Saturday, April 2, 2011

ஜனநாயகமும் அதிகார வர்க்கமும்






தேர்தல் கமிஷன் விதிக்கும் சில கட்டுப்பாடுகள் குறித்து பொதுவாக நடுத்தர வர்க்க மனோபாவம் கொண்டவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கின்றது. இருபது வருடங்களுக்கு முன்னர் தேர்தல்கள் நடந்த அல்லது நடத்தப்பட்ட விதத்திற்கும், தற்போது தேர்தல்கள் நடத்தப்பட்ட விதத்திற்கும் இடையில் பெரும் வேறுபாடுகள் இருக்கின்றன.
முன்னர் போல் இப்போது, பேனர்கள் வைக்கக் கூடாது; அரசுக்குச் சொந்தமான அல்லது பொதுவானவை என்று கருதப்படுகின்ற சுவர்களில் சுவர் விளம்பரம் எழுதக் கூடாது; தனியாருக்குச் சொந்தமான சுவர்களில் எழுதும்போது சுவருக்குச் சொந்தக்காரரின் அனுமதியின்றி எழுதக் கூடாது; கல்விக் கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள். மருத்துவ மனைகள் போன்ற இன்னிதரவற்றிற்கு அருகில் அல்லது குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால்தான் ஒவிபெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டும்; அதுவும் ஒலிபெருக்கிகள் என்றால் குறிப்பிட்ட வகை மாதிரியான ஒலி பெருக்கிகள், குறிப்பிட்ட டெசிபல் (சத்தம்) அளவுக்கு மேல் ஒலியைப் பெருக்க முடியாதவற்றை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் (ஒலி மாசு ஏற்படுகின்றது என்பது இதற்கான காரணங்களில் ஒன்று); ஊர்வலங்கள் நடத்துவதற்குத் தடை; இது போன்ற விதிகள் அனைத்தும் மிகவும் கறாராகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இவற்றை அமல் படுத்துவதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றது.
இப்போது 2011ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாகனங்களைச் சோதனையிடுதல் என்கிற ஒரு நடவடிக்கை மிகத் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றது. வழக்கமாக இம்மாதிரி சோதனைகள் தேர்தல் காலங்களில் ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றனவா என்பதற்காக நடத்தப்படும். இம்முறை ஒரு வித்தியாசம். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு 'லஞ்சம்' கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்படுகின்றதா என்பதற்காக இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன என்று சொல்லப்படுகின்றது. நிற்க.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தகவல் தொடர்பு சாதனங்கள் அல்லது வழிமுறைகளுக்கும் இன்றைக்கும் பெரும் வேறுபாடுகள் இருக்கின்றன. அன்று ஆகப்பெரும், அதாவது ஒரே செயலில் அதிகமான எண்ணிக்கையிலான மக்களைச் சென்றடையும் தகவல் தொடர்பு சாதனங்கள் பொதுவாக இரண்டுதான். ஒன்று, பத்திரிக்கைகள் எனப்படும் அச்சு ஊடகங்கள்; இரண்டாவது, ஒலி பெருக்கிகள். இவையன்றி இருந்த வேறு சாதனங்கள் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் போன்றவை.
அப்போதே இந்த எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களான மத்தியதர வர்க்கத்தினரின் ஒரு பகுதியினர் ஒலிபெருக்கிகள் குறித்தும், சுவரொட்டிகள்-சுவர் விளம்பரங்கள் குறித்தும் பெரிதாக சலித்துக் கொள்வார்கள்; ஒலி பெருக்கிகள் ஒலி மாசை ஏற்படுத்துகின்றன என்பார்கள்; சுவரொட்டிகளும் சுவர் விளம்பரங்களும் சூழலை, சூழல் அழகை (சிங்காரச் சென்னை?) அழகைக் கெடுக்கின்றன என்பார்கள். தேர்தல் ஆணையம் இவற்றுக்குக் கட்டுப்பாடுகள் விதித்தது. உடனே இவர்களுக்குக் கொண்டாட்டம். அகமகிழ்ந்து போனார்கள்.
இம்மாதிரி கட்டுப்பாடுகள் விதிக்கும் போக்கு 1991ம் ஆண்டிற்குப் பின்னர்தான் அதிகமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்; அதாவது, புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமலாக்கப்படுவது ஆரம்பித்த பின்னர்தான் துவங்கியது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எந்த ஒரு சமுதாயத்திலும் ஒவ்வொருவரும் மற்ற அனைவரையும், நேடிரயாகவோ அல்லது மறைமுகமாகவோ, சார்ந்திருக்கின்றனர் என்பது யதார்த்தம். (இயற்கையிலேயே ஒவ்வொரு உயிரினமும் மற்ற உயிரினங்களைச் சார்ந்துதான் இருக்கின்றன என்பது டார்வின் கண்டறிந்து கூறிய உண்மை).
ஏற்றதாழ்வுகள் நிறைந்த சமுதாயத்தில் எந்தவொரு நெறிமுறையும் ஒரு சாராருக்குச் சாதகமாகவும், மற்றொரு சாராருக்குப் பாதகமாகவும்தான் இருக்கும். பாதிக்கப்படும் சாரார் யார் என்பதுதான் இப்போது நம்முன் உள்ள கேள்வி.
எடுத்துக் காட்டாக, சுவர் விளம்பரம் எழுதுவதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் யார் யாரையெல்லாம் பாதிக்கும்?
முதலில் சுவர் எழுதுவதைத் தொழிலாகக் கொண்டவர்களைப் பாதிக்கும். தேர்தல்களும், அரசியல் கட்சிகளின் இயக்கங்களும் அவர்களுக்கு அவ்வப்போது கிடைக்கும் அதிக மகசூல் போலத்தான். அதாவது, வேலையில்லாத, அதனால் வருமானம் இல்லாத மற்ற நேரங்களின் தேவைகளை அவர்கள் இது போன்ற நேரங்களில் கிடைக்கும் கூடுதல் வருமானங்கள் மூலம்தான் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இப்போது தேர்தல் ஆணையம் விதித்திருக்கும் தடையால் அவர்களது நிலைமை கவலைக் கிடமாகிவிட்டது. போதாக்குறைக்கு இந்த சிங்காரச் சூழல் அபிமானிகளான மத்தியதர வர்க்கத்தினர் மற்ற நேரங்களில் கிடைக்கும் வருமானத்திற்கும் இடையூறு செய்கின்றனர் (இவர்கள்தான் வாழ வழியில்லாமல் பிச்சை எடுப்பவர்களைப் பார்த்து 'கைகால் நல்லா இருக்குல்ல, ஒழச்சு சாப்பிட வேண்டியதுதான்' என்று 'அறிவுரை' வேறு கூறுவார்கள்).
இதன் சங்கிலித் தொடர் விளைவாக பெயின்ட் தயாரிக்கும் நிறுவனங்களின் விற்பனையும் பாதிக்கப்படும்தான். அதனால் அந்த நிறுவனங்களின் முதலாளிகளோ, விநியோகம் செய்யும வியாபாரிகளோ பட்டினி கிடக்கப் போவதில்லை. அவர்களது விற்பனை குறைவதால் கூடுதலாகக் கிடைக்க இருந்த லாபம் மட்டும்தான் குறையும். ஆனால், அந்த நிறுவனங்களின் தொழிலாளர்கள் மறைமுகமாகப் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு.
ஆக, அதிகமாகப் பாதிக்கப்படுவது தொழிலாளர்கள்தான். பாதிப்பு என்றால் சோற்றுக்கே கஷ்டம் ஏற்படுகின்ற பாதிப்பு. முதலாளிகளுக்கு தேர்தல் காலக் கூடுதல் விற்பனை என்பது இல்லாமல் போகுமே ஒழிய விற்பனையே இல்லாமல் போகாது.
பேனர்கள், கொடிகள், சுவரொட்டிகள் போன்றவற்றிற்கும் இந்த தர்க்க மற்றும் யதார்த்த நியாயத்தைப் பொருந்தும்.
டிஜிட்டல் பேனர்களைப் பொறுத்த வரையில் இம்மரிதிரியான தடைகளுக்கு ஒரு சமூகக் கோணமும் உண்டு. தேர்தல் காலத் தடை மட்டுமின்றி, சுற்றுச்சூழலைக் காரணமாகச் சொல்லி சிலர் எதிர்க்கின்றனர். ஒரு வகையில், அதாவது சுற்றுச்சூழல் அடிப்படையில், நியாயம்தான். ஆனால், சமூக அடிப்படையில் அது முற்றிலும் சரியான கருத்து அல்ல. பரம்பரையாக எவ்வித அங்கீகாரமும் இல்லாத, மறுக்கப்பட்ட, கிடைக்காத ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தங்களது புகைப்படங்களை அச்சிட்டுக் கொள்ள, தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள, தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பு அது. நகரின் அழகு, சூழல் அழகு என்று பெரிய பெரிய வார்த்தைகள் சொல்லி அதைத் தடுப்பது நியாயமாகாது. இம்மாதிரி விஷயங்கள் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் சமுதாயங்களில் சட்டமாக்கப்படுவதுதான், அல்லது இம்மாதிரியான கட்டுப்பாடுகளினால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்த பின்னர் சட்டமாக்கப்படுவதுதான் நியாயம்.
இனி நேரடி அரசியலுக்கும் தேர்தலுக்கும் வருவோம்.
சுவர் எழுதக் கூடாது, ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகள் பெரிய கட்சிகளை அதிகம் பாதிப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் பாதிப்பே இல்லை. அவற்றுக்கு தற்போது வேறு வகையான வெகுஜன ஊடகங்கள் இருக்கின்றன. தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், காணொலிகள் போன்றவை. பெரிய கட்சிகள் அல்லது பண வசதி படைத்த கட்சிகள் இந்த வெகுஜன ஊடகங்களைப் பயன்படுத்தி தங்களது பிரச்சாரத்தை மிகப் பெரும்பகுதி மக்களிடம் கொண்டு சென்று விடுகின்றன. சுயேச்சைகள், சிறிய கட்சிகள், பண வசதி இல்லாத கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை தங்களது கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியாமல் தவிக்கின்றன.
''சுவர் விளம்பரங்களுக்கு காட்டப்படும் கெடுபிடிகளால் சிறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சுயேச்சைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் அவர்கள் குறித்த எந்த விவரமும் வாக்காளர்களுக்குத் தெரியவில்லை'' (தினமணி, 2.4.11).
இந்த நிலை உண்மையில் ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு  எதிரானதாகும். அனைவருக்கும் போட்டியிடும் உரிமை இருக்கிறது. ஆனால், போட்டியிடுபவர்கள் தங்களது கருத்துக்களையும், தங்களைப் பற்றியும் பிரச்சாரம் செய்து கொள்வதற்குத் 'தடைகள்' இருக்கின்றன. இது என்ன நியாயம்?
பொதுவாக ஊர்வலங்களுக்கு விதிக்கப்படும் தடை மக்கள் அணி திரள்வதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டது. தேர்தல் இல்லாக் காலங்களில் போக்குவரத்து இடையூறு என்றும், தேர்தல் காலங்களில் அத்துடன் வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவற்றின் மிக முக்கியமான விளைவு மக்கள் அணி திரள்வதைத் தடுப்பதாகும்.
இறுதியாக இப்போதைய தேர்தலில் ஒரு புதிய பிரச்சனை எழுந்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளைப் பெறுவதைத் தடுப்பது தொடர்பான பிரச்சனை. இதற்காக பணம் எடுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கிறேன் என்று தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டுள்ளது. சோதனையில் கிடைக்கும் அல்லது வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் பணத்திற்கு முறையான கணக்கு கொடுக்கப்படவில்லை எனில் அது பறிமுதல் செய்யப்படுகின்றது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பது என்பது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் ஒரு செயல்தான். முதலாளிகளிடம் நிதி பெறும் கட்சிகள், ஊழல் மூலம் பணத்தைச் சேர்த்திருக்கும் கட்சிகள்தான் இப்படிச் செய்ய முடியும். நேர்மையான கட்சிகளோ, முதலாளிகளிடமிருந்து நிதி பெறாத கட்சிகளோ பணம் கொடுப்பதில்லை. அப்படியே பணம் கொடுப்பதாக இருந்தாலும் அவர்களிடம் பணம் இருக்காது. எனவே, பணம் கொடுக்கக் கூடிய கட்சிகள் இத்தகைய கட்சிகளின் வாய்ப்புகளைப் பறிக்கின்றன. அதாவது, சமவாய்ப்புள்ள போட்டி இருக்காது. எனவே இது தடுக்கப்பட வேண்டும் என்பதில் இரு கருத்துக்கு இடம் இல்லை. ஆனால், இதன் உபவிளைவுகள் பற்றி கவலைக்கடாமல் இருக்க முடியாது.
பெரும்பாலான வர்த்தகர்கள் தங்களது வர்த்தக பரிமாற்றங்கள் அனைத்தையும் 'கணக்கில்' கொண்டு வர மாட்டார்கள். அப்படி கணக்கில் கொண்டு வரப்பட்டால் அவர்கள் வர்த்தகமே செய்ய முடியாது. அதாவது, வரி விகிதங்களின் காரணமாக அவர்களுக்கு லாப விகிதங்கள் மிகவும் குறையும். ஆகவே வரி கொடுப்பதைத் தவிர்ப்பதற்காகவே அல்லது வரி ஏய்ப்பதற்காகவே இப்படிச் செய்கிறார்கள். இது சரியா, தவறா என்கிற கேள்வி முதலில் எழுகின்றது. நம் மத்தியதர வர்க்க கனவான்கள் இது தவறு என்கிறார்கள். அதாவது, வெள்ளைக் காலர் வேலை பார்க்கும் மத்தியதர வர்க்கத்தினர். அரசுத் துறைகள், தனியார்த் துறைகளில் அலுவலகப் பணியாற்றுபவர்கள், மற்றும் மருத்துவர்கள், பொறியாளர்கள், இதர சேவைப் பணிகளில் இருப்பவர்கள். அவர்களில் ஒரு பகுதியினர் தவறு என்கிறார்கள்.
ஆனால், இப்படி வசூலிக்கப்படும் வரியைக் கொண்டு அரசாங்கம் என்ன செய்கின்றது என்பது கேள்வி. அரசாங்கச் செலவுகள், திட்டச் செலவுகள், ராணுவச் செலவுகள் என்று இப்படிப் பல செலவுகள் இருக்கின்றன. இது பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் ஆராயலாம். இப்படி சிறு, நடுத்தர வர்த்தகர்களிடம் ஓடி ஓடி வரி வசூல் செய்பவர்கள், அம்பானி, டாடா, மிட்டல் போன்ற பெரிய முதலாளிகளுக்கும், பண்ணாட்டு முதலாளிகளுக்கும் வருடத்திற்கு லட்சக்கணக்கான கோடிகள் வரிச்சலுகை அளிக்கின்றனர். சிறு, நடுத்தர வர்த்தகர்கள் மூலதனம் திரட்டுவதைத் தடுத்து பெரிய முதலாளிகளின் மூலதனக் குவியலுக்கு உதவுகின்றனர். நிற்க.
இப்போது இந்த சோதனையின் காரணமாக பல வர்த்தகர்கள் தங்களது பண பரிமாற்றத்தையே நிறுத்திவிட்டார்கள். கடந்த ஒரு மாத காலமாக பணப்புழக்கமே மிகவும் குறைந்து போய்விட்டதால் பல்வேறு வகையான தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தத் தொழில்களை நம்பியுள்ள தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, முறைசாராத் தொழில்களில் பணியாற்றும் தொழிலாளர்கள்.
சேலத்தில் உள்ள ஒரு எல்ஐசி கிளையின் முன்பாக இப்படி வாகனங்களைச் சோதிக்கும் காவலர்கள் குழு நின்று கொண்டிருந்திருக்கின்றது. அதுவும் மார்ச் மாதம். எல்ஐசி வர்த்தகம் கூடுதலாக நடக்கும் காலம். லட்சக்கணக்கில் பணம் பிரீமியம் கட்டுவதற்காக எடுத்துவரப்படுகின்ற இடம். தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதைத் தடுப்பவர்களுக்கு அங்கு என்ன வேலை? மிரட்டி கையூட்டு பெறுவதன்றி வேறென்னவாக இருக்க முடியும்?
இம்மாதிரி ஒரு பிரச்சனையின் பல்வேறு பரிமாணங்களைப் பார்க்காமல் ஒரு நேர்கோட்டுப் பார்வையாக அல்லது தட்டையாகப் பார்ப்பது உண்மையில் அந்தப் பிரச்சனையை தீர்க்க உதவுவதில்லை. மேலும், அதிகார வர்க்கத்திடம் அளவுக்கு அதிகமான அதிகாரங்களைக் கொடுப்பது மொசமான விளைவுகளையே பெரும்பாலும் உண்டாக்குகின்றன. வேறு நாடுகளில் எப்படி என்பதை பின்னர் எப்போதாவது பார்த்துக் கொள்ளலாம். ஆனால், நமது நாட்டில் கடந்த 65 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் இதுதான் அனுபவம்.
தேர்தல் ஆணயைம் இத்தனை கெடுபிடிகள் செய்த பின்னரும் அரசியல் கட்சிகள் (குறிப்பாக, திமுக-காங்கிரஸ்) வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதற்கான பணத்தை அந்தந்த தொகுதிகளில் கொண்டு போய் சேர்த்து விட்டன என்று இப்போது பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. அது உண்மையாக இருந்தால், தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் ஒரு பயனும் விளையவில்லை என்று ஆகிறது; மாறாக, வர்த்தகர்களும், தொழிலாளர்களும், அவர்கள் போன்ற இன்னபிறரும் பாதிக்கப்பட்டதுதான் மிச்சம்.
''பிறரின் மேற்பார்வையில் நடப்பவை, வரம்பிற்கு உட்பட்டவை, கட்டுப்படுத்தப்பட்டவை அல்லது குறைவான தீவிரம் கொண்டவை என்று இந்த ஜனநாயக ஆட்சிகள் பல்வேறு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றன. இவற்றில் அதிகாரம் நிலையான, தேர்ந்தெடுக்கப்படாத அமைப்புகளில் குவிக்கப்படுகின்றது. அந்த அமைப்புகள் தேர்தலினால் ஏற்படும் மாற்றங்களினால் பாதிக்கப்படுவதில்லை. அவற்றில் தேசிய பாதுகாப்பு கவுன்சில், மத்திய வங்கி, பொருளாதார ஆலோசனை நிறுவனங்கள், உச்சநீதிமன்றம், பொதுத் தணிக்கை அமைப்பு, அரசியல் சட்ட நீதிமன்றம் மற்றும் அது போன்ற நிறுவனங்கள் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் செயல்படும் ஆற்றலைப் பெருமளவுக் குறைத்து விடுகின்றன.'' (இடதுசாரிகளும் புதிய உலகமும், மார்த்தா ஹர்னேக்கர், பக்.29,30).
இது லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஜனநாயக ஆட்சிகளைக் குறிப்பதாக இருந்தாலும், இந்தியாவிற்கும் இது மேலும் மேலும் பொருந்துவதாக ஆகிக் கொண்டிருக்கின்றது. இந்த அமைப்புகள் மக்களின் கருத்துக்களை சட்டை செய்வதில்லை. சட்டை செய்ய வேண்டிய அவசியமும் அவற்றுக்கு இல்லை.
மேலும், மக்களை அரசியலில் இருந்து விலக்கி வைக்க திட்டமிட்டுநடத்தப்படும் பிரச்சாரங்களில் ஒன்று, அரசியல்வாதிகள் அயோக்கியர்கள், எனவே நிபுணர்கள் அல்லது அதிகாரிகள் யாராவது நாட்டை ஆண்டால் நன்றாக இருக்கும் என்பது. அதைப் பயன்படுத்தித்தான் உலக வங்கி அதிகாரி மன்மோகன்சிங் இந்தியாவிற்குப் பிரமராக ஆக்கப்பட்டார். அவரது ஆட்சியில்தான் சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே அதிகமான ஊழல்கள், அதுவும் மிகப் பிரம்மாண்டமான ஊழல்கள் நடந்துள்ளன.
ஆம், அதிகாரிகளுக்கு தேர்தல் அரசியல்தான் இல்லையே தவிர நிச்சயம் வர்க்க அரசியல் உண்டு. இந்தியா போன்ற நாட்டில் அதிகாரிகளுக்கு சாதி அரசியலும் உண்டு.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அமைப்புகளிடம் மேலும் மேலும் அதிகாரத்தைக் குவிப்பது அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலாகும். ஜனநாயகத்தைக் காப்பதற்காகத்தான் அதைச் செய்கிறோம் என்பது வஞ்சகம். இதைச் செய்வதே முதலாளித்துவ அரசியல் கட்சிகள்தாம் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய உண்மை.

------------------------------------------------------3.4.11




   


Sunday, March 27, 2011

மோடிக்கு விசா கேட்ட அருண் ஜெட்லி




அசோகன் முத்துசாமி

பாஜக இந்து தேசியவாதத்தை சந்தர்ப்பத்திற்கு ஏற்பவே பயன்படுத்துகிறது என்று தற்போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஜெட்லி 2005ம் ஆண்டு அமெரிக்கத் துhதரக அதிகாரி ராபர்ட் பிளேக்கிடம் கூறியதாக விக்கிலீக்சஸ்  இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது. (தி ஹிந்து, 26.3.11).
அதாவது வாக்குகளைப் பெறுவதற்காகவே அவர்கள் இந்து தேசியவாதத்தை, இந்துத்துவத்தைப் பயன்படுத்துகின்றனர் என்று பொருள். உடனடியாக அருண் ஜெட்லி தான் சந்தர்ப்பவாதம் என்கிற சொல்லைப் பயன்படுத்தவே இல்லை என்றும், தன்னுடைய கூற்றை திரித்துவிட்டார்கள் என்று பறுத்துள்ளார். பாஜகவும் அதன தலைவர்களும் அவர் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார் என்று மறுத்துவிட்டார்கள். அதாவது இந்து மதவெறிதான் எங்களது கொள்கை என்றுள்ளார்கள். ஆனால், காங்கிரசஸ்  கட்சியோ பாருங்கள் நாங்கள் பாஜக பற்றிக் கூறியது சரியாகப் போய்விட்டது என்று குதூகலிக்கின்றது.
‘பாஜகவும் இந்து மதத் தத்துவ அமைப்புகளான ஆர்எஸ் எஸ்  போன்றவையும் தங்களது சுயநலனிற்காகவே மதத்தைப் பயன்படுத்துகின்றன. விக்கிலீக்ஸ்  வெளிப்படுத்தியிருக்கும் விஷயங்கள் மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதைப் போலவே இருக்கின்றன. பாஜகவும், ஆர்எஸ் எஸ் சும் வாக்குகளைப் பெறுவதற்காக மக்களின் மத உணர்வுகளுடன் விளையாடுகிறார்கள் என்று நாங்கள் கூறி வருகின்றோம்.’ என்று காங்கிரஸ்  கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறியுள்ளார்.
இன்னும் பல காங்கிரஸ்  தலைவர்கள் அமைச்சர்கள் இதே கருத்தை வலியுறுத்தியிருக்கின்றார்கள். கபில் சிபல், அஸ் வானி குமார் போன்றோர்.
‘ பல வருடங்களாக அவர்களது சந்தர்ப்பவாத அரசியல் பற்றி நாங்கள் கூறி வருகின்றோம். இப்போது மக்கள் பாஜகவின் உண்மையான முகத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்பது கபில்சிபலின் கருத்து.
அருண் ஜெட்லி என்ன காரணத்திற்காக அப்படியொரு கருத்தைச் சொன்னார் என்பது தனி விஷயம். ஆனால், அவர் சந்தர்ப்பத்திற்காகத்தான் இந்துத்துவத்தைப் பயன்படுத்துகிறோம் என்று சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்வது மடமையாகும். வெறும் வாக்குகளுக்காகத்தான் அவர்கள் இந்துத்துவத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்றால் அன்று அவர்கள் ஏன் மகாத்மா காந்தியைக் கொலை செய்ய வேண்டும்? முஸ்லிம்கள், கிறிஸ் துவர்கள்,கம்யூனிஸ்டுகள் எங்களது முதல் மூன்று எதிரிகள் என்று ஏன் குறி வைக்க வேண்டும்? ஏன் மதமாற்றத் தடைச் சட்டம், பசுவதைத் தடைச்சட்டம் போன்றவற்றை அவர்கள் ஆளும் மாநிலங்களில் செயல்படுத்த வேண்டும்? மற்ற மாநிலங்களிலும் அத்தகைய சட்டங்கள் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்? (தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலும் அவை இடம் பெற்றிருக்கின்றன). ஏன் ராமரின் பெயரைச் சொல்லி சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்க வேண்டும்? கல்விப் பாடநூல்களில் ஏன் இந்துத்துவக் கருத்துக்களைப் புகுத்த வேண்டும்? விதவை சோனியா நாடாளக் கூடாது என்று ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? செத்த மாட்டின் தோலை உரித்தற்காக தலித்துகளை ஏன் அடித்துக் கொல்ல வேண்டும்? தங்களது மதவெளிக் கருத்துக்கு மாற்றாக கருத்து தெரிவிப்பவர்களை ஏன் தாக்க வேண்டும்? மதச்சார்பற்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று ஏன் மிரட்ட வேண்டும்?
இப்படி எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். பாஜக பரிவாரம் வாக்குகளுக்காக இந்துத்துவத்தை கையில் எடுக்கவில்லை. இந்துத்துவத்தை அமல் படுத்துவதற்காகத்தான் அது வாக்குகளைக் கேட்கின்றது. இந்து  ராஷ்டிரத்தை அமைப்பதற்காகத்தான் அது  அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புகின்றது. அதே கொள்கைகளின் அடிப்படையில்தான் அது மத உணர்வுகளைத் தூண்டுகின்றது. சுருக்கமாகச் சொன்னால், மத உணர்வுகளைப் பயன்படுத்தி வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடிப்பதன் நோக்கம் மதச்சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நடத்துவதற்காகத்தான்.
குஜராத் படுகொலைகளை ஒரு பக்கம் ஆதரித்துக் கொண்டே மறுபக்கம் அதற்காக வருந்துவது போல் வாஜ்பாய் வார்த்தை ஜாலம் செய்தபோது அவரை வேடம் போடுகிறார் என்று காங்கிரஸ்  உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் விமரிசித்ததை மறந்துவிட்டார்கள். பாஜகவின் மதவாதத்தை மறைக்கும் மிதவாத முகமூடி என்று வாஜ்பாய் வர்ணிக்கப்பட்டதையும் மறந்து விட்டார்கள்.
உண்மையைச் சொல்லப் போனால் காங்கிரஸ்  கட்சிதான் தேர்தல் ஆதாயத்திற்காக  அவ்வப்போது இந்து மதவாதத்துடன் சமசரசம் செய்து கொள்ளும். பாபர் மசூதி இடிப்பைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்காதது, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்ட மும்பை கலவரங்கள் வழக்கில் முதல் குற்றவாளியான பால் தாக்கரே உள்ளிட்ட இதர குற்றவாளிகள் மீது மராட்டிய மாநிலத்தில் ஆட்சியில் இருந்தபோதிலும் நடவடிக்கை எடுக்காதது,  குஜராத்தில் படுகொலைகள் நடந்தபோது கை கட்டி வேடிக்கை பார்த்தது என்று பல உதாரணங்களைக் கூறலாம். 1984ம் ஆண்டு இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டபோது அதைப் பயன்படுத்தி வாக்குகளைப் பெறுவதற்காக சீக்கியர்களுக்கு எதிரானக் கலவரங்களை நடத்தியது காங்கிரஸ் . அதற்கு முன்னர் எழுபதுகளின் பிற்பகுதியில் ஜனதாக் கட்சி ஆட்சிக்குத் தலைவலி கொடுப்பதற்காக மறைமுகமாக பிந்தரன்வாலேயே ஆதரித்ததாக ஒரு குற்றச்சாட்டும் காங்கிரசின் மேல் உள்ளது.
எனினும், இந்து மதவாதப் பிரச்சனையைப் பொறுத்த வரையில் காங்கிரஸ்  அதை அவ்வப்போது சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளும் அவ்வலவுதான். (தேவைப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அது இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளையும், சீக்கிய மத அடிப்படைவாதிகளையும் கூட தாஜா செய்யும்). ஆனால், பாஜகவின் திட்டமும், லட்சியமும், கொள்கையும் இந்துத்துவம்தான். இந்துத்துவ ஆட்சி அமைப்பதற்காகத்தான் அக்கட்சியே நடத்தப்படுகின்றது.
நரபட்சிணி நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்ட பின்னணியில் ‘நாங்கள் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டும்தான் இந்து மதவாதத்தைப் பயன்படுத்துகின்றோம்’ என்று ஜெட்லி சொல்லியிருப்பதைப் பார்க்க வேண்டும். அதாவது, அருண் ஜெட்லி மோடிக்கு விசா கேட்டிருக்கின்றார். அவ்வளவுதான்.
------------------------------------28.3.11