தில் இருக்கும் பாஜக பசுவதைத் தடுப்புச் சட்டத்தில் கடுமையான திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இச்சட்டங்களின்படி பசுக்களை வதைப்பது மட்டும் அல்ல, மாட்டிறைச்சி உண்பதே குற்றம். பசுவை வதைத்தாக நிரூபிக்கப்படும் எவருக்கும் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை உண்டு. முன்னர் இது வெறும் மன்று ஆண்டுகளாக இருந்தது.
கர்நாடகாவிலும் பசுவதைத் தடைச்சட்டத்தில் கடுமையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பசுவதை என்பது கால்நடை வதை என்று திருத்தப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து வகை மாடுகளையும். கன்றுகளையும் கொல்வது, அவற்றின் இறைச்சியை விற்பது. சாப்பிடுவது அனைத்தும் குற்றம். தண்டனை காலம் அறு மாதங்களிலிருந்து ஏழு வருடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் மோடி அரசாங்கம் கலவரம் நடந்த பகுதிகளில் சொத்து விற்பது வாங்குவது தொடர்பான சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி சொத்து ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றப்படுவது எப்படி நடக்க வேண்டும் என்பதை அரசாங்கம்தான் தீர்மானிக்கும். மோடியின் ஆட்சியில் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. முஸ்லிம்கள் சொத்துக்களை விற்க முடியாது. வாங்கவும் முடியாது.
இவை சமீபத்திய உதாரணங்கள் மட்டுமே.
ஐந்து மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் ஒப்பீட்டளவில் காங்கிரசை விட பாஜக கூடுதல் வெற்றி பெற்றிருப்பது போல் தோன்றினாலும் உபியில் பெரும்பகுதி இடங்களை வெல்லாமல் அதனால் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவது பற்றி நினைத்து பார்க்க முடியாது. உபியில் அதற்கான வாய்ப்பு கண்டிப்பாக 2014 தேர்தலில் இருக்கப் போவதில்லை.
எப்படியாயினும் மதச்சார்பற்ற கட்சிகளின் உதவியின்றி மத்தியில் பாஜக 1998லிருந்து 2004 வரை அதிகாரத்தில் இருந்திருக்கவே முடியாது. ஏதேனும் ஒரு சால்ஜாப்பு சொல்லி பாஜகவுடன் கைகோர்ப்பது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகவே இருக்கும்.
------------------------------------------------------------------8.3.12

Friday, March 2, 2012

தொண்டு நிறுவன அரசியலும் கூடங்குளமும்





      அசோகன் முத்துசாமி


      கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து நடத்தப்படும் போராட்டத்திற்கு இந்தியாவில் செயல்படும் அமெரிக்க மற்றும் ஸ்காண்டிநேவிய நாடுகளின் உதவியால் செயல்படும் தொண்டு நிறுவனங்களின் மூலம் நிதியுதவி அளிக்கப்படுகின்றது என்று பிரதமர் மன்மோகன்சிங் குற்றம் சாட்டினார். அநேகமாக அமெரிக்கா தொடர்பாக அதற்கு எதிராக ஒரு கருத்தை (அல்லது உண்மையை) மன்மோகன் கூறியிருப்பது இதுதான் முதல் முறையாக இருக்கும். இருக்கட்டும்.

      சொன்னவரின் நேர்மை கேள்விக்குறியானது என்பதால் சிலர் இதை ஏற்க மறுக்கின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட அணுஉலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் தலைவர் சுப.உதயகுமார் இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் துhக்கில் தொங்கத் தயார் என்று சவால் விட்டிருக்கிறார். அரசியல் சார்பற்ற போராட்டம் என்னுடையது என்று கூறிக் கொள்ளும் அவர் ஒரு பக்கா அரசியல்வாதி போலவே பெரும்பாலான நேரங்களில் பேசுகிறார்.

      பெரும்பான்மை மக்கள் அணுஉலையை எதிர்க்கிறார்கள் என்று கொஞ்சமும் கூசாமல் மீண்டும் மீண்டும் கூறுகின்றார். திமுக, இரண்டு கம்யூனி°ட் கட்சிகள், காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய அரசியல் கட்சிகளும், பல்வேறு தொழில்களைச் சேர்ந்த முதலாளிகள், தொழிலாளர்கள் சங்கங்களும்,  விவசாயிகள் சங்கங்களும்  அணுஉலைக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. அதிமுக இன்னும் தன்னுடைய ஆதரவைத் தெரிவிக்கவில்லை, அவ்வளவுதான். (மதிமுகவோ கடும் மின்வெட்டு வாட்டும் சூழலில், விசைத் தொழிலாளர்கள் நிறைய இருக்கும் சங்கரன் கோவில் இடைத் தேர்தலை மனதில் வைத்து கூடங்குள எதிர்ப்பிற்கு 'புரட்சிகரமான இடைக்கால விடுமுறை' விட்டுவிட்டது).  ஆனாலும், தனக்கு பெரும்பான்மை இருப்பதாக அவர் கிளிப்பிள்ளை போல் சொல்வதைப் பார்த்தால் இவரது நம்பகத்தன்மையும் சந்தேகத்திற்குரியதாக ஆகின்றது. நிற்க.

      நாம் தொண்டு நிறுவனங்களுக்கு அந்நிய நிதி உதவி விஷயத்திற்கு வருவோம்.

      அந்நிய நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் அப்படி நிதி அளிக்கும் நாடுகளின் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் என்றோ, அப்படிச் செயல்பட்டாலும் அந்நாடுகள் நிதியுதவி தொடர்ந்து அளிக்கும் என்றோ சொல்ல முடியாது. சொந்தச் செலவில் யாரும் சூன்யம் வைத்துக் கொள்ளப் போவதில்லை.

       பொதுவாக, பல்வேறு வகையான இன்னல்களை அனுபவித்து வரும் மக்களுக்கு சில தற்காலிக நிவாரணங்கள் வழங்குவதன் மூலம் அவர்கள் நடப்பில் இருக்கும் அரசமைப்பிற்கு எதிராகக் கிளர்ந்தெழுவதைத் தடுக்கும் வேலையை அவை கச்சிதமாகச் செய்து வருகின்றன. அத்துடன் உலகமய அமலாக்கத்திற்குப் பின்னர் அனைத்தையும் தனியார்மயமாக்கும் கொள்கைக்கான ஆதரவை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் செய்து வருகின்றன.

      கடந்த சில வருடங்களாக ஜெர்மனியைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று இரண்டு குறும்படங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் (நிச்சயமாக தமிழ்நாட்டில்) திரையிட்டு வருகின்றது.

      அதில் ஒன்று தண்ணீர் பிரச்சனை சம்பந்தப்பட்டது. இந்திய மக்கள் அனுபவிக்கும் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறையை மனதைத் தொடுகின்ற மாதிரி விவரிக்கும் அப்படம் மெல்ல மெல்ல தண்ணீர் விரயம் செய்யப்படுவதைப் பற்றிப் பேசுகின்றது. அருகி வரும் இயற்கை ஆதாரமான நீருக்குக் கட்டணம் விதிப்பதுதான் இதற்கு ஒரே தீர்வு என்று சொல்லி முடிகிறது. இது பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளிகளின் நலன்களுக்கான படம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

      அதே போல் குறுங்கடன் திட்டம் பற்றி விளக்கும் படம் ஒன்றும் திரையிடப்படுகின்றது. குறிப்பாக, மராட்டியம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் பருத்தி விவசாயிகளின் கடன் பிரச்சனை பற்றிச் சொல்லி பெண்கள் குழுக்களாகச் சேர்ந்து கடன் பெறுவது பற்றி விளக்கும் படம். இப்படிக் கடன் வழங்கும் மைக்ரோ பைனான்° நிறுவனங்களை பன்னாட்டு நிதி நிறுவனங்கள் இயக்குகின்றன என்பதும், லாப நோக்கமற்ற என்கிற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் லாப நோக்கத்தாலும், கடன் வசூலிக்கும் முறைகளாலும் ஆந்திராவில் பல பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளது பற்றியும், அது தொடர்வது பற்றியும் சமீபத்தில் 'ஹிந்து' நாளிதழ் (26.2.12) விரிவான செய்தி வெளியிட்டிருந்தது. இவை உதாரணங்கள் மட்டுமே.

      தொண்டு வேலைக்காக தங்களுக்கு வந்த பணத்தை இப்படி கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டத்திற்குத் திருப்பி விட்டதாக மத்திய அரசாங்கத்தால் மூன்று என்ஜிஓக்கள் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. துhத்துக்குடி டையோசிஸ் அசோஷியேசன், குட் விஷன், பீப்பிள்ஸ்  எஜீகேஷன் பார் ஆக்ஷன் அன்ட் கம்யூனிட்டி எம்பவர்மென்ட் ஆகிய அந்த மூன்று அமைப்புகளில் மூன்றாவது அமைப்பை நடத்துவதே சுப.உதயகுமார்தான்.

      2010-2011ல்  ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் அந்நிய நிதி பெற்ற தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 958. அவற்றில் 186 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இயங்குகின்றன.   அவை அந்த ஆண்டு மட்டும் 800 கோடிக்கும் மேல் அந்நிய நிதி பெற்றன. இவற்றில் உதயகுமாரின் நிறுவனம் மட்டும் 2010-11ல் 2, 64,05,409 ரூபாய் பெற்றிருக்கின்றது. இந்தப் போராட்டத்தில் சம்பந்தப்பட்டிருக்கின்ற இதர அமைப்புகள் பலவும் இது போல் கோடிக்கணக்கில் அந்நிய நிதியுதவி பெறுகின்றiவைதான். தங்களுக்கு வரும் நிதியில் வெறும் 10 விழுக்காட்டை போராட்டத்திற்கு ஆதரவாகத் திருப்பி விட்டாலும் போதும். வருடம் முழுவதும் போராட்டம் நடத்தலாம்.

      இதற்கிடையே ஒரு விஷயத்தை இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் கிறித்துவ தொண்டு நிறுவனங்கள் சில சம்பந்தப்பட்டிருப்பதால் இந்தப் போராட்டத்திற்கு மதச்சாயம் பூச இந்துத்துவ சக்திகள் முயலுகின்றன. (இதை கிறித்துவ மத அமைப்புகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்). ஆனால், 2010-11ல் 10 கோடிக்கும் மேல் அந்நிய நிதியுதவி பெற்ற 'தொண்டு நிறுவனங்களின்' பட்டியலில் காஞ்சி காமகோடி மருத்துவ அறக்கட்டளையும் ஒன்று.  (perspectives on pan asian-website). கண்மூடித்தனமான பார்ப்பன எதிர்ப்பு, கூடங்குள எதிர்ப்பு குழுக்கள் கவனிக்கவும்.

      அந்நிய நாடுகள் இந்திய மக்களை வாழவைப்பதற்காக நிதியுதவி செய்யப் போவதில்லை. சம்பந்தப்பட்ட நாடுகள் ஒன்றும் அப்படி தங்கள் நாட்டு சாமானிய மக்களை வாழ வைத்துவிடவில்லை.
            ---------------------------------------2.3.12

     


     

     

Wednesday, February 29, 2012

சில கவிதைகள்




பந்து போல்
திரும்பி வரும்
என்பது தெரியாதவர்கள்
நிலைக் கண்ணாடிகள் மீது
கல் வீசுகிறார்கள்
.
ஆள்பாதி ஆடைபாதி
மற்றவருக்குத்தான்

எப்போதும்
ஆள்தான் எல்லாமே
மனசாட்சிக்கு.
.
சொல்லாத சொல்லுக்கு
விலையேதுமில்லை

அவதூறுகளை நீங்கள்
அள்ளி வீசும்போது தெரிகிறது

உங்கள் மொழியின்
விலையும்

என் மௌனத்தின்
மதிப்பும்
.
மனிதர்கள் வெறும்
மரங்களல்ல

காய்த்தால்
கல் வீசுவதற்கும்

காய்க்காவிட்டால்
வெட்டிச் சாய்ப்பதற்கும்
.
வரிசைகளை மீறி
நீண்டன கைகள்

உடலை வளர்த்தவன்
அறிவை வளர்க்கவில்லை.
-அசோகன் முத்துசாமி



Friday, February 24, 2012

பங்கரமான ஆயுதம்





 




அந்தக் குரங்கு
ஊமையாகவே இருந்திருக்கலாம்

யார் அழுதார்கள்
அது பேசவில்லை என்று?

அதன் நாக்கு
சுவைக்க மட்டுமே
தெரிந்ததாக இருந்திருக்கலாம்

சுழட்டத் தெரிந்திருக்க
வேண்டியதில்லை

அதன் பற்கள்
இரையை மட்டும் கடிக்கத்
தெரிந்தவையாக இருந்திருக்கலாம்

தொண்டையிலிருந்து எழுந்து
நாவால் வழிநடத்தப்படும்
காற்றோசையை
சொல்லாக மாற்றத்
தெரிந்திருக்க வேண்டியதில்லை

சுடும் நெருப்பாகவோ
வெட்டும் கத்தியாகவோ
துளைக்கும் அம்பாகவோ
தூக்கும் கயிறாகவோ

பயங்கரமான ஆயுதமாகவேதான்
எப்போதும் இருக்கிறது
பேசத் தெரிந்த 'மிருகத்தின்'
சொல்-
பேசத் தெரியாத 'மனிதர்களுக்கு!'

-அசோகன் முத்துசாமி












Saturday, February 11, 2012

அரசியல், கலாச்சாரம், சோஷலிசம்



பிரபாத் பட்நாயக்

தமிழில்: அசோகன் முத்துசாமி


முதலாம் உலகப் போர் துவங்கி இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த வரையிலான காலகட்டம் உலக முதலாளித்துவத்திற்கு ஒரு கடுமையான நெருக்கடி காலகட்டமாகும். அந்த இரண்டு பயங்கரமான யுத்தங்கள் தவிர அந்த காலகட்டம் மாபெரும் பொருளாதார மந்த நிலையையும் சந்தித்தது; முதலாளித்துவம் தன் வரலாற்றில் அது வரையில் சந்தித்திருந்த நெருக்கடிகளில் மிகவும் கடுமையானது அதுதான். 'முதலாளித்துவத்தின் பொதுவான நெருக்கடி' காலகட்டத்திற்குள் உலகம் நுழைந்து விட்டது என்றும், அங்கிருந்து சோஷலிசத்திற்கு மாறிச் செல்வது ஒன்று மட்டுமே நிகழும் என்றும் கிட்டத்தட்ட உலகின் ஒவ்வொரு நாட்டிலும் இருந்த அறிவுஜீவிகளில் மிகக் கணிசமானோர் நம்பியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்தக் காலகட்டம் முன்னேறிய நாடுகளில் இருந்த உழைக்கும் மக்களுக்கு மட்டுமின்றி, மூன்றாம் உலக நாடுகளில் இருந்த உழைக்கும் மக்களுக்கும் கடும் துன்பத்தைத் தந்தது. எடுத்துக் காட்டாக, மாபெரும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக இந்தியாவில் விவசாயிகள் வரம்பற்ற வறுமையில் தள்ளப்பட்டார்கள்; காலனிய ஆட்சியில் நீண்ட காலமாக உணவு உற்பத்தித் தேக்கமடைந்திருந்ததும், அத்துடன் இரண்டாம் உலகப் போருக்கான செலவின் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் மிகப் பெருமளவு உயர்ந்ததும் முப்பது லட்சம் மக்களைக் கொன்ற 1943ம் ஆண்டு வங்கப் பஞ்சத்தை துரிதப்படுத்தியது.
அது எதிர்ப்பியக்கங்களின் காலமும் ஆகும். கடும் துன்பத்தில் உழன்ற விவசாயிகளிடமிருந்து பெற்ற ஆதரவின் காரணமாக காலனிய எதிர்ப்பு இயக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உந்துதலையும், வீச்சையும் பெற்றது. மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த விழிப்புணர்ச்சி உழைக்கும் மக்கள் தொடர்ச்சியாக நடத்திய போர்க்குணமிக்க போராட்டங்களின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. ஆதலால், இந்த உலக முதலாளித்துவ நெருக்கடி காலகட்டம் உலகளாவிய அளவில் மாபெரும் புரட்சி அலை வீசியதையும் குறிக்கும் கட்டமாகும்; அது யுத்தம் முடிந்த பின்னரும் சில காலம் தொடர்ந்தது; ஆனால், நீண்ட காலம் தாமதமான வியட்நாம் புரட்சியின் வெற்றி அந்த எழுச்சியின் கடைசி அத்தியாயமாகும்.
இந்தியாவிலும் வேறு பகுதிகளிலும் எழுந்த முற்போக்கு கலாச்சார இயக்கங்கள் இந்த புரட்சி அலைக்கு வலு சேர்க்கும் கூறுகளாக அதிலிருந்தே உருவானவையாகும். என்றபோதிலும், அது போலவே பழைய வடிவிலான கலாச்சார இயக்கம் 1950களிலும், அதற்கு அப்பாலும் தன்னுடைய அதே இயங்கு விசையை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்பது அந்த புரட்சி அலை ஓய்ந்து விட்டது என்பதன் பிரதிபலிப்பாகும். ஐம்பது ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் உலக முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு புதிய புரட்சி அலையை உலகம் இப்போது கண்டு கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன்; ஆம், அது தன்னுடைய வளர்ச்சிப் போக்கில், மக்களைத் திரட்டும் விதத்தில், முன்னேற்றம் குறித்த தன்னுடைய அளவுகோலில், முந்தைய அலையுடன் ஒப்பிடும்போது வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதுவும் தன்னுடைய சொந்த புரட்சிகர முற்போக்கு கலாச்சார இயக்கத்தை உருவாக்கும்; அதன் தன்மை இன்று நாம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கும் பழைய இயக்கத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கும்.
இந்த புதிய கலாச்சார இயக்கத்தின் தன்மை என்னவாக இருக்கும் என்று ஊகிப்பது இங்கு என் நோக்கமல்ல. பழைய கலாச்சார இயக்கத்தைக் கொண்டாடும்போது முற்போக்கு கலாச்சார இயக்கங்களின் பணி பழைய இயக்கம் தனக்கான பணி என்று  எதை விதித்துக் கொண்டதோ அதுவாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நம்பிவிடக் கூடாது என்பதை நினைவுறுத்துவதுதான் என் நோக்கம்; அதாவது, சொத்து உறவுகளில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம் சுரண்டலை முடிவிற்குக் கொண்டு வரும் போராட்டத்திற்குப் பங்களிப்பதுதான் முற்போக்கு கலாச்சார இயக்கத்தின் பணி என்ற நம்பிக்கையில் வீழ்ந்துவிடக் கூடாது. மக்கள் விடுதலை அடைவதற்கு நடப்பில் இருக்கும் ஆளும் வர்க்கங்களைத் தூக்கி எறிவதன் மூலம் சொத்து உறவுகளில் மாற்றம் கொண்டு வருவது மட்டும் போதாது; ஆனால், கலாச்சார நடவடிக்கைகளின் மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் பழைய சமூக அமைப்பைக் குறிக்கும் சமூகப் பழக்க வழக்கங்களையும், நிறுவனங்களையும் தாண்டிச் செல்லவும் வேண்டும்; அதற்காக முற்போக்கு கலாச்சார இயக்கங்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும். பெரிய முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் தலைமையிலான சுரண்டல் அமைப்பை வெற்றி கொள்வதை மட்டுமே தங்களது மாபெரும் குறிக்கோளாக முற்போக்கு கலாச்சார இயக்கங்கள் நிர்ணயித்துக் கொள்ளக் கூடாது. சாதி அடிப்படையிலான ஆணாதிக்க சமூக அமைப்பு அதற்குத் தலைமை தாங்கும் குறிப்பிட்ட சுரண்டும் வர்க்கங்களை விடவும் மிகவும் நீடித்து நிற்கக் கூடியது என்பதால் அதற்கு எதிராக அன்றாடம் தொடர்ச்சியான போராட்டம் நடத்துவது பற்றியும் அக்கறை கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், விடுதலை அடைவதற்கு நிரந்தரமான 'கலாச்சாரப் புரட்சி' தேவை. (லியோ டிராட்ஸ்கியின் 'நிரந்தரப் புரட்சி'யிலிருந்தும், சீனாவின் 'கலாச்சாரப் புரட்சி'யிலிருந்தும் இந்த சொற்றொடரை வேறுபடுத்தி பார்க்க வேண்டும்). முற்போக்கு இயக்கங்கள் இந்தக் கடமையையும் தங்களுடையதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதை விளக்கமாகச் சொல்கிறேன்.

1

வரலாற்று மாற்றம் இரண்டு கட்டங்களாக நிகழ்வதாக மார்க்சியம் கருதுகிறது: பழைய சமூகம் அழிக்கப்படுதல் மற்றும் புதிய சமூகம் உருவாக்கப்படுதல். பழைய சமூகத்தை ஒழிப்பதற்கான கருவி முதலாளித்துவமாகும். முதலாளித்துவத்தின் கீழ் இருப்பிற்கு வரும் புதிய சமூகம் முதலாளித்துவத்தையே அழிக்கும் கருவியாக ஆகிறது. சோஷலிசம் நிறுவப்படுவதில் புதிய சமூகம் தன்னுடைய உச்ச நிலையை அடைகின்றது. பழைய சமூகத்து மக்கள் அதில் யதேச்சையாக பிறக்கிறார்கள்; அவர்களாக விரும்பி அதனுள் நுழைவதில்லை. புதிய சமூகத்தில் மக்கள் தாங்களாகவே விரும்பி நுழைகிறார்கள். ஏனெனில், முதலாளித்துவ உற்பத்தி முறையில் அவர்கள் ஒரே மாதிரியான நிலையில் இருப்பதானது அவர்களை ஒன்று சேரும்படி கட்டாயப்படுத்துகின்றது; முதலில் பொருளாதார கோரிக்கைகளுக்காகவும், ஆனால் அதைத் தொடர்ந்து, வரலாற்றுப் போக்கை அவர்கள் தத்துவார்த்த ரீதியாகப் புரிந்து கொள்வதால், அமைப்பையே மாற்றுவதற்காக ஒத்திசைவான அரசியல் செயல்பாட்டிற்காக ஒன்று சேர்கிறார்கள். பழைய சமூகம் அதற்கு வெளியே இருக்கும் ஒரு சக்தியான நிலப்பிரபுவால் சுரண்டப்படுகிறது என்கிற குணஇயல்பால் மட்டும் குறிக்கப்படுவதில்லை; ஆனால், அதற்கு உள்ளேயே சமூக அந்தஸ்தில் ஏற்றதாழ்வுகள் இருக்கிறது என்கிற குணஇயல்பாலும் அது குறிக்கப்படுகின்றது. மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக அது தனிநபரை முடக்கிப் போடும் சமூகமாகும். முதலாளித்துவம் பெயரளவிற்கு தனிநபரை விடுவிக்கின்றது; ஆனால், தனிநபர் சாராத, சுயமாக இயங்கும் ஒரு அமைப்பின் வெறும் பல்சக்கரமாக தனிநபரை ஆக்குகின்ற வகையில் அவனையோ அல்லது அவளையோ தன்னுடைய உள்ளியல்பான போக்குகளுடன் பிணைத்து விடுகின்றது. இந்த 'தன்னிச்சையான' சமூக அமைப்பை தூக்கி எறிந்து, சோஷலிச சமூகத்தை உருவாக்குவதற்காக தனிநபர்கள் ஒன்று சேர்ந்து அரசியல் ரீதியாகத் தலையிடும்போது புதிய சமூகத்தின் மூலம்தான் தனிநபரின் விடுதலை நிகழ்கின்றது. ஆதலால், தனிநபரின் விடுதலை கூட்டு முயற்சியின் மூலம் மட்டுமே நிகழ்கின்றது.
ஆனால், முதலாளித்துவம் தாமதமாகத் தோன்றும் சமுதாயங்களில் பழைய சமுதாயத்தால் நேரடியாக புதிய சமுதாயமாக மாற்றமடையவும், அவ்வாறு முதலாளித்துவ கட்டத்தை முழுமையாக தவிர்க்கவும் முடியுமா? வேரா ஜாசுலிச் இந்தக் கேள்வியை மார்க்சிடம் கேட்டார். ரஷ்யாவின் பழைய கிராம சமுதாயமான மிர்-ரை அடிப்படையாகக் கொண்டு நேரடியாக சோஷலிசத்தைக் கட்டுவது சாத்தியமா என்று அவர் சந்தேகப்பட்டார். 1881ம் ஆண்டில் ஜாசுலிச்சுக்குப் பதிலாக நான்கு நகல் கடிதங்களை எழுதுகின்ற அளவிற்கு இந்தக் கேள்வி மார்க்சை மிகவும் யோசிக்க வைத்து விட்டது. அத்தகைய நேரடியான மாற்றத்திற்கான சாத்தியத்தை மார்க்ஸ் மறுக்கவில்லை; ஆனால், அதே வேளையில், ரஷ்ய கிராம சமுதாயத்தில் நிலத்தின் உடமை சமுதாயத்திடம் இருந்தாலும் நிலத்தைப் பயன்படுத்துவது தனித் தனிக் குடும்பங்களிடம் இருந்ததாலும், அக்குடும்பங்களின் அளவிற்கு ஏற்ப நிலம் அவ்வப்போது மறுவிநியோகம் செய்யப்பட்டாதாலும், அது தன்னுள்ளேயே ஒரு இரட்டைத் தன்மையை கொண்டிருந்தது; அது 'சமுதாய உடமையின் பொருளாதார மேல்நிலையைக்' குறைக்கின்ற வகையில் விவசாயிகளுக்கு மத்தியில் வேறுபாடுகள் உருவாக வழி வகுக்கக் கூடும் என்று மார்க்ஸ் சுட்டிக் காட்டினார். கிராம சமுதாயத்திற்குள் உள்ள வேறுபாடுகளிலிருந்து முதலாளித்துவம் வளரக் கூடும் என்பது மட்டுமல்ல, அது உண்மையில் அவ்வாறாக வளர்ந்து கொண்டிருந்தது என்று லெனின் 'ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி' என்கிற தன்னுடைய அற்புதமான நூலில் அழுத்தமாகக் கூறியிருந்தார். உண்மையில், ஜாசுலிச்சிற்கு மார்க்ஸ் பதில் எழுதிய காலத்தோடு ஒப்பிட்டாலும், நூற்றாண்டின் முடிவில், ரஷ்யாவின் கிராமப்புறங்களில் கணிசமான மாற்றங்கள் ஏற்பபட்டிருந்தன; இந்த மாற்றங்களை லெனின் மிகக் கவனமாக ஆவணப்படுத்தியிருந்தார்.
ஆனால், இருபதாம் நூற்றாண்டில் மூன்றாம் உலக நாடுகளின் புரட்சிகர நிகழ்ச்சி நிரலுக்கு அடிப்படையை கொடுக்கவிருந்த லெனினின் ஆய்வும் கூட மற்றொரு விதமாக முதலாளித்துவத்தைத் தவிர்ப்பதை மனங்கண்டது. வரலாற்று களத்திற்கு தாமதமாக வருகின்ற முதலாளிகள், பிரான்சில் முழுமையான முதலாளித்துவப் புரட்சியின் போது முதலாளித்துவ வர்க்கம் செய்தது போல் பழைய நிலப்பிரபுத்துவ அமைப்பை அடித்து நொறுக்காமல் அதனுடன் அணி சேர்ந்தது. நிலப்பிரபுத்துவ நுகத்தடியில் சிக்கியிருந்த விவசாயிகள் வர்க்கம் எண்ணி எண்ணி ஏங்கிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் பணி பாட்டாளி வர்க்கத்தின் மீது விழுந்தது; ஏனெனில், நிலப்பிரபுத்துவ சொத்துடமையின் மீதான தாக்குதல் முதலாளித்துவ சொத்துடமையின் மீதான எதிர்த் தாக்குதலாக தன் மீது திரும்பக் கூடும் என்று அஞ்சிய முதலாளி வர்க்கம் அந்தப் பணிக்கு தகுதியானதாக இருக்கவில்லை. லெனின் மனங்கண்டது என்னவெனில், ஒரு தொழிலாளர்-விவசாயி கூட்டணி ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்லும்; அங்கிருந்து சோஷலிசப் புரட்சிக்கு முன்னேறும்; எனினும், இந்தப் போக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் விவசாயிகளுக்குள் இருக்கும் வர்க்கங்களில் தொழிலாளி வர்க்கம் அணி சேரும் வர்க்கம் மாறிக் கொண்டே இருக்கும். இந்த கண்ணோட்டத்தின் உள்பொருள் என்னவெனில், சோஷலிசத்திற்கான போராட்டம் முதலாளித்துவம் போதுமான அளவு வளருகின்ற வரையில் காத்திருக்க வேண்டும் என்கிற நிலைப்பாடு மறுக்கப்படுவதாகும். (இந்த வாதத்திற்குள் ஏகாதிபத்தியம் குறித்த தன்னுடைய கோட்பாட்டையும், ஏகாதிபத்தியச் சங்கிலியின் 'பலவீனமான கண்ணியை' நொறுக்க வேண்டிய தேவையையும் சேர்த்ததன் மூலம் 1907 வாக்கில் தான் வளர்த்த இந்த வாதத்திற்கு லெனின் பின்னர் வலு சேர்த்தார்).
என்றபோதிலும், பழைய சமுதாய அமைப்பை முதலாளித்துவம் அழிப்பது என்பது இரண்டு கூறுகளைக் கொண்டதாகும்: நிலப்பிரபுத்துவச் சொத்துடமையின் மீது தாக்குதல் நடத்துவதும், சிறு சொத்துடமையை உருவாக்குவதும் முதலாவது கூறு; தனிநபரின் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட தனிச் சொத்தை அகற்றி, அதற்குப் பதிலாக  மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டுவதையும், கூலி உழைப்பையும் அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவத் தனிச் சொத்தை அதனிடத்தில் வைப்பதற்காக சிறு உடமையின் மீது தாக்குதல் நடத்துவதும், முதலாளித்துவ சொத்துடமையை உருவாக்குவதும் இரண்டாவது கூறு.1 பால் பாரன் பின்னர் குறிப்பிட்டபடி, முதலாளித்துவம் வளர்ச்சி பெற வேண்டும் எனில், நாட்டுப்புறத்தில் முதலில் விவசாயிகளுக்குச் சாதகமாக ஒரு புரட்சியும், பின்னர் அதற்கு எதிராக ஒரு எதிர்ப்புரட்சியும் தவிர்க்க முடியாதவை.2 இதற்கு மாறாக, ரஷ்யாவிலும் முதலாளித்துவம் தாமதமாக வரும் இதர சமுதாயங்களிலும் புரட்சிகர மாற்றம் பற்றிய லெனினியக் கருத்தாக்கம் நிலப்பிரபுத்துவச் சொத்துடமை அழிக்கப்படுவதும், அது சிறு உடமையாக மாற்றப்படுவதும் தவிர்க்க முடியாதவை என்கிறது; ஆனால், சிறு உற்பத்தியாளரின் சொத்து பறிமுதல் செய்யப்படுவது தவிர்க்க முடியாதது என்று கூறவில்லை. அதாவது, அது இரண்டு கூறுகளில் முதலாமாவதை மனங்கண்டது, இரண்டாவதை அல்ல. அதற்குப் பதிலாக, கூட்டுறவு மற்றும் கூட்டுப் பண்ணைகள் அல்லது நிறுவனங்களை அமைப்பதற்காக சிறு உற்பத்தியாளர்கள் ஒன்று சேர்வதன் மூலம் சிறு சொத்துக்கள் பெரிய அளவிலான சொத்தாக மாற்றுவதுதான் திட்டமாகும்.
ஆதலால், பழைய சமூக அமைப்பின் மீது முதலாளித்துவம் நடத்திய தாக்குதலைப் போலவே மீண்டும் நடத்த வேண்டும் என்று இருபதாம் நூற்றாண்டின் கம்யூனிஸ்ட் தத்துவ ஆய்வு மனங்காணவில்லை; அது நிலப்பிரபுத்துவச் சொத்துடமை அழிக்கப்படுவதை மனங்கண்ட அதே வேளையில் சிறு சொத்துடமை அழிக்கப்படுவதை மனங்காணவில்லை; மாறாக, சிறு சொத்துடமை கூட்டுச் சொத்துடமையாக மாற்றமடைவதை மனங்கண்டது. ஆனால், கம்யூனிஸ்ட் தத்துவம் பழைய சமூகம் அழிக்கப்படுவதை மனங்காணவில்லை என்றும் இது பொருள் படும்; ஆனால், அதற்குப் பதிலாக, பல கட்டங்களின் வழியாகவும், மாறும் வர்க்கக் கூட்டணிகளின் அடிப்படையிலும், பழைய சமூகம் மற்றொன்றாக மாற்றமடைவதை மனங்கண்டது; அந்த மற்றொன்று சோஷலிசத் திட்டத்திற்கு பொருத்தமற்றதாக இருக்காது; அதாவது, பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படையிலான புதிய சமூகம் எதைச் சாதிக்கப் பாடுபடுகின்றதோ அதற்குப் பொருத்தமற்றதாக இருக்காது.

2

ஆனால், இது அனைத்திலும் முக்கியமான கேள்வியை எழுப்பியது: பழைய சமூகத்தை, அது நிலப்பிரபுத்துவச் சுரண்டல் நீக்கப்பட்டதாக இருந்தாலும் கூட, எந்த அளவிற்கு புதிய சமுகத்தின் தலைமையில் இருப்பிற்கு வரும் புதிய அமைப்பிற்கு இணக்கமானதாக ஆக்கப்பட முடியும்? ஏனெனில், அதை இணக்கமானதாக ஆக்க முடியவில்லை என்றால், அப்போது சோஷலிசத்திற்கு மாறிச் செல்வதே முற்றிலும் நிலைகுலைந்து போகக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது; அது எந்தெந்த வழிகளில் நடக்கும் என்பதை பின்னர் விவாதிக்க நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.
தன் பங்கிற்கு இந்தக் கேள்விக்கு இரு வேறுபட்ட பரிமாணங்கள் இருக்கின்றன; இது வரையில் அவற்றில் ஒன்று மட்டுமே ஓரளவிற்கு விரிவாக கம்யூனிஸ்ட் இலக்கியத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. சிறு சரக்கு உற்பத்தி தனக்குள்ளே நிகழும் ஒரு உள் வேறுபாட்டு போக்கின் மூலம் முதலாளித்துவத்தை உண்டாக்குவது சம்பந்தப்பட்டதாகும் இது. வேறு வார்த்தைகளில் கூறினால், சிறு உற்பத்தியாளர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதன் மூலம் முதலாளித்துவம் மீண்டு வரவில்லை என்றாலும் கூட சிறு உற்பத்தியாளர்களின் மத்தியில் ஏற்படும் வேறுபாடுகள் மூலம் அது தோன்றக் கூடும்; மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் கூட்டாகச் சேர்ந்து உற்பத்தியில் ஈடுபட்டாலும் கூட இது நிகழக் கூடும்; ஏனெனில், வேரா ஜாசுலிச்சிற்கு மார்க்ஸ் எழுதிய கடிதத்தில் மனங்கண்டதைப் போல், உற்பத்தியாளர்களின் கூட்டமைப்புகளுக்கு இடையிலும் கூட வேறுபாடுகள் உண்டாகக் கூடும். (உற்பத்தியின் அளவில் வேறுபாடுகளும், அதனால் லாபத்தின் அளவில் வேறுபாடுகள் ஏற்படக் கூடும்; அதிக லாபம் ஈட்டுகிறவர்களிடம் மூலதனம் குவியக் கூடும்; அது முதலாளித்துவத்தின் மறுதோற்றத்திற்கு இட்டுச் செல்லக் கூடும் என்று நான் புரிந்து கொண்டிருக்கிறேன்-மொர்).
சீனக் கலாச்சாரப் புரட்சியின் மிகப் பெரிய தத்துவார்த்த விவாதமாக இது இருந்தது. சீனாவில் உள்ள மிகப் பெருமளவு சிறு சரக்கு உற்பத்தியாளர்கள் இருப்பதால் அவர்களுக்கிடையில் ஏற்படும் உள் வேறுபாடுகள் மூலம் முதலாளி வர்க்கம் உருவாவதற்கான நிலையை உருவாக்கும் என்கிற அச்சம் சாங்க் சுன் சியோ, வாங்க் ஹ§ன் வென், யாவோ வென் யுவான் மற்றும் சியாங்க் சிங்க் (நால்வர் கும்பல் எனப் பொருள்படும் 'கேங்க் ஆப் போர்') ஆகியோரைப் பீடித்திருந்தது. உண்மையில் இந்த அச்சம் ஆளும் கம்யூனிஸ்ட் ஆட்சிகளை எங்கெங்கும் நீண்ட காலம் பீடித்திருந்தது. அதன் காரணமாக அவை முதலாளித்துவம் மீண்டு விடும் என்கிற அச்சத்தால் சிறு உற்பத்தியின் வாய்ப்பெல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தின; உதவிக்கு சில வேலையாட்களை அமர்த்திக் கொண்டு குடும்பங்கள் ஈடுபடும் சிறு உற்பத்தியையும் அவை கண்டு அஞ்சியவற்றில் அடங்கும். இது பொருளாதாரத்தை கணிசமான அளவு சேதப்படுத்துவதற்கு மூலகாரணமாக இருந்தது. உண்மையில், கியூபாவில் மிகச் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் இதைச் சரி செய்வதற்காகத்தான் (என்றபோதிலும், கியூப சீர்திருத்தத்தை அப்படியே ஆதரிக்கும் அளவிற்கு எனக்கு விவரம் தெரியாது).
என்றபோதிலும், சிறு உற்பத்தியாளர்கள் மத்தியில் ஏற்படும் வேறுபாடுகள் காரணமாக முதலாளித்துவம் மீண்டு விடும் என்கிற இந்த அச்சம் மிகப் பெருமளவு மிகைப்படுத்தப்பட்டதாகும்; முதலாளித்துவம் மணிக்கணக்கில், நாள்கணக்கில் தனக்குள் வளர்கிறது என்று உற்பத்தி குறித்து லெனின் நெத்தியில் அடித்தாற்போல் கூறியிருந்தபோதிலும் இந்த அச்சம் பெருமளவு மிகைப்படுத்தப்பட்டதாகும் (லெனினின் கூற்று வழக்கமாக சந்தர்ப்ப சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாத வகையில் புரிந்து கொள்ளப்படுகின்றது). நடைமுறையில் கம்யூனிஸ்ட் ஆட்சிகளில் ஏற்பட்ட பெரும்பாலான அதி தீவிர இடதுசாரி திரிபு என்கிற எதிர்மறையான விளைவுக்கு இந்த அச்சமே மூலகாரணமாகும். இது மிகைப்படுத்தப்பட்டது என்று நான் கருதுவதற்குக் காரணம் இந்த வழியில் முதலாளித்துவம் தோன்றுவதென்பது மிக நீண்ட நெடுங்காலம் நீடிக்கக் கூடிய ஒரு போக்காகும்; அதாவது, முற்றிலும் பொருளாதார நோக்கில் பார்த்தால், அதனால் தன்னளவிலேயே சோஷலிச அமைப்பிற்கு உண்மையிலேயே ஒரு ஆபத்தாக ஆகமுடியாது.
மாரிஸ் டோப்பும் கூட, 'முதலாளித்துவ வளர்ச்சி குறித்த ஆய்வுகள்' (ஸ்டடிஸ் இன் தி டெவலப்மென்ட் ஆப் கேபிடலிசம்) என்கிற தன்னுடைய பிரசித்தி பெற்ற நூலில் ஆதி மூலதனத் திரட்டல் வகிக்கும் பாத்திரத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து, இந்த குறிப்பிட்ட வழிக்கு அழுத்தம் கொடுத்தார்; அதாவது, மரபான முதலாளித்துவத்தின் வரலாற்று ரீதியான தோற்றமே சிறு சரக்கு உற்பத்தியாளர்களுக்கு இடையில் ஏற்படும்  வேறுபாடுகளிலிருந்து நிகழ்ந்தது என்றார்; கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் இந்த மொத்த நிகழ்போக்கும் நடந்தது என்று கருதினார்! நமது சொந்த நாட்டில் பல நூற்றாண்டுகளாக, ஏன் ஆயிரம் ஆண்டுகளாக, சிறு சரக்கு உற்பத்தியாளர்கள் இருந்து வருகிறார்கள்; ஆனால், அத்தகைய உற்பத்தியாளர்களுக்கு இடையில் ஏற்படும்  வேறுபாடுகளின் மூலம் முதலாளித்துவ வளர்ச்சியை நோக்கிய குறிப்பிடத்தக்க வரலாற்று ரீதியான போக்கு எதுவும் இல்லாமலேயே, அதாவது 'கீழிருந்து முதலாளித்துவம்' தோன்றும் போக்கு  எதுவும் இல்லாமலேயே, இருந்து வருகிறார்கள்.
சொத்துறவுகள் மாற்றப்பட்டிருந்த போதிலும் அதற்குள் பழைய சமூகம் தொடர்ந்து நீடித்து இருப்பதால் சமூக மாற்றத்திற்கு ஏற்படக் கூடிய ஆபத்து இப்பிரச்சனையின் மற்றொரு பரிமாணமாகும்; குறைவான கவனத்தையே பெற்றுள்ள இது மொத்த தத்துவார்த்த நம்பிக்கைகள் மற்றும் சமூக-கலாச்சார நடைமுறைகள் (அல்லது பழக்க வழக்கங்கள்-மொர்) சம்பந்தப்பட்டதாகும். சோஷலிசத்தை நோக்கிய பயணத்தில் அவை பெரிய தடைகளாக இருப்பது மட்டுமின்றி, அத்துடன் முதலாளி வர்க்க அல்லது முதலாளித்துவ வர்க்கமாக ஆகக் கூடிய சக்திகளை உண்டாக்கக் கூடிய சிறு சரக்கு உற்பத்தியாளர்களுக்கு இடையில் வேறுபாடுகளை உண்டாக்கும் போக்கையும் சேர்த்துக் கொண்டால், அவை கிட்டத்தட்ட கடந்து செல்ல முடியாத தடைகளாக ஆக முடியும். அதனினும் கூடுதலாக, முதலாளித்துவம் தாமதமாக வளரும் சமுதாயங்களில் தோன்றும் புதிய சமூகம் பழைய சமூகத்தின் தத்துவார்த்த பார்வைகள் மற்றும் சமூக-கலாச்சார நடைமுறைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டதாக இருப்பதில்லை; இந்த பார்வைகளைத் தகர்க்கும் புதிய சமூகத்தின் ஆற்றல் அதற்கேற்றவகையில் வலுவிழந்து விடுகின்றது; இது, எடுத்துக் காட்டாக, பாட்டாளி வர்க்கத் தலைமையின் மிகவும் முன்னேறிய பிரிவினர் மத்தியிலும் கூட நிலப்பிரபுத்துவ பண்புகள் தோன்றுவதற்கு வழிவகுக்கிறது. இதன் நிகர விளைவு முதலாளித்துவம் மீட்டுருவாக்கப்படுவதற்கான நிலைமைகளை உருவாக்கும் சமூக தேக்க நிலையாக இருக்கலாம். ஆனால், அதி தீவிர இடதுசாரிகள் அச்சப்படுவதைப் போல் முதலாளித்துவம் கீழிருந்து மீளாது; ஆனால், ஏகாதிபத்தியம் தலையிடுவதற்குச் சாதகமான நிலைமைகளை உருவாக்குவதன் மூலம் முதலாளித்துவம் மீட்டுருவாக்கப்படுவதற்கான நிலைமைகளை உண்டாக்கும்.
இந்தக் கருத்தை விளக்க ஒரு கற்பிதமான விஷயத்தை பரிசீலிப்போம். சாதி அமைப்பு நிலப்புரபுத்துவ ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்குச் சேவை செள்கிறது என்றபோதிலும், நாட்டுப்புறத்தில் சொத்துறவுகளை மாற்றும் ஒரு புரட்சியின் மூலம் இந்த ஆளும் வர்க்கம் அகற்றப்பட்டாலும், அதன் காரணமாகவே சாதி அமைப்பு அகற்றப்பட்டுவிடாது. பழைய சமூகத்தை வரையறுக்கும் ஒரு பண்பியல்பாக அமைந்திருக்கும் சாதி அமைப்பின் முந்தைய பாதுகாவலர்களாக இருந்த பிரதான ஆளும் வர்க்கமான நிலப்பிரபுக்கள் (அல்லது முதலாளி வர்க்கமாக ஆகக் கூடியவர்கள்) அகற்றப்பட்டாலும் அந்த அமைப்பு தொடருகின்றது. சாதி அமைப்பின் விஷயத்தில், பழைய சமூகத்தைச் சேர்ந்த ஒப்பீட்டளவில் வளமான சிறு சரக்கு உற்பத்தியாளர்களின் மத்தியிலிருந்துதான் பெரும்பாலும் புதிய பாதுகாவலர்கள் தோன்றுகிறார்கள்; தங்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த முந்தைய சுரண்டும் வர்க்கம் ஒழிக்கப்பட்டுவிட்ட காரணத்தினால் அவர்களுக்குத் தங்களது நிலைமையைப் பலப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இப்போது இருக்கிறது; நாட்டுப்புறத்தில் உள்ள சிறு சரக்கு உற்பத்தியாளர்களுக்கு இடையில் வேறுபாடுகள் ஏற்படும் போக்கு அவர்களுக்குச் சாதகமாக இருப்பதால் இந்த வாய்ப்பை அவர்கள் உணர்ந்தும் இருக்கிறார்கள்.
வேறு வார்த்தைகளில் கூறினால், தத்துவார்த்த பார்வைகளையும், கலாச்சார நடைமுறைகளையும் அவற்றுக்கு அடிப்படையாக இருக்கின்ற சொத்துறவுகளுக்கு நேரடியாக உட்பட்டவையாக ஆக்க முடியாது என்கிற சந்தேகத்திற்கு இடமற்ற உண்மைக்கு அப்பாற்பட்டு, அவற்றுக்கென்று சொந்தமாக ஒரு வாழ்வு இருக்கிறது இருக்கின்றது; இந்த சொத்துறவுகளையும் தாண்டி வெகு காலம் நீடித்திருக்கும் தன்மையும் அவற்றுக்கு இருக்கின்றது; அத்தகைய தத்துவார்த்த பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளின் பொருயாளத வேர்களே முந்தைய சுரண்டும் வர்க்கம் அகற்றப்பட்ட பின்னரும் ஊட்டம் பெறுவது உண்டு; சுரண்டும் வர்க்கம் அகற்றப்பட பின்னரும் என்பது மட்டுமின்றி, அப்படி அகற்றப்படுவதனாலேயே ஊட்டம் பெறுவது உண்டு. பாட்டாளி வர்க்கத்தின் முன்னேற்றமடைந்த தலைமை அத்தகைய ஊட்டம் பெறுதலுக்கு எதிராகச் செயல்படுவதற்காகத் தலையிடும் என்கிற நம்பிக்கையும் பல்வேறு காரணங்களால் பொய்த்துப் போகலாம்: முதலாவதாக, அந்த முன்னேறிய தலைமையே இத்தகைய தத்துவார்த்த பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகள் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டதாக இல்லாமல் இருக்கலாம். புரட்சியை நடத்தும் முதல் தலைமுறை தலைமை இத்தகைய பார்வைகள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்றதாக இருந்தபோதிலும், அதைத் தொடர்ந்து வரும் தலைமுறைகள் விஷயத்தில் அது உண்மையாக இல்லாமல் போகலாம்; குறிப்பாக, வேறு எங்கும் இது போல் புரட்சியைத் துண்டாமல் புரட்சி தனிமைப்படுத்தப்பட்டதாக இருந்தால் இப்படி ஆகலாம். இரண்டாவதாக, அத்தகைய தனிமைப்படுத்தப்பட்ட, சுற்றி சூழப்பட்ட நிலைமைகளில் மேலும் சிக்கலை உண்டாக்காமல் இருக்க வேண்டிய காரணத்தால், பழைய சமூகத்தின் தத்துவார்த்தப் பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளுடன் ஒரு வகையான சமரசத்திற்கு வரவேண்டிய நடைமுறைத் திட்ட நிர்ப்பந்தம் (tணீநீtவீநீணீறீ ஜீக்ஷீமீssuக்ஷீமீ) மிக அதிகமாக இருக்கும்; எதிரிகளால் சூழப்பட்ட தலைமை அத்தகைய நிர்பபந்தங்களுக்கு பலியாகும் சாத்தியம் மிக அதிகம்.
இன்னும் நுட்பமான மூன்றாவது காரணம் ஒன்றும் உண்டு. பழைய சமூகத்திலிருந்து புதிய சமூகத்திற்கு மாறிச் செல்வதன் பயனாக தனிநபர் விடுதலை அடையும் போக்கும் நிகழ வேண்டும். வரலாற்றின் போக்கைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் சிந்திக்கும் ஒரு தனிநபராக தன்னுணர்வுடன் அவர் புதிய சமூகத்திற்குள் நுழைகிறார். புரிதல் அதிகரிக்க, அதிகரிக்க புதிய சமூகத்தின் தேவை பற்றிய தனிநபரின் புரிதலும், அதன் மீதான பற்றுறுதியும் அதிகரிக்கின்றது. ஆதலால், பழைய சமூகத்திற்கும் புதிய சமூகத்திற்கும் இடையில் ஒரு அடிப்படையான வித்தியாசம் இதில் இருக்கின்றது: பழைய சமூகம் தனிநபரை நசுக்குகிறது, புதிய சமூகம் தனிநபரை விடுதலை செய்வதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆனால், சுற்றி வளைக்கப்பட்ட ஒரு சோஷலிச ஆட்சியில், மீண்டும் நடைமுறைத் திட்ட காரணங்களுக்காக, தலைமை எடுக்கும் முடிவுகள் எளிதில் சட்டமாவதை உறுதிப்படுத்துவதற்காக தனிநபரைக் கட்டுப்படுத்தி வைக்கும் போக்கு வலுவாக இருக்கும். புதிய சமூகத்திற்குள்ளும் இப்படி தனிநபரைக் கட்டுப்படுத்தி வைப்பது, அனைத்து வகையிலும் பிற்போக்குத்தனத்திற்குக் கீழ்ப்படியும் தன்மையை உண்டாக்குவதற்காக பழைய சமூகம் தனிநபரை அடக்கி வைக்கிறதே அதற்கு வலு சேர்க்கக் கூடும்; இது புரட்சியின் முன்னேற்றத்திற்கு தீங்கு செய்யும்.
ஒரு பக்கம் 'ஜனநாயக மத்தியத்துவக்' கட்சியில் கலப்பற்ற மத்தியத்துவத்தை நோக்கிச் செல்லும் போக்கும்,  மறுபக்கம் மக்கள் அரசியல் நீக்கம் மற்றும் செயல் நீக்கம் செய்யப்படும் போக்கும் உள்ளார்ந்த இயல்பாக அமையப் பெற்றிருப்பது பற்றி பலர், குறிப்பாக ரோசா லக்சம்பர்க், குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இந்த விஷயத்தில் யார் என்ன நிலைப்பாடு எடுத்தாலும், பழைய சமூகத்தின் தத்துவார்த்தப் பார்வைகளும், கலாச்சார நடைமுறைகளும் பலவீனப்படுத்தப்படாமல் இருக்கும் வரலாற்றுச் சூழலில் இது நிகழ்வதற்கான வாய்ப்பு மிகவும் அதிகரிக்கும் என்கிற உண்மையை சந்தேகிக்க முடியாது. சிறு உற்பத்தியில் உள்ளார்ந்ததாக இருக்கின்ற முதலாளித்துவப் போக்கு பற்றியும், அது கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக் கூடும் என்பது பற்றியும் சீனக் கலாச்சாரப் புரட்சிக்குள் விவாதம் நடந்தது என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம் (அதனால்தான் 'முதலாளிகள் கட்சிக்குள்ளேயே இருக்கிறார்கள்' என்றும், 'தலைமையகத்தின் மீது குண்டு வீசு' என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன). கலாச்சாரப் புரட்சி பற்றி நால்வர் குழுவால் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கண்ணோட்டத்திற்கு மாறாக ஒரு மாற்றுக் கண்ணோட்டத்தை எட்கர் ஸ்நோவிற்கு அளித்த பேட்டியன்றில் சூ என் லாய் தெளிவாக விளக்கியிருந்தார்; பழைய பாரம்பரிய சீனாவிலிருந்து எஞ்சியிருந்த மூடநம்பிக்கைகள், சமூக பிற்போக்குத்தனம், பண்டைய பழக்க வழக்கங்கள், அதாவது 'தத்துவார்த்த பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகள்' என்று நான் அழைத்தவற்றின் அச்சுறுத்தல் காரணமாக கலாச்சாரப் புரட்சி எழுகின்றது என்றார்.
இந்த இரண்டு கண்ணோட்டங்களும் தனித்தனியானவையும் அல்ல; ஒன்றுக்கொன்று ஒவ்வாதவையும் அல்ல; அதற்கு மாறாக, ஏற்கனவே குறிப்பிட்டபடி, பழைய சமூகம் நீடித்திருப்பதும் புதிய சமூகம் உருத் திரிக்கப்படும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றது. இவற்றில் எதுவும் செம்படையினர் பயனற்ற வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டதை நியாயப்படுத்தும் வாதம் இல்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை; பிற்போக்குத்தனமான கீழ்ப்படிதலைப் போலவே அதற்கு ஒரு மாற்றாக தனிநபர் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய சமூகத்தை நிறுவுவதற்காக தனி நபரை விடுதலை செய்யும் திறன் செம்படைக்கும் இல்லை; பழைய சமூகத்தின் அடிப்படையான சில தத்துவார்த்த பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளிலிருந்து முறித்துக் கொள்ளாமல் சோஷலிசத்திற்கு மாறிச் செல்வது என்பது சாத்தியமில்லை என்பதை மட்டுமே இங்கே வலியுறுத்துகிறோம். மரபான முதலாளித்துவத்தின் கீழ் நிகழ்ந்ததைப் போல், பழைய சமூகம் அழிக்கப்படுவதன் மூலம் இந்த முறிவு தற்செயலாக நிகழ்த்தப்படாத ஒரு உலகில், புதிய சமூகத்தின் அங்கக அறிவுஜீவிகளின் கலாச்சாரத் தலையீட்டின் மூலம் அது முயற்சிக்கப்பட வேண்டும்.
அத்தகைய தலையீட்டின் நோக்கம் ஆணாதிக்கம், ஒதுக்கிவைத்தல், சிறுபான்மையினர் எதிர்ப்பு (நம்முடைய விஷயத்தில் வகுப்புவாதமும் இதற்குள் அடக்கம்), சாதி அமைப்பு மற்றும் அது போன்றவையும், 'பிறரின்' மீது கடும் வெறுப்பு (பிற நாட்டவர்-இனத்தவர்-மதத்தவர்-இன்னபிற), மற்றும் அனைத்து வகையான குறுகிய உள்ளூர்வாதங்கள் ஆகியவற்றிலிருந்து முறித்துக் கொள்வதாக மட்டுமின்றி, எல்லாவற்றுக்கும் மேலாக, பழைய சமூகத்தில் முடக்கிப் போடப்பட்டிருக்கும் தனிநபரை விடுவிப்பதாக இருக்க வேண்டும். மக்களை அவர்களது இக்கட்டான உண்மை நிலைமையை உணரச் செய்வதன் மூலம் சுரண்டலுக்கு எதிராகச் செயல்படத் தூண்டுவது கலாச்சார தலையிட்டின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அத்துடன், அடக்குறையிலிருந்து தனிநபர் விடுவிக்கப்படுவதற்காகவும், மற்றும் அந்தக் காரணத்தால் மதம், சாதி, பாலின ஒடுக்குமுறைகளை உண்டாக்கும் இயங்குமுறைகளிலிருந்து விடுவிக்கப்படுகின்ற வகையில் தத்துவார்த்தப் புரிதலை தனிநபர் பெறுவதற்கும் பழைய அமைப்பின் தத்துவார்த்த பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகள் ஆகியவற்றுக்கு எதிராகப் போராட வேண்டிய பணியும் அதற்கு இருக்கிறது.

3

முதல் பார்வைக்கு இந்த வாதம் விநோதமாகத் தோன்றலாம். சோஷலிசத்திற்கு மாறிச் செல்ல முயற்சிக்கும் ஒரு சமுதாயத்தின் முற்போக்கு கலாச்சார இயக்கத்தின் நோக்கம் நிச்சயமாக சோஷலிசக் கலாச்சார விழுமியங்களை அறிமுகப்படுத்துவதாகத்தான் இருக்க வேண்டும். இந்த அம்சத்தை நான் ஏன் இன்னும் குறிப்பிடவில்லை? இந்தப் புரிதலை கேள்விக்குள்ளாக்கவே இக்கட்டுரை முயற்சிக்கிறது என்பதுதான் காரணம்.
முந்தைய உற்பத்தி முறைகளை ஒத்தது அல்ல சோஷலிச உற்பத்தி முறை; ஆதலால், சோஷலிசத்திற்கு மாறிச் செல்வது என்பது மற்ற உற்பத்தி முறைகளுக்கு மாறிச் சென்ற வரலாற்று அனுபவத்தை மறு பிரதி எடுப்பதாக மட்டும் இருக்க முடியாது. முந்தைய அனைத்து உற்பத்தி முறைகளும் அவை நடப்பிற்கு வந்தபோது மக்கள் எந்த நோக்கத்திற்காக முந்தைய அமைப்பிற்கு எதிராகப் போராடினார்களோ அதற்கும், உண்மையில் அவர்கள் என்ன சாதித்தார்களோ அதற்கும் இடையில் நேரெதிர் வேறுபாடு இருந்ததே அவற்றின் தன்மையாக இருந்தது. சுருக்கமாகச் சொன்னால், முந்தைய அனைத்து உற்பத்தி முறைகளின் பலனாக மனிதகுலம் தன்னால் எந்த வகையிலும் கட்டுப்படுத்த இயலாத ஒரு வரலாற்று இயக்கத்திற்குள் சிக்கிக் கொண்டது. அதற்கு மாறாக, சோஷலிசம் வரலாற்று வலையில் மனிதகுலம் சிக்காமல் தப்பிப்பதை உறுதிப்படுத்துகிறது; மக்கள் கூட்டாக மேற்கொள்ளும் வரலாற்றுச் செயல்களின் நோக்கத்திற்கும், அத்தகைய செயல்களின் உண்மையான விளைவுகளுக்கும் குறிப்பிடத்தக்க அளவும், மேலும் மேலும் அதிகரிக்கும் அளவும் நிகழ்வுப் பொருத்தம் இருக்கின்றது. மனிதனின் நிலை பற்றிய சரியான தத்துவார்த்தப் புரிதலை அடிப்படையாகக் கொண்ட கூட்டுச் செயல்பாட்டின் மூலம் அது தன்னிச்சையான தன்மையை முடிவற்குக் கொண்டு வருகின்றது. இந்தக் காரணத்திற்காக, சோஷலிசம் தவிர்க்க முடியாதது அல்ல; வரலாறு தன்னுடைய சொந்த இயக்கத்தால் தானே மனிதகுலத்தை சோஷலிசத்தை நோக்கித் தள்ளுவதும் இல்லை. சரியான தத்துவார்த்தப் புரிதலை ஆதாரமாகக் கொண்ட நடைமுறையின் அடிப்படையில் அது திட்டமிட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.
எனவே, சோஷலிசத்திற்கான போராட்டம் என்பது ஒவ்வொரு தனிநபரும் மேற்கொள்ளும் தீவிரமான தத்துவார்த்த முயற்சியால் குறிக்கப்படுகிறது; சோஷலிச விழுமியங்கள் அல்லது சோஷலிசக் கலாச்சாரம் என்று அழைக்கப்படும் கூழாங்கற்களால் அவர்களது மனங்கள் நிரப்பப்படுவதைக் குறிக்கவில்லை. 'சோஷலிசக் கலாச்சாரம்' அல்லது 'சோஷலிச விழுமியங்கள்' என்று கொடுக்கப்படுபவற்றை உட்கொள்ள வேண்டும் என்பது உழைக்கும் மக்கள் தாங்களே சமூக மாற்றத்தில் நேரடி பாத்திரம் வகிப்பதற்கு எதிரானதாக இருக்கின்றது; அவர்களை செயலாற்றுபவர்களாக இல்லாமல் செயலின் இலக்குகளாகக் கருதும் அர்த்தம் இதில் தொக்கி நிற்கிறது; இது சோஷலிசத்தின் நோக்கத்தையே தோற்கடிக்கின்றது.
வேறு விதமாகக் கூறினால், சோஷலிசக் கலாச்சாரம் அல்லது சோஷலிச விழுமியங்கள் என்பவை தத்துவார்த்த நடைமுறைகள் மூலம் மக்கள் வந்தடைகிறவையாகும்; இதற்காக இந்த சொற்களின் உள்ளடக்கம் என்னவென்பது பற்றி பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிக் கூறுகளாலும், தத்துவார்த்த நடைமுறையில் ஈடுபட்டுள்ள அரசியல் அமைப்புகளாலும் விவாதங்கள் துவங்கப்பட வேண்டும். ஆனால் மக்கள் மத்தியில் பரப்ப வேண்டிய விஷயங்களாக அவற்றைப் பார்ப்பது ஒரு கருத்தை பொருளாக மாற்றுவதற்கு ஒப்பாகும். சோஷலிசத்தை நோக்கிய முன்னேற்றத்திற்கு உதவுகிறேன் என்கிற பெயரில் அது சோஷலிசத்தை வழிமறித்து தாக்கும். ஆதலால், சோஷலிசக் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்குத் தேவைப்படுவது என்னவென்றால், மக்கள் தன்னுணர்வுடன் தத்துவார்த்த நடைமுறையில் ஈடுபடுகின்ற வகையில் பழைய சமூகத்தின் பிண கனத்திலிருந்து அவர்கள் விடுவிக்கப்படுவதாகும்; முன்னர் விவாதிக்கப்பட்டபடி, பழைய சமூகத்தின் ஒடுக்குமுறையிலிருந்து தனிநபர் விடுவிக்கப்படுவதும், பாரம்பரியத்தின் பிண கனத்திலிருந்து பகுத்தறிவு விடுவிக்கப்படுவதும் அதற்குத் தேவைப்படுகிறது.


4

இது வரை சோஷலிசத்திற்கு மாறிச் செல்வது பற்றி நான் பேசிக் கொண்டிருந்தேன். சோஷலிசத்திற்கு மாறிச் செல்வதில் ஈடுபடாத, ஆனால் அதற்குப் பதிலாக மிகத் தீவிரமாக முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகள் குறித்து என்ன சொல்ல முடியும்?
இங்கும், இதர மூன்றாம் உலக நாடுகளிலும் வளர்ந்து கொண்டிருக்கும் முதலாளித்துவத்தில் வழக்கத்திற்கு மாறான முரண்பாடு இருக்கின்றது. சிறு உற்பத்தியாளர்கள் மீது இந்த முதலாளித்துவம் திணிக்கும் நெருக்கடி ஈவிரக்கமற்றதாக இருக்கும் அதே வேளையில் (கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்), கிட்டத்தட்ட மார்க்ஸ் வகுத்தது போலவே, பணியில் அமர்த்தப்பட்ட கூலித் தொழிலாளர்களின் படையை பெரிதாக்கும் அதன் ஆற்றல் மிகவும் வரம்பிற்கு உட்பட்டதாகவே இருக்கிறது. அதன் விளைவாக, சிறு உற்பத்தியாளர்கள் ஒன்று இன்னும் கடுமையான துன்பத்திலும், பரிதாப நிலையிலும் தங்களது பாரம்பரிய தொழிலில் நீடித்திருக்க வேண்டும் அல்லது நகரங்களுக்குக் குடிபெயர்ந்து உதிரி கூலித் தொழிலாளர்கள் படையில் சேர்ந்து, 'முறைசாராத் துறை' என்று நயமாக அழைக்கப்படும் துறையில் பல்வேறு வகையான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
முதலாளித்துவத் துறையில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அவல நிலையில் உள்ள சிறு உற்பத்தியாளர்கள் தங்களது பாரம்பரியமான தொழில்களில் நீடித்திருக்கும் வரையில், பழைய சமூகத்தை அழிக்க முடியாது. சிறு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை முதலாளித்துவம் அபகரித்துக் கொள்வதும், தாங்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான அளவு கூட மறுஉற்பத்தி செய்ய முடியாத நிலைமைக்கு அது சிறு உற்பத்தியாளர்களைத் தள்ளுவதும், மரபான முதலாளித்துவத்தில் போல், பழைய சமூகம் அழிக்கப்படுவதற்கு இட்டுச் செல்வதில்லை. முதலாளித்துவத்தால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கின்ற வரையில், புதிய சமூகம் உருவாவது தடைப்பட்டிருக்கும்; அதுவும் பழைய சமூகத்தின் தத்துவார்த்தப் பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகள் தொடர்வதற்கு உதவும்.
சுருக்கமாகக் கூறினால், முதலாளித்துவ வளர்ச்சி தீவிரமாக இருந்த போதிலும், சிறு உற்பத்தியாளர்கள் பொருளாதார ரீதியாகக் கசக்கிப் பிழியப்பட்ட போதிலும், பழைய சமூகத்தின் தத்துவமும், கலாச்சார நடைமுறைகளும் போதுமான அளவு அழிக்கப்பட்டிருக்காது. இறுதியாக, 'முறைசாராத் துறை வேலை வாய்ப்பு' (இன்பார்மல் செக்டர் எம்பிளாய்மென்ட்) அல்லது 'எப்போதாவது வேலை' (கேஷீவல் ஒர்க்) என்கிற பெயரில் உதிரித் தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக, ஒரு கீழ் வர்க்கம் அல்லது பொறுக்கி வர்க்கம் உருவாக்கப்படுகின்றது; அது இனவாத மற்றும் வகுப்புவாத பாசிச தத்துவங்களுக்கு எளிதில் பலியாகிவிடுகின்றது; அல்லது அவர்களை அத்தகைய தத்துவங்களைக் கொண்டுள்ள இயக்கங்களின் முன்னணி தொண்டர்களாக எளிதில் மாற்றிவிட முடியும். ஒரு வகையில் இந்த தத்துவங்கள் 'நவீனமானவையாக' (நிதி மூலதனத்தின் நேரடி ஆதரவைப் பெற்றுள்ள தத்துவங்கள் என்கிற வகையில் அவை நிச்சயமாக நவீனமானவைதான்) இருந்தபோதிலும், பழைய சமூகத்தின் தத்துவார்த்தப் பார்வைகளின் வழிமரபாக வந்தவையாக இருக்கின்றன.
எனவே, முதலாளித்துவம் பாரம்பரியமாக செய்து வந்து கொண்டிருந்த வேலையான, தனிநபரை அவரது சாதி அல்லது மதக் குழுவின் வேர்களிலிருந்து விடுவிப்பதும் கூட இந்தியா போன்ற நாடுகளில் வளரும் முதலாளித்துவத்தால் செய்து முடிக்கப்படாமல் இருக்கின்றது; அதிகமான உள்நாட்டு உற்பத்தியால் அந்த வளர்ச்சியின் தீவிரம் வெளிப்படுத்தப்பட்ட போதிலும் இதுதான் நிலைமை. பழைய சமூகத்திற்கு அடிமைப்பட்டடிருப்பதிலிருந்து தனிநபர் இப்படி முறையாக விடுவிக்கப்படுவது 'நவீனத்துவத்தின்' அடையாளமாக இருப்பதனால், இந்தியாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி அது எவ்வளவு வேகமானதாக இருந்தபோதிலும், அது 'நவீனத்துவத்தைக்' கொணரத் தவறுகின்றது. ஒரு பக்கம் பகட்டான மாபெரும் பேரங்காடிகளும் (சூப்பர் மால்கள்), தேவையைவிடப் பெரிதான வாகனங்களும் மறுபுறம் கப் பஞ்சாயத்துகளும், பெண் கருக் கொலைகளும் அக்கம் பக்கமாக வாழ்கின்ற ஒரு விநோதமான நிலைமையை அது உண்டாக்குகின்றது; அந்த பேரங்காடிகளுக்கு அடிக்கடி வருகிற அல்லது அந்த வாகனங்களை வைத்திருக்கிற அதே நபர்கள் கப் பஞ்சாயத்துகள் மற்றும் பெண் கருக்கொலைகளின் ஆதரவாளர்களாக இருக்கின்றார்கள்.
அத்தகைய நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தும் மரபான முதலாளித்துவத்தின் ஆற்றல் அது பழைய சமூகத்தை அழிக்கும்போது அதன் விளைவாக வேலையின்மையும், போதுமான வேலையின்மையும் (அன்டர் எம்பியாய்மென்ட்) பெருகிவிடாமல் உறுதிப்படுத்துவதற்கான அதன் ஆற்றலைப் பொருத்தே இருக்கின்றது; இந்த ஆற்றல் முதலாளித்துவத்தின் உள்ளியல்பான இயங்குவிசையில் அமையப் பெற்றிருக்கிறது என்று வழக்கமாக மார்க்சிஸ்டுகளால் கூறப்படுகின்றது. ஆனால், இந்தக் கருத்து வரலாற்று நிலைமை சரியாகப் புரிந்து கொள்ள்ளப்பட்டதைச் சுட்டவில்லை என்பது என் கருத்து. சிறு உற்பத்தி அழிக்கப்படுவதாலேயே கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகிவிடவில்லை என்பதற்குக் காரணம் மரபான முதலாளித்துவம் வளச்சியடைந்த நாடுகளிலிருந்து 'புதிய உலகைச்' சேர்ந்த நாடுகளுக்கு மிகப் பெருமளவு மக்கள் குடியேறியதாகும். எடுத்துக் காட்டாக, முதலாம் உலகப் போர் வரையில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் மிதமான தட்பவெப்ப நிலையுள்ள வெள்ளைக் குடியேற்றங்களான அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு ஒவ்வொரு வருடமும் பிரிட்டனில் அதிகரிக்கும் மக்கள் தொகையில் சுமார் பாதி பேர் குடிபெயர்ந்தனர். 19ம் நூற்றாண்டு மத்தியிலிருந்து முதலாம் உலகப் போர் வரையிலான காலகட்டத்தில் ஐரோப்பாவிலிருந்து ஐந்து கோடி பேர் இந்த மிதமான தட்பவெப்ப நாடுகளுக்குக் குடிபெயர்ந்தனர்; அங்கு பூர்வகுடிகளை அவர்களது நிலங்களை விட்டு விரட்டி விட்டு, அந்த நிலங்களில் விவசாயம் செய்யத் துவங்கினர்.
அப்படி நிலங்கள் கிடைத்ததும், அதனால் குடிபெயர்வதன் மூலம் ஒப்பீட்டளவில் உயர்வான வாழ்க்கை தரத்தை அனுபவிக்கலாம் என்பதும் தாய்நாட்டில் உள்ள தொழிலாளர்கள் தங்களது முதலாளிகளிடமிருந்து ஊதிய உயர்வு பெற்றதற்குக் காரணமாகும். மற்றும், ஆம், அது பழைய சமூகத்தை அழிப்பதையும், தனிநபரை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதையும் சாத்தியமாக்கியது. முதலாளித்துவத்தின் உள்ளியல்பான வரலாற்று இயங்குவிசை என்று சொல்லப்படுவதன் காரணமாக நடந்தது என்று கூறப்படுவதை சற்று நெருக்கமாகப் பார்த்தால் அது எஞ்சிய உலகின் மீது தனது கட்டுப்பாட்டை நிறுவும் முதலாளித்துவத்தின் ஆற்றலினால் நிகழ்ந்ததாகவே பெரும்பாலும் இருக்கின்றது. இப்போது நாம் விவாதிக்கும் விஷயமும் அத்தகைய ஒரு நிகழ்வின் எடுத்துக் காட்டாகும்.  
ஆதலால், இந்தியா போன்ற நாடுகளில் பழைய சமூகத்திற்கு அடிமைப்பட்டு இருக்கும் தனிநபரை முதலாளித்துவத்தால் விடுதலை செய்ய முடியாமல் இருப்பது, உலகத்தை காலனிமயப்படுத்துவதில் முதலாளித்துவத்திற்கு மேற்கொண்டு வாய்ப்புகள் இல்லை என்கிற உண்மையுடன் தொடர்புடையதாகும். நிலப்புரபுத்துவ சொத்துடமையை மட்டுமின்றி பழைய சமூகத்தையே அழித்த முதலாளித்துவ வளர்ச்சியின் வரலாற்றுக் கடமையை முதலாளித்துவம் பொருளாதார ரீதியாக எவ்வளவு வேகமாக வளர்ந்தாலும் அதனால் இந்த நாடுகளில் சாதிக்க முடியாது. இந்த இரட்டைக் கடமையை சோஷலிசத்திற்காகப் போராடும் சக்திகள் செய்து முடிக்க வேண்டும்.
ஆதலால், இந்த சக்திகளுடன் தொடர்புள்ள முற்போக்கு கலாச்சார இயக்கம் தன்னுடைய தளத்தில் பணக்கார நிலவுடமை நலன்களுடன் அணி சேர்ந்துள்ள முதலாளிகள் தலைமை வகிக்கும் சுரண்டல் அமைப்பிற்கு எதிராக மட்டுமின்றி, பழைய சமூகத்தின் தத்துவார்த்த பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளுக்கு எதிராகவும் போராட வேண்டும்; சாதி, ஆணாதிக்கம், வகுப்புவாதம் மற்றும் பழைய சமூகத்தின் பாரம்பரியங்கள் என்றழைக்கப்படுபவற்றினால் நடக்கும் அனைத்து வகையான தனிநபர் ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து போராட வேண்டும். இந்த பிந்தைய போராட்டம் இன்றிலிருந்து புதிய சமூகம் நிலைநிறுத்தப்படும் வரையில் நீடிக்கும் நிரந்தரமான போராட்டமாகும். ஆனால் அத்தகைய ஒரு சமூக அமைப்பு நிறுவப்படுவது முடிவுற்ற ஒரு விஷயமல்ல என்பதாலும், ஒரு குறிப்பிட்ட தேதியில் முடிவுறுவதில்லை என்பதாலும், ஆனால் அது ஒரு முடிவற்ற நிகழ்போக்கு என்பதாலும், இந்த தத்துவார்த்தப் பார்வைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளுக்கு எதிரான போராட்டம் என்பது ஒரு நிரந்தரமான கலாச்சாரப் புரட்சியாக அமைகிறது.
சோஷலிசத்திற்கு மாறிச் செல்லும் புரட்சிகர போக்கின் ஒரு பகுதியாக ஒரு நாடு தற்கால உலக ஒழுங்கமைப்பிலிருந்து தன்னை துண்டித்துக் கொள்வது என்கிற எண்ணத்தையே பல மேற்கத்திய மார்க்சிய அறிஞர்கள் முற்றிலும் நிராகரிக்கிறார்கள். அத்தகைய துண்டித்துக் கொள்ளலுக்கு தத்துவார்த்த அடிப்படையாக இருக்க வேண்டிய தேசியவாதம் சம்பந்தப்பட்ட தேசத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் என்பதாலும், அதனால் பிற்போக்குத்தனமானதாக இருக்கக் கூடும் என்பதாலும் அவர்களது பார்வையில் சந்தேகத்திற்கு உரியதாக இருந்தது. (இந்தக் கருத்தை வலியுறுத்த ஸ்லோபடான் மிலோசவிச்-முன்னாள் செர்பிய ஜனாதிபதி-மற்றும் இதரர்கள் வழக்கமாக உதாரணம் காட்டப்படுகிறார்கள்). ஆனால், சர்வதேச நிதிமூலதனத்தின் மேலாதிக்கத்தின் கீழான உலகமயம் (இதைச் சுருக்கமாகக் கூறுவதற்கு 'ஏகாதிபத்திய உலகமயமாக்கல்' என்கிற சொல் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது) எதிர்க்கப்பட வேண்டுமானால், உழைக்கும் மக்களின் ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேசப் போராட்டம் இல்லாத நிலையில், அத்தகைய போராட்டங்கள் ஒரு தேசத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதைத் தவிர வேறு மாற்று ஏதுவும் இல்லை; அதனால், உலக ஒழுங்கமைப்பிலிருந்து துண்டித்துக் கொள்வது நிகழ்ச்சி திட்டத்தின் முக்கிய பகுதியாக இருப்பதற்கும் வேறு மாற்று இல்லை. உண்மையில், பல்வேறு நாடுகளில் நடக்கும் தொழிலாளர்களின் போராட்டங்களில் சிறிதும் ஒருங்கிணைப்பு இல்லை; விவசாயிகளுடைய போராட்டங்களுடனான ஒருங்கிணைப்பு என்கிற கேள்வி எழவே இல்லை.
ஏகாதிபத்திய உலகமயமாக்கலையும், அதன்  அடிப்படையான சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்தையும் எதிர்த்துப் போராட வேண்டுமானால் அதற்காக இருக்கும் ஒரே ஆயுதம் தனித்தனி நாடுகளில் தொழிலாளர்-விவசாயிகள் கூட்டணியின் மூலம், அந்தந்த நாடுகளுக்குள் சொத்துறவுகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக உலக ஒழுங்கமைப்பிலிருந்து துண்டித்துக் கொள்ளும் திட்டத்துடன் போராட்டங்களை நடத்துவதுதான். என்றபோதிலும், இதைக் கூறுவதனால், மேற்கத்திய மார்க்சிஸ்டுகள் எழுப்பிய அச்சங்களை புறந்தள்ளுகிறோம் என்று அர்த்தமல்ல. ஒரு நாட்டின் தனிமையால் அதன் புரட்சிகர மாற்றம் மூழ்கடிக்கப்படும் சாத்தியத்தை அத்தகைய துண்டித்துக் கொள்ளும் நிகழ்போக்கு தன்னுள்ளேயே கொண்டிருக்கின்றது. அதாவது, அது பழைய சமுதாயத்தில் வேர் கொண்டுள்ள பிற்போக்குச் சார்புகளை பலப்படுத்துவதில் முடியலாம். இதை வெற்றி கொள்வது சுலபமல்ல; ஆனால், அத்தகைய எந்த ஒரு புரட்சிகர நடைமுறையிலும், நிரந்தரமான கலாச்சாரப் புரட்சியின் ஒரு பகுதியாக, முற்போக்கு கலாச்சார இயக்கங்கள் ஒரு முக்கிய கூறாக அமைகின்றன.

குறிப்புகள்:
1. வேரா ஜாசுலிச்சிற்கு மார்க்ஸ் எழுதிய கடிதம், முதல் நகல்.
2. பால் ஏ. பாரன், பொலிடிக்கல் எகானமி ஆப் குரோத், மன்த்லி ரிவீவ்யூ பிரஸ், நியூயார்க், 1957.

(நன்றி: சோஷியல் சயின்டிஸ்ட், இதழ் எண்: 462-463)    
   
--------------------------------------------------------------------