Friday, June 17, 2011

எரிவாயு ஊழல்: இரட்டைக் கொள்ளை












அசோகன் முத்துசாமி







உலகமயம் செயல்படுத்தப்பட்ட பின்பு ஊழல்களின் எண்ணிக்கையும், சுருட்டப்படும் மக்கள் சொத்தின் அளவும் அதிகரித்துவிட்டது நாம் அனைவரும் ஏற்கனவே அறிந்ததுதான். அதிலும் மன்மோகன்சிங் பிரதமராக இருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளில் ஆறு ஆண்டுகளில் நடந்த பெரிய ஊழல்களின் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மதிப்பு சுமார் 3, 79, 300 கோடிகள் இருக்கலாம் என்று ஒரு இணையதளம் மதிப்பிடுகின்றது. காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல், அரிசி ஏற்றுமதி ஊழல், ராணுவ ரேஷன் ஊழல், சுவிஸ் வங்கியில் ஹசன் அலி பதுக்கி வைத்திருக்கும் பணம் என்று மத்திய அரசாங்கம் சம்பந்தப்பட்டிருக்கும் ஊழல்களும் மற்றும் மாநிலங்களில் நடந்திருக்கும் தாஜ் காரிடர் ஊழல் (உபி), இரும்புச் சுரங்க ஊழல் (கர்நாடகம்), நில பேர ஊழல் (கர்நாடகம்), ஒரிசா கனிமவள ஊழல், சத்யம் கம்ப்யூட்டர் ஊழல் ஆகிய ஊழல்களும் மற்றவையும் அடங்கும். இப்போது எல்லாவற்றையும் முழுங்கும் ஊழல் விவகாரம் ஒன்று  வெளிவந்திருக்கிறது. அல்லது வெளி வந்து கொண்டிருக்கிறது. அதுதான் இயற்கை எரிவாயு ஊழல்.
இந்திய வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய ஊழல் நடந்ததில்லை என்று அலைக்கற்றை ஊழலில் 176000 கோடி ரூபாய்கள் சுருட்டப்பட்டபோது கூறினோம். அப்போதே சிலர் அவசரப்படாதீர்கள், இதைவிடப் பெரிதாக நடக்கலாம் அல்லது நடந்து கொண்டிருக்கலாம் என்று எச்சரித்தார்கள். இதோ அது உண்மையாகிவிட்டது.
கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப் படுகையில் இயற்கை எரிவாயு வளம் மிதமிஞ்சி கிடக்கிறது. ஆற்றுக்குள்ளும் ஆற்றுக்கு வெளியே சுமார் 8100 சதுர கி.மீ. பரப்பில்  பூமிக்கடியிலும் இருக்கும் எரிவாயுவைத் தேடி எடுத்து விற்கும் உரிமம் ரிலையன்சின் அம்பானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. சகோதரர்கள் ஒன்றாக இருக்கும்போது வழங்கப்பட்டு பின்னர் அவர்களுக்கு இடையில் பாகப்பிரிவினைத் தகராறு வந்தபோது (இதில் நல்லவர் , வல்லவர் என்று இட்டுக் கட்டப்படும் மன்மோகன்சிங்தான் தலையிட்டு சமரசம் செய்து வைத்தார்) மூத்தவரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்டரீசுக்கு அந்த உரிமம் ஒதுக்கப்பட்டது தெரிந்த விஷயம்.
இப்போது இதில் என்ன ஊழல்?
கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப் படுகையில் உள்ள எரிவாயுவைத் தேடி எடுத்து விற்கும் உரிமம் 2000த்தில் (அப்போது பாஜக தலைமையிலான தேஜகூட்டணி அரசாங்கம் பதவியில் இருந்தது) இரண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 90சதவீதமும், நிக்கோ ரிசோர்சஸ் என்கிற நிறுவனத்திற்கு 10 சதவீதமும் வழங்கப்பட்டது. அரசாங்கத்திற்கும் இந்த நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் என்னவெனில் எரிவாயுவைத் தேடும் செலவு இந்த நிறுவனங்களுடையது. அதாவது மூலதனம் தனியாருடையது. தேடி எடுக்கப்படும் வாயுவை விற்று வரும் லாபத்தில் அரசாங்கத்திற்கு பங்கு உண்டு.இந்த ஒப்பந்தத்திற்கு உற்பத்தி பங்கீடு ஒப்பந்தம் என்று பெயர்.
அம்பானி முதலீடு போட்டிருக்கிறார். முதலீடு போட்டவர் தன்னுடைய முதலீட்டை விரைவாக திரும்ப எடுத்துக் கொள்ள வகை செய்யும் முறையில் இந்த பங்கு ஒப்பந்தம் போடப்படுகின்றது. ஆனால், அது வரை மக்கள் சொத்திலிருந்து அரசாங்கத்திற்கு வருமானம் எதுவுமே வராமல் இருக்கக் கூடாதில்லையா? எவ்வளவு நியாயவான்கள் பாருங்கள். ஆதலால்.....
அம்பானியின் மூலதனச் செலவுகள் திரும்ப எடுக்கப்படும் வரையில் வெளியில் எடுக்கப்படும் எரிவாயுவில் (அல்லது அதன்  விலையில்) 90 சதவீதம் ‘அசல் பெட்ரோலியமாகக் கருதப்படும்’. அதாவது, அடக்கவிலையாகக் கருதப்படும். எஞ்சியுள்ள 10 சதவீதம் லாபப் பெட்ரோலியமாகக்’ கருதப்படும். அதாவது லாபமாகக் கருதப்படும். இந்த லாபத்தில் அம்பானிக்கும் அரசுக்கும் பங்கு.  அரசுக்கு 70; அம்பானிக்கு 30. இதுதான் ஒரிஜினல் ஒப்பந்தம். இதில் என்ன தில்லுமுல்லுகள் நடந்தன என்பதை பின்னர் பார்ப்போம்.
இந்த அடக்கவிலையில் என்னென்ன அடங்கும்?
அரசுக்குச் செலுத்த வேண்டிய உரிமத் தொகை 5 சதவீதம், உற்பத்திச் செலவு, எரிவாயுவைத் தேடும் செலவு, நடைமுறைச் செலவு ஆகியவை.
ஒப்பந்தத்தின் துவக்கத்தில் ரிலையன்ஸ் 240 கோடி டாலர்கள் முதலீடு செய்ததாக அல்லது முதலீட்டுச் செலவு என்று கூறியது. இதன் பொருள் என்னவெனில், இந்தப் பணத்தை ரிலையன்ஸ் நிறுவனம் திரும்ப எடுத்துக் கொள்ளும் வரையில் வெளியில் எடுக்கப்படும் எரிவாயுவின் மதிப்பில் 90 சதவீதத்தை அசல் என்கிற வகையில் ரிலையன்ஸ் எடுத்துக் கொள்ளும். மீதி 10 சதவீதம் மட்டுமே பங்கிட்டுக் கொள்ளப்படும்.
ஆனால், நடந்தது என்னவென்றால், 2006ம் ஆண்டு மூலதனச் செலவு அல்லது முதலீடு 520 கோடி டாலர்கள் ஆகிவிட்டது என்று ரிலையன்ஸ் நிறுவனம் கூறியது. இதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. இதன் பொருள் என்னவெனில், மூலதனச் செலவு அதிகரித்துள்ளதால் உற்பத்தியில் 90 சதவீதத்தை மேலும் சில ஆண்டுகளுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்பதாகும். அத்தோடு நிற்கவில்லை. இது முதல் கட்டம்தான். இரண்டாவது கட்டத்திற்கு அது மேலும் 330 கோடி டாலர்கள் அதிகமாக்கப்பட்டு மொத்த மூலதனச் செலவு 850 கோடி டாலர்கள் என்று கணக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று சிஏஜி அறிக்கை கூறுகின்றது.
மிகவும் எளிமையாகச் சொன்னால் கொள்முதல் விலையை அதிகமாகக் காட்டி லாபத்தைக் குறைத்துக் காட்டி ஊழல் செய்வது. இப்படி பில் விலையை அதிகமாகப் போடுவது என்பது ஒன்றும் கடினமான வேலையல்ல. அது சாதாரணமாக பல சில்லறைத் திருடர்களும் செய்யக் கூடிய வேலைதான். தேவையான பொருட்களை சப்ளை செய்பவர்கள், துணை ஒப்பந்தக்காரர்கள் (இவற்றில் பல ரிலையன்சின் துணை நிறுவனங்கள்) போன்றோரிடம் சொன்னால் ‘ஆகட்டும் சாமி’ என்று செய்து கொடுத்து விடுவார்கள்.
(சாதாரணமாக இம்மாதிரி ஒப்பந்தங்கள் போடப்படும்போது அவற்றை நிர்வகிக்க ஒரு கமிட்டி அமைக்கப்படும். இதன் விஷயத்திலும் அமைக்கப்பட்டது. நான்கு பேர் கொண்ட அந்த கமிட்டியில் இருவர் அரசால் நியமிக்கப்பட்டவர்கள். ஆனால், அவர்களுக்கு மூலதனச் செலவு விவகாரத்தைக் கண்காணிக்கும் அதிகாரம் கிடையாது. பாருங்கள், பக்கத்திலிருக்கும் வங்கதேசத்தில் கூட இது மாதிரியான ஒப்பந்தங்களுக்கு கமிட்டி போடப்படுகின்றது. ஐந்து லட்சம் டாலருக்கு மேல் செய்யப்படும் எந்தச் செலவும் அந்த கமிட்டியின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் அமைக்கப்பட்ட கமிட்டிக்கு அத்தகைய அதிகாரம் எதுவும் இல்லை என்று சிஏஜி  கூறுகின்றது. அது சரி, அதிகாரம் கொடுத்தால் எப்படி இவ்வளவு கொள்ளை அடிக்க முடியும்?)
இதன் மூலம் சுமார் 45000 கோடி ரூபாய்கள் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தலைமை தணிக்கைத் துறை தோராயமான உடனடி மதிப்பீட்டைக் கூறியுள்ளது. எனினும், முழுமையான இழப்பு எவ்வளவு என்று இன்னும் மதிப்பிடப்படவில்லை. இது ஒரு ஊழல் மட்டும்தான். இதற்குள்ளேயே இன்னுமொரு ஊழல் நடந்திருக்கிறது என்கிறார் இந்த விவரங்களைக் கொடுக்கும் பிரபீர் புர்கயஸ்தா என்கிற பொருளாதார நிபுணர். (ஆதாரம்: நியூஸ்கிளிக் இணையதளம்).
2007ம் ஆண்டு இப்படி எடுக்கப்படும் ரிலையன்ஸ் எரிவாயுவின் விலை பத்து லட்சம் பிரட்டிஷ் தெர்மல் யூனிட்டிற்கு (நீரின் வெப்ப நிலையை ஒரு டிகிரி அதிகரிப்பதற்குச் செலவாகும் எரிசக்தியின் அளவு. அது ‘பிடியு’ என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படுகின்றது) 4.2 டாலர் என்று பிரனாப் முகர்ஜியின் தலைமையிலான அமைச்சர்கள் குழு நிர்ணயிக்கின்றது. இது மிகவும் அதிகமாகும். ஏனெனில், முகேஷ் அம்பானியின் நிறுவனமே அடக்கவிலை வெறும் 1.43 டாலர்தான் என்று பங்காளிச் சண்டை வழக்கு நடந்தபோது நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆதலால், 2.34 டாலர் விலைக்கு தேசிய அனல்மின்நிலையத்திற்கும், அனில் அம்பானிக்கும் விற்பதாகவும் ஒப்புக் கொண்டிருந்தது. 4.2 டாலர் என்று விலை நிர்ணயிக்கப்பட்டதும் அனில் அம்பானி ஆட்டத்திலிருந்து விலகிக் கொண்டார். பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி புதிய விலைக்கு தொடர்ந்து வாங்கிக் கொண்டிருக்கின்றது. அது மட்டுமின்றி 1.25 டாலர் போக்குவரத்துக் கட்டணமும் ரிலையன்ஸ் நிறுவனத்தால் வசூலிக்கப்படுகின்றது. இதை நிர்ணயிப்பதிலும், கண்காணிப்பதிலும் அரசாங்கத்திற்கு எந்தப் பாத்திரமும் இல்லை.
அதாவது இப்படி விலையை அதிகமாக நிர்ணயிப்பதன் மூலமும் அரசுக்கு அல்லது பொதுத்துறைக்கு இழப்பு ஏற்படுத்தப்படுகின்றது. அந்த இழப்பு அம்பானியின் பாக்கெட்டுக்குப் போயிருக்கின்றது. அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இதன் மூலம் ‘மேல்வருமானம்’ எனச் சொல்லப்படுவது வரும் என்பதைக் கூற வேண்டியதில்லை.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், 2.34 டாலருக்கு விற்றாலே ரிலையன்சுக்கு 50 சதவீதம் லாபம் கிடைக்கும். எத்தனை சதவீத லாபமும் முதலாளித்துவத்திற்குப் போதாது என்கிற மார்க்சின் கூற்று நினைவிற்கு வருவதைத் தவிர்க்க முடியாது.
மேலும் இதே காலகட்டத்தில் (2005-2008) பொதுத் துறை நிறுவனமான இந்திய எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு கமிஷனுக்கு ஒரு பிடியு எரிவாயுவிற்கு வெறும் 1.8 டாலர்தான் அரசாங்கம் கொடுத்தது. 4.2 டாலர் கொடுத்திருந்தால் ஒரு வேளை பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்துகிற பிரச்சனையே வந்திருக்காது? ஆனால், மக்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்கி முதலாளிகளின் கைகளில் கொடுப்பதுதானே முதலாளித்துவ அரசின் வேலை? ஒரு முதலாளித்துவ அரசு வேறு எப்படி செயல்படும்?
இப்படி விலை உயர்த்தப்படுவதால் அரசின் வருவாயும் அதிகரிக்குமல்லவா என்கிற கேள்விக்கு பிரபீர் பின்வருமாறு பதிலளிக்கின்றார்.
‘இது உண்மைதான். எங்களது கணக்கின்படி அதிகரிக்கப்பட்ட விலைகளின் காரணமாக லாபத்தில் அரசின் பங்கு என்கிற வகையில் அரசுக்கு சுமார் 20000 கோடி அதிகமாகக் கிடைக்கும். எனினும், உர உற்பத்தி மற்றும் மின் உற்பத்தி ஆகியவற்றுக்கு எரிவாயு கச்சாப் பொருள் என்கிற வகையில் உரம் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் விலைகளும் உயரும். உரம் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்திச் செலவு அதிகரித்தால் அரசாங்கம்  அவற்றுக்குக் கொடுக்கும் மானியத்தின் அளவும் அதிகரிக்கும். ரிலையன்ஸ் நிறுவனம் அதிகரிக்கப்பட்ட விலையால் வரும் கூடுதல் லாபத்தை தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும். ஆனால், அதே வேளையில் அரசாங்கம் கூடுதல் மானியம் என்கிற வகையில் 75000 கோடி ரூபாய்களைச் செலவழிக்க வேண்டியிருக்கும். அதாவது 20000 கோடி ரூ கூடுதல் லாபத்திற்கு 75000 கோடி செலவு. நிகர நட்டம் 55000 கோடி’.
எப்படி இருக்கிறது கதை? எப்படிப் பார்த்தாலும் அரசுக்கு லாபம் வராது. லாபம் வர வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? மானியத்தின் மீது கை வைக்க வேண்டும். அதாவது மக்களின் பாக்கெட்டில் கைவைக்க வேண்டும்.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி விலையை உயர்த்த வேண்டிய அவசியமே இல்லை. அம்பானிக்கு லாபம் கொழிக்க வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்திருக்கிறார்கள். அதாவது சர்வதேச சந்தை விலையை நிர்ணயித்திருக்கிறார்கள். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருளுக்கு, உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படும் பொருளுக்கு சர்வதேச விலை நிர்ணயிக்க வேண்டிய அவசியம் என்ன?  
இத்தோடு முடியவில்லை கதை. மூலதனச் செலவில் எவ்வளவு தொகை ஈடுகட்டப்படுகின்றதோ அல்லது திரும்ப எடுத்துக் கொள்ளப்படுகின்றதோ அந்த அளவு அல்லது அதற்கேற்ற விகிதத்தில் அரசுக்கும் அம்பானிக்கும் இடையிலான பங்கு விகிதம் அரசுக்குச் சாதகமான வகையில் மாற்றமடையும். அதாவது அரசுக்கு 70, அம்பானிக்கு 30 என்பது மாறும். ஒப்பந்தத்தின் இந்த ஷரத்தை ‘மூலதனப் பெருக்கம்’ (இன்வெஸ்ட்மென்ட் மல்டிபிளையர்) என்கிறார்கள். அதன்படி பங்கு விகிதம் அம்பானிக்கு 44 சதவீதமாகவும், அரசுக்கு 56 சதவீதமாகவும் மாறுகின்றது என்கிறார் புர்கயஸ்தா. அம்பானி மூலதனச் செலவை அதிகப்படுத்திக் காட்டுவதற்கு இதுவே முக்கிய காரணம்.
அம்பானி மூலதனத்தை ஆரம்பத்திலிருந்தே திரும்ப எடுக்கத் துவங்கி விடுகின்றார். 100 ரூபாயில் 90 ரூபாயை அவர் எடுத்தது போக மீதிதான் லாபக் கணக்கில் சேர்க்கப்படுகின்றது. அதில் அவருக்கு 30 சதவீதம். ஆக மொத்தம் வருடாந்திர உற்பத்தியில் 93 சதவீதத்தை அவர் எடுத்துக் கொள்கிறார். மூலதனச் செலவை அதிகமாக்கி காட்டியிருப்பதால் மற்றொரு இழப்பும் அரசுக்கு ஏற்படுகின்றது. அம்பானி இந்தத் தொகையை எடுத்து முடிக்கும்போது உற்பத்தியின் அளவு குறையத் துவங்கும். ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 40 மில்லியன் கியூபிக் மீட்டர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த உற்பத்தி இலக்கு மூலதனச் செலவுகள் அதிகமாக ஆக்கப்பட்ட பின்னர் 80 மில்லியனாக ஆக்கப்பட்டது. அதாவது சுமார் 250 சதவீதம் மூலதனச் செலவை அதிகப்படுத்திவிட்டு வெறும் 100 சதவீதம் மட்டுமே உற்பத்தியை அதிகரித்திருக்கிறார்கள். அதே நேரத்தில் உற்பத்தி அதிகரித்தால் சராசரி உற்பத்திச் செலவு குறைய வேண்டும். ஆனால், இவர்கள் உற்பத்திச் செலவை அதிகமாகக் காட்டியிருக்கிறார்கள்.  
இந்த மாதிரியான தகிடுதத்தினால் அம்பானி தன்னுடைய மூலதனத்தை வெகு விரைவாக எடுத்துக் கொள்வது மட்டுமின்றி, லாபத்தையும் ஆரம்பத்திலிருந்தே எடுத்துக் கொண்டு விடுகின்றார். அரசிற்கு லாபம் மிகத் தாமதமாக வந்து சேரும். இந்த வருடம் வரவேண்டிய பணம் அடுத்த வருடம் வந்தால் பணவீக்கத்தின் காரணமாக அதன் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கும் என்பது சாமானியர்களுக்கும் தெரியும். அல்லது குறைந்த பட்சம் வட்டியாவது நட்டமாகியிருக்கும். இதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் உண்மையான மதிப்பில் லாபத்தில் ரிலையன்சின் பங்கு 52 சதவீதமாகவும், அரசின் பங்கு 48 சதவீதமாகவும் ஆகிவிடுகின்றது. ஆனால், ஏட்டிலோ அரசுக்கு 70 அம்பானிக்கு 30 என்று இருக்கும்.
அம்பானி இப்படி மக்கள் பணத்தைச் சுருட்டுவதற்கு முதலிலேயே திட்டமிட்டிருக்கிறார். அதனால்தான், ஆரம்பத்தில் கொடுத்த மூலதனச் செலவு மதிப்பீட்டை ‘முதல் கட்ட வளாச்சித் திட்டம்’ என்று கொடுத்திருக்கிறார்; முழுமையான வளர்ச்சித் திட்டம் எனக் கொடுக்கவில்லை என்று சிஏஜி அறிக்கை கூறுகின்றது.
அம்பானிகளுக்கும், டாடாக்களுக்கும், இதர முதலாளிகளுக்கும் அரிதிலும் அரிதான இயற்கை வளங்கள் அற்ப விலைக்குத் துhக்கிக் கொடுக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் அதே பொருட்களுக்கு சர்வதேச விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. பொதுச் சொத்துக்கள் ரகசியமாகக் கொள்ளையடிக்கப்படுகின்றது; மக்களின் வருமானம் பகிரங்கமாகக் கொள்ளையடிக்கப்படுகின்றது. இதுதான் நமது பெட்ரோலியக் கொள்கையின் சாராம்சம் என்கிறார், பிரபீர் புர்கயஸ்தா.
மன்மோகன்சிங் இந்த விஷயத்திலும் தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்வதையோ அல்லது அவருக்கு உண்மையிலேயே ஒன்றும் தெரியாது என்று மற்றவர்கள் சொல்வதையோ ஏற்பவர்கள் அப்பாவிகளாகத்தான் இருக்க வேண்டும்.
மேலும், அவர் சட்ட விரோதமாக நடந்து கொண்டிருக்கிறாரா இல்லையா என்கிற கேள்வியே எழவில்லை. ஏனெனில், அவர்தான் ஊழலையே பிரபீர் சொல்வது போல் சட்டபூர்வமாக்கிவிட்டாரே? அதாவது, கொள்கையாக்கி விட்டாரே?
------------------------------18.6.11
(இக்கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் 21.6.11 தீக்கதிரில் வெளியாகியுள்ளது)