Saturday, February 19, 2011

மூலதனங்களும் மானியங்களும்



அசோகன் முத்துசாமி

ஒரு தடவை ஊழல் நடந்தது தனக்கு தெரியாது என்கிறார். பின்னர், ஊழலா எங்கே நடந்தது திருப்பிக் கேட்கிறார். அதாவது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்கிறார். முறையாக ஏலம் விடப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்ல தனக்கு அப்போது தோணவில்லை என்று இப்போது கூறுகிறார். பின்னர், ஏலமே விடாதபோது அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்று கணக்கிட முடியாது என்கிறார். அதற்கும் பிறகு, அப்படியானால் உணவுக்கும், எரிபொருளுக்கும், உரத்திற்கும் அளிக்கப்படும் மானியத்தை அரசுக்கு ஏற்படும் இழப்பு என்பீர்களா என்று கேட்கின்றார்.
தொலைக்காட்சி நிறுவனங்களின் செய்தி ஆசிரியர்களுக்கு பேட்டி அளித்த போது நல்லவர் வல்லவர் என்று இட்டுக் கட்டப்பட்ட இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்தான் இப்படிப் பேசியிருக்கின்றார். சரியாகச் சொன்னால், உளறியிருக்கின்றார்.
முதலில் தனக்கு ஒன்றுமே தெரியாது என்பதும், பின்னர் இழப்பை கணக்கிட முடியாது என்பதும் முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றது. முதல் கருத்தின் பொருள், ஊழல் நடந்திருக்கின்றது, ஆனால் தனக்கு அப்போது அது பற்றி ஒன்றுமே தெரியாது என்பதாகும். இரண்டாவது கருத்தின் பொருள், ஊழலே நடக்கவில்லை என்பதாகும். சிக்கிக் கொண்டவர்கள்தான் இப்படி மாற்றி மாற்றிப் பேசுவார்கள்.
மேலும், அவர் எழுப்பியிருக்கும் கடைசி கேள்வியின் உட்பொருள் என்னவென்று எல்லோருக்குமே தெரியும். ஆமாம், 2ஜி யினால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்றால் அவசியப் பொருட்களுக்கு அரசாங்கம் வழங்கும் மானியத்தையும் இழப்பு என்பீர்களா- என்று கேட்கின்றார். வேறு வார்த்தைகளில் கூறினால், அதுதான் ஒரு ருபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கின்றோமே, பேசாமல் தின்னுப்புட்டு போக வேண்டியதுதானே என்கிறார். அதிகம் பேசாதே என்கிறார். கேள்விகள் கேட்காதே என்கிறார்.
அக்கேள்வி வேறு விதமாகவும் பொருள் படும். ஆமாம், ஊழல் நடந்து விட்டது, இப்போது என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள் என்று எதிர்க்கேள்வி கேட்பதாகவும் கொள்ளலாம். உலகெங்கும் உள்ள நாடுகளின் தண்டனைச் சட்டங்களின்படி, குற்றம் செய்பவர் மட்டுமல்ல, குற்றத்திற்கு துணை போகின்றவர் மற்றும் அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் இருந்தும் தடுக்கத் தவறியவர் ஆகிய இருவருமே குற்றவாளிகள்தான். நிற்க.
       மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கட்சியின் அல்லது கூட்டணிகளின் சார்பாக 'நியமிக்கப்படும்' பிரதமர் ஒரு வகையில் சர்வ அதிகாரம் படைத்தவர். அதாவது, தன்னுடைய அரசாங்கத்தின் அல்லது அமைச்சரவையின் செயல்களுக்கு அவரே பொறுப்பு; நல்லது கெட்டதுகளுக்கு அவரே பொறுப்பு. ஆதலால், யாரை அமைச்சராக ஆக்க வேண்டும், அல்லது யாரை அமைச்சராக ஆக்கக் கூடாது என்கிற அதிகாரம் முற்ற முழுக்க அவரது விருப்பம். ஒரு அமைச்சரின் முடிவை ரத்து செய்யும் அதிகாரம் பிரதமருக்கு இருக்கின்றது. ஆனால், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முழுக்க முழுக்க தொலைதொடர்பு அமைச்சகம் செய்தது, தனக்கு எதுவும் தெரியாது என்கிறார். இன்று வரை பிரதமர் அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்யவில்லை. இது நம் அனைவருக்கும் தெரியும்.
சரி, போனால் போகட்டும். 2009 பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஆ.ராசாவை ஏன் மீண்டும் அதே துறையின் அமைச்சராக ஆக்கினீர்கள் என்று கேட்கப்படுகின்றது. அதாவது, அப்போதே அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருக்கின்றது என்கிற குற்றச்சாட்டுகள் ராசா மீது எழுந்து விட்டபோதிலும், ஊழல் குற்றம் சாட்டப்படுகின்றவரை ஏன் மீண்டும் அதே துறையின் அமைச்சராக ஆக்கினீர்கள் என்று கேள்வி கேட்கப்படுகின்றது. தங்களுடைய கட்சியின் சார்பாக ஆ.ராசா மற்றும் தயாநிதி மாறனை அமைச்சர்களாக ஆக்க வேண்டும் என்று திமுகவால் பரிந்துரைக்கப்பட்டது; நான் என்ன செய்ய முடியும், கூட்டணி தர்மம் என்கிறார்.
நமது கேள்வி என்னவென்றால், ராசாதான் தொலைதொடர்புத் துறை அமைச்சராக ஆக்கப்பட வேண்டும் என்று திமுக தலைமை சொன்னதா? அப்படிச் சொல்லியிருந்தால் மன்மோகன் அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அறிவித்திருக்க வேண்டும். ஏனெனில், நிரா ராடியாவின் தொலைபேசிப் பதிவுகள் அப்படித்தான் கூறுகின்றன.
அப்படி இல்லை என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம். அப்படி இல்லை என்றால், ராசா-அலைக்கற்றை ஊழல் வழக்கில் மத்தியப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆ.ராசா- மீண்டும் தொலை தொடர்புத் துறை அமைச்சராக ஆனது பிரதமரின் விருப்பப்படிதான் என்று ஆகின்றது. டாடாக்களின், அம்பானிக்களின் விருப்பத்தை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதில் பெருமிதமடையும் பிரதமர் மன்மோகன் சிங்கின் விருப்பப்படிதான்-அதாவது அந்த பெரு முதலாளிகளின் விருப்பப்படிதான்-ராசா மீண்டும் தொலை தொடர்புத் துறை அமைச்சராக ஆக்கப்பட்டார் என்று ஆகின்றது. பிரதமர் இதற்கு விளக்கம் சொல்ல வேண்டும்.
கூட்டணி தர்மத்தை பிரதமர் காரணம் காட்டுவது சுத்த அயோக்கியத்தனமாகும்; அதை நம்புவது முழு ஏமாளித்தனமாகும். அதே போல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்த முடியாது என்பதால் தான் பதவி விலக வேண்டும் என்று நினைக்கவில்லை என்கிற அவரது கூற்றுமாகும்.
இது குறித்து தி ஹிந்து நாளிதழில் சித்தார்த் வரதராஜன் (19.2.11) எழுதியிருக்கும் கட்டுரையில் எழுப்பியிருக்கும் கேள்வியும் கருத்துக்களும்  முக்கியமானவையாகும்.
#அடிக்கடி தேர்தல் நடப்பதையும், மக்களின் வரிப்பணம் செலவாவதையும் தான் விரும்பவில்லை என்று பிரதமர் சொல்வது உண்மையெனில், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரிகள் 2008ம் ஆண்டு ஐமுகூ அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்ற போது இதே அச்சம் அல்லது கருத்து ஏன் மன்மோகன்சிங்கிற்குத் தோன்றவில்லை?
#காங்கிரசின் ஆதரவில்தான் தமிழகத்தில் திமுக ஆட்சி நடத்தி வருகின்றது. ஆதலால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு தன்னுடைய ஆதரவை திரும்பப் பெறுவது திமுகவினால் முடியாத காரியம்.
#காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஊழல் அமைச்சர்களுக்கே, உதாரணமாக ஊழல் வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனங்களுக்கு ஆளாகியிருக்கும் விலாஸ்ராவ் தேஷ்முக் போன்றவர்களுக்கே அமைச்சரவையில் இடம் அளித்திருக்கும்போது கூட்டணி நிர்ப்பந்தம் காரணமாகத்தான் ராசாவிற்கு பதவியளித்தேன் என்று சொல்வதை நம்ப முடியாது.
மிக முக்கியமான கேள்விகள். மன்மோகன்சிங்கின் வாதங்கள் அனைத்தும் தவிடு பொடியாகின்றன.
மொத்தத்தில் மன்மோகன்சிங்கின் பெரு முதலாளிகள் ஆதரவுக் கொள்கையும், அமெரிக்க அடிவருடித்தனமும் மீண்டும் ஒரு முறை தங்களை அம்பலப்படுத்திக் கொண்டுள்ளன. அரசுக்கு 1,76,379 கோடிகள் இழப்பு ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஊழலையும், அத்தியாவசியப் பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தையும் ஒப்பிடுவதன் மூலம் அது தெள்ளத் தெளிவாகின்றது. அரசுக்கு வர வேண்டிய வருமானம் தனியாரின் மூலதனமாக ஆகிவிட்டது. கோடிக்கணக்கான மக்களின் பணம் ஒரு நூறு முதலாளிகளின் மூலதனமாக ஆகிவிட்டது. அந்தப் பணம் அரசாங்கத்திற்கு வந்திருந்தால் அதை மேலும் மக்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களுக்கு மானியமாக வழங்க முடியும். கிராமப்புற வேலை உத்திரவாதத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி அதை மேலும் விரிவுபடுத்த முடியும். ஆனால், தனியார் முதலாளிகள் லாபமடைவதை விரும்பும் பிரதமருக்கு மக்களுக்கு நிவாரணம் அளிப்பதில் விருப்பமில்லை.
அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் ஆட்சியையும் இழக்கத் துணிந்தவர், ஆட்சியை இழக்க விரும்பாமல் ஊழல் உறுப்பினரை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்கிறார் என்றால் என்ன பொருள்? அமெரிக்காவிற்கும், பெரு முதலாளிகளுக்கும் சேவை செய்ய முடிந்தால் ஆட்சியிலிருப்பார், முடியவில்லை என்றால் ஆட்சியையும் துறந்து விடுவார்; இதுதானே பொருள்?
இவர் நல்லவரா கெட்டவரா என்ற கேள்வியே எழவில்லை. மக்களைப் பொருத்த வரையில் இவர் கெட்டவர்தான்.
ராசாவின் மீது இப்போது சிபிஐ நடவடிக்கை எடுத்திருக்கின்றது. ஆனால், அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பை எப்படி வசூலிக்கப் போகிறார்கள்? உரிமம் பெற்ற முதலாளிகளிடமிருந்து இந்த வித்தியாசத் தொகையை வசூலிப்பார்களா? கொடுக்காதவர்களின் உரிமங்களை ரத்து செய்வார்களா? மன்மோகன் சிங்கின் பேட்டி இது எதுவும் நடக்காது என்பதையே உணர்த்துகின்றது.  கூடுதல் கட்டணம் கொடுக்காதவர்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்றால், மானியங்களையும் ரத்து செய்யலாமா என்று கேட்பார் போல் தெரிகின்றது.

---------------------------------------------------19.2.11