Saturday, November 19, 2011

மீண்டும் காலனியாக்கப்பட்ட லிபியா

















   

அய்ஜாஸ் அகமது

தமிழில்: அசோகன் முத்துசாமி

2001 அக்டோபரிலிருந்து 2011 அக்டோபர் வரை காபூல் முதல் திரிபோலி வரையில் பத்தாண்டுகளில் நடத்தப்பட்ட ஈவிரக்கமற்ற புவிக் கோள யுத்தத்தில் இந்துகுஷ் மலையிலிருந்து ஆப்பிரிக்காவின் மத்திய தரைக்கடல் கரையின் வடக்கு முனை வரையிலான மிகப் பரந்த பரப்பில் உள்ள நாடுகள் பாழாக்கப்பட்டன; தலைநகரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. அரபு உலகத்திற்கு உள்ளேயே இந்த அமெரிக்க-ஐரோப்பிய நரபட்சிணிகளின் அதி தீவிர ஏகாதிபத்தியத் தாக்குதல் இன்னும் சிரியா வரையிலும் செல்லலாம்; எதிர்காலத்தில் ஏதோ ஒரு தேதியில் அதற்கும் அப்பால் ஈரானுக்கும் செல்லலாம். எப்படியாயினும் இப்போதைக்கு நேட்டோ வாடிக்கையாளர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களால் லிபியா ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது அண்டை நாடுகளான டுனிஷியாவிலும் எகிப்திலும் முன்னர் இவ்வருடத்தில்  பற்றவைக்கப் பட்டதிலிருந்தே அணைக்க முயற்சிக்கப்பட்டு வந்த கலக நெருப்பு வென்றடக்கப்பட்டதைக் குறிக்கிறது. எனினும், ஆப்பிரிக்காவின் பெரும் பகுதிக்கு இது அமெரிக்க-ஐரோப்பிய கூட்டமைப்பு தொடுக்கும் ஆக்கிரமிப்பு யுத்தத்தின் மற்றுமொரு துவக்கமாக மட்டுமே இருக்கலாம்; அது 19ம் நூற்றாண்டின் இறுதியில் பெர்லினில் புனிதப்படுத்தப்பட்ட பிரபலமான 'ஆப்பிரிக்காவிற்கான யுத்தத்தை' விட இன்னும் மோசமாக அக்கண்டத்தை நாசமாக்கலாம். (ஆப்பிரிக்காவிற்கான யுத்தம் அல்லது ஆப்பிரிக்காவிற்கான போட்டி என்பது 1881லிருந்து 1914 வரையில் ஐரோப்பிய நாடுகள் ஆப்பிரிக்காவின் மீது படையெடுத்ததையும், அதன் பகுதிகளைக் கைப்பற்றியதையும், காலனியாக்கியதையும் குறிக்கிறது-மொர்).

மனிதாபிமான ரீதியாகத் தலையிடுதல்

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயராலும், மனித உரிமைகளின் பெயராலும் ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்கப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம், அணுஆயுதப் பரவலைத் தடுப்பது மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் பெயரால் இராக் மீது படையெடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட மனித உரிமைகளின் பெயரால் மட்டுமே ஆக்கிரமிக்கப்பட்ட முதல் நாடு லிபியாதான். லிபியாவில் மோதல்கள் துவங்கிய மிக ஆரம்ப நாட்களில் அதிபர் பராக் ஒபாமா பின்வருமாறு தடாலடியாகக் கூறினார்: 'நேட்டோ ஒரு நாள் தாமதித்தித்தால் கூட, பெங்காஷி நகரத்தில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருப்பார்கள்; அது அப்பிராந்தியம் முழுவதும் எதிரொலித்து உலகத்தின் மனசாட்சியைக் களங்கப்படுத்தியிருக்கும்'. ஒபாமாவின் மூத்த உதவியாளர்கள் நடக்கவிருந்த படுகொலை ஒரு லட்சம் பேரின் மரணத்திற்கு இட்டுச் சென்றிருக்கும் என்று கூறினார்கள்; இதுதான் அமெரிக்காவின் தொலைக் காட்சிகளில் வெறுப்பேற்றும் வகையில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது; ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தைப் பெறுவதற்காக மனித உரிமைகள் அடிப்படையிலான தலையீடு என்பது விவாதிக்கப்பட்ட அதிகார மையங்களிலும் மீண்டும் மீண்டும் இதுதான் கூறப்பட்டது. இது ஒரு வெட்கங்கெட்ட பொய்யாகும்; இராக் அணுஆயுதங்களைத் தயாரிக்கிறது என்று ஒபாமாவிற்கு முந்தைய அதிபர் ஜார்ஜ் புஷ் கூறிய அச்சுறுத்தும் பொய்யைப் போன்றதே ஆகும் இது. இத்தகைய தவறான தகவல்களின் அடிப்படையில்தான் மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை என்கிற இரண்டகமான கோட்பாட்டைப் பயன்படுத்தி பாதுகாப்பு கவுன்சிலில் 1970 மற்றும் 1973ம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன; ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் ஆகிய நாடுகளின் மீது படையெடுப்புகள் ஏற்கனவே நடந்து கொண்டிருந்த 2005ல்தான் ஐநாவின் கடமைகள் பட்டியலில் இது சொருகப்பட்டது.
அந்த வேளையில்தான் புஷ் நிர்வாகம் ஐநா உள்பட சர்வதேச அரங்கில் தனக்கு பின்வரும் உரிமைகள் இருப்பதாகக் கூறிக் கொண்டிருந்தது: 1). இந்த பயங்கரவாத யுகத்தில் தன்னுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடிய நாடு என்று அமெரிக்கா கருதுகின்ற எந்த நாட்டின் மீதும் முன்னெச்சரிக்கையாக ராணுவத் தாக்குதல் நடத்தும் உரிமை அமெரிக்காவிற்கு இருக்கிறது; 2) பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் நடந்து கொண்டிருக்கும் நிலைமையில் ஜெனிவா ஒப்பந்தத்தின் பல்வேறு பண்புக் கூறுகள் இனியும் பொருந்தாது. இந்த முன்னெச்சரிக்கை தாக்குதல் எனும் சொல்லாடலுக்கு மனித உரிமைகள் அடிப்படையிலான தலையீடு என்கிற வடிவத்தில் பேரரசின் தயாள குணம் எனும் சொல்லாடல் மூலம் பின்னர் வலு சேர்க்கப்பட்டது. இப்போதைய கூற்று என்னவென்றால், எந்த ஒரு இறையாண்மை உள்ள நாட்டிலும் மக்கள் படுகொலை அல்லது இனப்படுகொலை நடக்கப் போகிறது என்று கருதினாலும் அந்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடும் உரிமை 'சர்வதேச சமுதாயத்திற்கு' (அமெரிக்க-ஐரோப்பிய சக்திகள் வரையறுக்கின்ற சர்வதேச சமுதாயம்) இருக்கிறது என்பதாகும். கடந்த மார்ச் மாதம் மூன்றாவது வாரம் நேட்டோ படைகள் லிபியாவின் மீது குண்டு வீச்சு தாக்குதலைத் துவங்கின; ஐநா சபையின் வரலாற்றிலேயே மனித உரிமைகள் அடிப்படையிலான தலையீடு என்கிற கோட்பாட்டின்படி அதனால் அனுமதிக்கப்பட்ட முதல் ராணுவத் தாக்குதல் அதுதான். 'இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம்.....லிபியா ஒரு நீதி சாஸ்திரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது....பிரான்ஸ், ஐரோப்பா, மற்றும் உலகத்தின் அயலுறவுக் கொள்கையில் இது ஒரு முக்கியமான திருப்பு முனையாகும்' என்று பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசி அடித்துக் கூறியது அவருக்கே உரிய வகையில் சரிதான்.
பெங்காஷியில் ஒரு லட்சம் பேர் படுகொலை செய்யப்படவிருக்கிறார்கள் என்ற ஒபாமாவின் கூற்றுக்கு நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் தென்படவில்லை; போரின் ஆரம்ப கட்டங்களில் கடாபியின் படைகளால் கைப்பற்றப்பட்ட கலகக்காரர்களின் நகரங்களில் படுகொலைகள் எதுவும் நடக்கவும் இல்லை. அதற்கு மாறாக, நேட்டோவின் கூலிப்படைகளால் படுகொலைகள் நடத்தப்பட்டிருக்கின்றன என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன. லிபியாவில் குடியிருந்த கறுப்பு ஆப்பிரிக்கர்களில் சுமார் மூன்று லட்சம் பேர் லிபியாவை விட்டு வெளியேற்றப்பட்டனர் என்று நைஜர், மாலி மற்றும் சாட் போன்ற அண்டை நாடுகள் தெரிவிக்கின்றன; நேட்டோவின் உள்ளூர் கூட்டாளிகளும், வாடிக்கையாளர்களும் நேட்டோவின் 40000க்கும் மேற்பட்ட குண்டு வீச்சுகளின் நாசகரமான பாதுகாப்பில் திரிபோலி நோக்கி முன்னேறியபோது இது நிகழ்ந்தது. அண்டை நாடுகளைச் சேர்ந்த இந்த அகதிகளையும், தொழிலாளர்களையும் தன்னுடைய நாட்டின் விரிவடைந்து கொண்டிருந்த பொருளாதாரத்தின் தொழிலாளர் பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக கடாபியின் ஆட்சி வரவேற்றிருந்தது; அந்த மூன்று லட்சம் பேர் வெளியேற்றப்பட்டது  மட்டுமின்றி, லிபியாவைச் சேர்ந்த கறுப்பின மக்களே படுகொலை செய்யப்பட்டனர் என்பதற்கு நம்பகமான தகவல்கள் இருக்கின்றன. இந்த சூறையாடலின் அளவு இன்னும் அறுதி செய்யப்படவில்லை; ஆனால், ஐநாவின் பாதுகாப்புக் கவுன்சிலுடன் சேர்ந்து நேட்டோ கட்டவிழ்த்துவிட்ட இந்த யுத்தத்தால் 50000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது ஏற்கனவே தெளிவு; ஐந்து லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டோர் வீடிழந்துள்ளனர்;  பெரும்பாலும் நேட்டோவிடம் ஆயுதம் பெற்ற கலகக்காரர்களினால்தான் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; அவர்கள்தான் இப்போது அந்த நாட்டின் அரசாங்கமாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். பாதுகாப்புக் கவுன்சிலோ அல்லது நேட்டோ படைத்தளபதிகளோ அல்லது அமெரிக்க வரலாற்றில் கறுப்பினத்தைச் சேர்ந்த முதல் அதிபரும், ஒரு கென்ய தந்தைக்குப் பிறந்தவருமான ஒபாமாவோ கூட இந்த நிராதரவான, பெரும்பாலும் கறுப்பின ஆப்பிரிக்க மக்களைப் பாதுகாப்பது தங்களது பொறுப்பு என்று நினைக்கவில்லை; நைஜீரியாவின் அமெரிக்க ஆதரவு அதிபர் உள்பட பல்வேறு ஆப்பிரிக்க அரசுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்றபோதிலும்.
நமது காலத்தின் மனித உரிமைகள் பற்றிய ஜனநாயகச் சொல்லாடலின் கொடிய அம்சங்களில் ஒன்று அடுத்தடுத்து இந்த முக்கண்டத்தின் (ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா) இறையாண்மை உள்ள நாடுகளின் உள் விவகாரங்களில் ஏகாதிபத்தியத் தலையீட்டை நியாயப்படுத்துவதற்கு இந்தக் கோட்பாடு பயன்படுத்தப்படுகிறது என்பதாகும்; இது ஐநா சாசன விதிகள் மற்றும் தேச அரசுகள் பற்றிய வெஸ்ட்பாலியன் ஒழுங்கமைப்பு (பிரஷ்யாவின் ஒரு பகுதியான வெஸ்ட்பாலியனில் 1648ம் ஆண்டு நாடுகளின் 'நிலப்பரப்பு முழுமை' மற்றும் 'உள்நாட்டு நிர்வாகக் கட்டமைப்புகளில் அந்நியருக்கு இடமின்மை' ஆகிய கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேச அரசுகள் குறித்த ஒப்பந்தம்-மொர்)   ஆகியவற்றை அப்பட்டமாக மீறுவதாகும்; அது மட்டுமின்றி, இன்னும் அடிப்படையாக, நேற்றைய வருடங்களின் காலனியப் பேரரசுகளை அகற்றுவதற்காக நடத்தப்பட்ட காலனிய எதிர்ப்புப் போராட்டங்களின் உணர்வுகளையும், வழக்கங்களையும் அப்பட்டமாக மீறுவதாகும். ஒரு சுதந்திர தேசத்தின் பிரஜைகளாக இருப்பதற்கான உரிமை அந்நிய தலையீடு இன்றி ஒரு சொந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையிலிருந்து பிரிக்க முடியாததாகும். கிட்டத்தட்ட லத்தீன் அமெரிக்காவின் ஒவ்வொரு நாட்டிலும் கடந்த ஐம்பதாண்டுகளில் மக்கள் மிகக் கொடூரமான சர்வாதிகாரங்களை எதிர்த்துப் போராடியிருக்கின்றனர்; ஆனால், அந்நியத் தலையீட்டை அவர்கள் எப்போதும் கேட்டதேயில்லை. அதற்கு மூன்று எளிமையான காரணங்கள். 1) மக்களுக்கு மட்டுமே தங்களது அரசாங்கங்களை மாற்றுவதற்கான உரிமை இருக்கின்றது; 2) கடாபி, சதாம் உசேன் உள்பட ஏகாதிபத்தியத்துடன் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கூட்டு சதி செய்யாத ஒரு சர்வாதிகாரியைப் பார்ப்பது கடினம்; 3) ராணுவத் தலையீடு என்பது எப்போதுமே விதிவிலக்கின்றி பலமிக்கவர்கள் பலவீனமானவர்களுக்கு எதிராகத் தலையிடுவதாகும்; விதிவிலக்கின்றி எப்போதுமே தலையிடுபவர்களின் நலன்களுக்காகவே தலையீடு நடக்கின்றது.
இந்த அடிப்படையான கோட்பாட்டின்படி பார்த்தால், கடந்த காலத்தில் சதாம் உசேனினுடைய ஆட்சியின் தன்மைக்கும் தலையீட்டிற்கும் எப்படி சம்பந்தம் இல்லையோ அது போலவே இன்று கடாபியின் சர்வாதிகார ஆட்சிக்கும் தலையீட்டிற்கும் சம்பந்தம் இல்லை. எதிர்காலத்தில் படையெடுப்பு நிகழ்வதாக இருந்தால், அது போலவே சிரியாவின் பசார் அல் அசாத் மற்றும் ஈரானின் அகமதிநிஜாத் ஆகியோரின் சர்வாதிகாரப் போக்கிற்கும் படையெடுப்பிற்கும் சம்பந்தம் இருக்காது. கடாபி ஆட்சியின் முரண்பட்ட தன்மையைப் பற்றி பின்னர் பார்ப்போம்; கடாபி ஒரு வகையான தாராளவாத ஜனநாயகவாதி என்று யாரும் வாதிடப் போவதில்லை. என்றபோதிலும், ஆப்பிரிக்க மற்றும் அரேபிய நாடுகளின் பெரும்பாலான ஆட்சியாளர்களைவிட அவர் ஒன்றும் சர்வாதிகாரி அல்ல என்பதைச் சொல்ல வேண்டும்; குறிப்பாக, சவூதி அரேபியாவிலும், வளைகுடாவின் மன்னராட்சிகள் முழுவதிலும் உள்ள மேற்குலகின் நண்பர்கள். அவருடைய எதேச்சாதிகாரம் மூர்க்கத்தனமாக இருந்தது உண்மைதான். என்றாலும், லிபிய மக்களின் நல்வாழ்வு என்கிற கண்ணோட்டத்திலிருந்து விஷயங்களைப் பார்த்தால், எதேச்சாதிகாரியாக இருந்தபோதிலும் சதாம் உசேன் கிழக்கு அரேபியாவின் மிகவும் முன்னேறிய சமூக நல அரசை நிர்மாணித்தது போல், ஆப்பிரிக்காவின் மிகவும் முன்னேறிய சமூக நல அரசை கடாபி நிர்மாணித்தார் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும். சமூக நல அரசை அகற்றுவதும், தேசியச் சொத்துக்களை தனியார்மயமாக்குவதும், பெரு முதலாளிகளின் சொத்தாக மாற்றுவதும்தான் உண்மையில் இந்த மனித உரிமைகள் ஏகாதிபத்தியத்தின் அருவருப்பான மர்மஸ்தானமாக இருக்கிறது. அத்தகைய தலையீட்டிற்கான காரணம் மனித உரிமைகள் பிரச்சனைதான் என்பது சற்றேனும் உண்மையாக இருந்தால், நியாயமாக சவூதி அரேபியாதான் முதல் இலக்காக இருந்திருக்க வேண்டும். பாலஸ்தீன மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், ஐநா பாதுகாப்புக் கவுன்சிலின் எண்ணற்ற தீர்மானங்களை நிறைவேற்றவும் நேட்டோ நாடுகள் ஏன் உடனடியாக இஸ்ரேலை ஆக்கிரமிக்கக் கூடாது?
யதார்த்தத்தில், லிபியாவில் மனித உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் நேட்டோவால் நடத்தப்பட்ட மகத்தான புனிதப் போர் கத்தாரைச் சேர்ந்த, எமிரேட்சைச் சேர்ந்த மதவாதிகள் உள்பட மற்றவர்களின் உதவியோடுதான் நடத்தப்பட்டது; அது போல், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் பெயரால் அசாத் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்ய சிரியாவில் உள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கும், அதன் கூட்டாளிகளுக்கும் துருக்கியில் உள்ள நேட்டோவின் இஸ்லாமியவாதிகள் சவூதி அரோபியாவுடன் சேர்ந்து ஆயுதம் வழங்கினர்.

எங்கே எண்ணை இருக்கிறதோ அங்கே பேரரசு செல்லும்

லிபியாவில் கலகம் துவங்கிய ஆரம்ப நாட்களில் லிபியாவின் தேசிய ஆட்சிமாற்றக் கவுன்சில் (என்டிசி) பிரான்ஸ் நாட்டு அரசாங்கத்திடம் ஒரு ரகசிய ஆலோசனையை முன் வைக்கிறது; என்டிசிக்கு பிரெஞ்சு அரசாங்கம் முழுமையான, நிலையான ஆதரவு வழங்குகிற பட்சத்தில் அதற்கு கைமாறாக லிபியாவின் தேசிய எண்ணை உற்பத்தியில் 35%த்தை பிரான்சிற்குத் தருவதாக அந்த ரகசிய முன் மொழிவு கூறுகின்றது. லிபியாவில் மனிதாபிமான அடிப்படையில் தலையிடுவதற்கு அதிகாரம் அளித்த பாதுகாப்புக் கவுன்சிலின் தீர்மானம் இந்த ரகசிய முன் மொழிவில் நன்கு பிரதிபலிக்கப்பட்டிருக்கின்றது. லிபரேஷன் என்கிற பிரெஞ்சு நாளிதழ் இந்தத் தகவல் பரிமாற்றத்தை வெளியிட்டபோது பிரெஞ்சு அரசாங்கம் அதை மறுத்தது. சதிகாரர்களின் இந்தப் பாசாங்கு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கடாபியின் படுகொலை அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அக்டோபர் 21ம் தேதி பிரிட்டனின் புதிய பாதுகாப்பு அமைச்சர் பிலிப் ஹாமன்ட், எண்ணைக் கிணறுகள் தோண்டுவதற்கு உரிமம் வழங்குமாறு ஒரு வேண்டுகோளை பிரிட்டன் அரசாங்கம் என்டிசிக்கு அனுப்பியிருக்கிறது என்று அறிவித்தார். அத்துடன் பின்வருமாறும் கூறினார்:
'எண்ணை வளங்கள் கொண்ட லிபியா ஒப்பீட்டளவில் வளமான நாடு...லிபியாவின் மறுகட்டமைப்பில் ஈடுபடுவதற்கு பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்...பிரிட்டிஷ் நிறுவனங்களும், பிரிட்டிஷ் விற்பனை அதிகாரிகளும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தங்களது பெட்டிகளைக் கட்டிக் கொண்டு லிபியாவிற்குப் புறப்பட வேண்டும் என்றும், அந்நாட்டின் மறு கட்டமைப்பில் பங்கெடுக்க வேண்டும் என்றும் நான் எதிர்பார்க்கிறேன்'.
திரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரகம் கடந்த செப்டம்பர் 22 (2011) அன்று மீண்டும் திறக்கப்பட்ட நிகழ்ச்சியில் கொடியேற்றிய அமெரிக்கத் தூதர் ஜெனி கிரெட்சும் இதே அளவு மகிழ்ச்சியாக இருந்தார்:
'லிபியாவின் இயற்கை வளங்கள் எனும் கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ள வைரம் எண்ணை என்பது எங்களுக்குத் தெரியும். கடாபியின் காலத்திலும் கூட உள்கட்டமைப்பு நிர்மாணம் மற்றும் இதர விஷயங்களில் அவர்கள் எல்லாவற்றையும் அ முதல் ஃ வரைத் துவக்கிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்க நிறுவனங்களை பெரிய அளவிற்கு இங்கு கொண்டு வர நாங்கள் எல்லா முயற்சிகளையும் செய்வோம்; அப்படிச் செய்ய எங்களால் முடிந்து விட்டால், அமெரிக்காவில் எங்களது சொந்த வேலை வாய்ப்பு நிலவரத்தை மேம்படுத்த அது உதவும்'.        
இத்தாலி எண்ணை நிறுவனத்தைக் குறிப்பிட்டு அந்நாட்டின் அயலுறவுத் துறை அமைச்சர் பிராங்கோ பிராட்டினியும் இந்த வெற்றிக் களிப்புப் பாடகர் குழுவில் தானும் மகிழ்ச்சியாக சேர்ந்து கொண்டார்: 'எதிர்காலத்தில் எனி (எண்ணை நிறுவனம்) முதன்மையான பாத்திரம் வகிக்கும்'. நேட்டோவின் தாக்குதலில் மிகக் கணிசமான அளவு நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களித்த கத்தார் இப்போதே கிழக்கு லிபியாவில் எண்ணை விற்பனையை நிர்வகித்துக் கொண்டிருக்கிறது; வரும்காலத்தில் வலுவான நிலையிலிருந்து யுத்தத்தின் பலன்களை விநியோகிக்கும் வேலையிலும் இறங்கும். 'லிபியாவின் இடைக்கால அரசாங்கம் மேற்கத்திய தொழில் நிறுவனங்களை வரவேற்க தனக்கு மிகுந்த விருப்பமிருப்பதாக ஏற்கனவே கூறியுள்ளது......தன்னுடைய மேற்கத்திய ஆதரவாளர்களுக்கு லிபியாவின் வர்த்தகத்தில் முன்னுரிமை அளிக்கவும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது' என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. இது கச்சிதமாக இருக்கிறது. 'இத்தாலி, பிரெஞ்சு மற்றும் பிரிட்டன் நிறுவனங்கள் போன்றவை விஷயத்தில் எங்களுக்கு மேற்கத்திய நாடுகளுடன் எந்தப் பிரச்சனையும் இல்லை; ஆனால், ரஷ்யா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுடன் எங்களுக்கு சில அரசியல் பிரச்சனைகள் இருக்கின்றன' என்று என்டிசியின் கட்டுப்பாட்டில் உள்ள அகோகோ என்கிற எண்ணை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் ஜலீல் மாயோப் என்பவர் கூறியதாக ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
லிபியாவில் 4600 கோடி (46 பில்லியன்) பேரல்கள் மரபான எண்ணை வளம் இருப்பதாக் கூறப்படுகிறது; அந்நாட்டை அது ஆப்பிரிக்காவின் மிகப் பெரும் எண்ணை வளம் கொண்ட நாடாக ஆக்குகிறது. ஆனால், நைஜீரியாவும், அங்கோலாவும் லிபியாவின் இந்த முதன்மை நிலையை மறுக்கின்றன. பிப்ரவரி மாதம் உள்நாட்டு யுத்தம் முழுவீச்சில் துவங்குவதற்கு முன்னர் லிபியா நாளொன்றுக்கு 16 லட்சம் பேரல் எண்ணை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. அதன் பெரும் பகுதி தெற்கு ஐரோப்பாவிற்குச் சென்றது. அங்குள்ள எண்ணைச் சுத்திகரிப்பு ஆலைகள் லிபியாவின் அடர்த்தி குறைந்த, உயர்தர கச்சா எண்ணையைச் சுத்திகரிப்பதற்கு ஏற்ற வகையில் கச்சிதமாக உருவாக்கப்பட்டவை. அதற்கு மாறாக, சவூதி அரேபியாவின் கச்சா எண்ணை கனமானது; இந்த சுத்திகரிப்பு ஆலைகளில் பெரும்பாலானவைக்கு அவை பொருத்தமற்றவை; புவியியல் ரீதியாக லிபியா அருகில் இருப்பதும் மிக மிகக் கூடுதலான ஈர்ப்புடையதாக அதை ஆக்குகிறது. நேட்டோ யுத்தத்திற்கு முன்னரே லிபியாவின் எண்ணையில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகளுக்குச் சென்றன; நேட்டோ குண்டுகளை வீசி வெற்றிப் பாதையில் பயணிக்கத் துவங்கியபோது முதலில் கைப்பற்றப்பட்டவை எண்ணை உற்பத்தி செய்யும் பகுதிகள்தான். இதற்கிடையே எண்ணைத் தொழிலின் பெரிய நிறுவனங்கள் தங்களது பழைய சலுகைகளை மீட்டெடுக்கத் தயாராக இருப்பது மட்டுமின்றி புதிய சலுகைகளைப் பெறவும் தயாராக இருக்கின்றனர். 42 வருடங்களுக்கு முன்னர் கடாபி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து கடாம்ஸ் மற்றும் சிர்தே போன்ற மிகப் பெரும் எண்ணை வயல்கள் பெரும்பாலும் அந்நிய எண்ணை நிறுவனங்களின் கைகளுக்கு எட்டாதவையாகவே இருந்தன. அவை இப்போது தனியார்மயமாக்கப்படும் எனவும், அந்நிய நிறுவனங்களுக்குத் திறந்து விடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. லிபியாவின் கடலில் உள்ள எண்ணை வளங்களுக்கும், எரிவாயு வளங்களுக்கும் இது பொருந்தும்.
எனவே, அரசியல் இறையாண்மையை இழப்பது என்பது இன்றியமையாதபடி பொருளாதார இறையாண்மை பெருமளவு வெட்டிச் சுருக்கப்படுவதற்கு இட்டுச் செல்கிறது.
ஆப்பிரிக்க ஒன்றியம் (எதிர்) 'சர்வதேச சமுதாயம்'

நேட்டோ படைகள் லிபியாவின் மீது விமானக் குண்டு வீச்சைத் துவக்கிய மூன்று மாதங்களுக்குப் பின்னர், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் உயர்மட்ட இடைக்காலக் குழுவிற்கும் பாதுகாப்பு கவுன்சிலின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இவ்வருடம் ஜீன் 15ம் தேதி நடைபெற்ற ஒரு சந்திப்பில் லிபிய நெருக்கடி பற்றிய தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கும் கடிதம் ஒன்றை ஆப்பிரிக்க ஒன்றியம் பாதுகாப்பு கவுன்சிலிடம் அளித்தது. இப்போது திரிபோலி வீழ்ந்துவிட்டது, கடாபி படுகொலை செய்யப்பட்டுவிட்டார்; இதற்குப் பின்னரும் பிற நாட்டு விவகாரங்களில் தலையிடும் பிரச்சனையில், ஒரு பக்கம் முக்கண்டத்தின் தேச அரசுகளுக்கும், மறு பக்கம் ஐரோப்பிய-அமெரிக்க தலையீட்டை நியாயப்படுத்தும் சர்வதேச சமுதாயத்தின் அமைப்புகளுக்கும் இடையில் கண்ணோட்டங்களுக்கும் பரிந்துரைகளுக்கும் இடையில் உள்ள பெரிய இடைவெளியை மதிப்பிட நாம் விரும்பினால் அந்தக் கடிதத்தின் உள்ளடக்கத்தை மீண்டும் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். அந்த முக்கியமான ஆவணத்திலிருந்து முதலில் வரிசையாக சில மேற்கோள்களைக் கொடுப்போம்.
1. லிபியாவில் நேட்டோவின் தலையீட்டிற்கான மூலகாரணம் என்னவாக இருந்த போதிலும், பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று ஐநா தீர்மானங்கள் 1970 மற்றும் 1973க்கு முன்னரும் அந்த தீர்மானங்களுக்குப் பின்னரும் ஆப்பிரிக்க ஒன்றியம் வேண்டுகோள் விடுத்தது. மூன்று மாதங்களாக ஆப்பிரிக்க ஒன்றியத்தை அலட்சியப்படுத்துவதும், புனித ஆப்பிரிக்க மண்ணின் மீது குண்டு வீச்சகளைத் தொடர்வதும் ஆணவமும், தான்தோன்றித்தனமும், சினமூட்டும் தன்மையும் கொண்ட செயலாகும்.
2. லிபியாவின் மீதோ அல்லது ஆப்பிரிக்க ஒன்றியத்தின் எந்த உறுப்பு நாட்டின் மீதோ ஆப்பிரிக்க ஒன்றியத்தின் வெளிப்படையான ஒப்புதல் இன்றி தாக்குதல் நடத்துவது அபாயகரமான ஆத்திரமூட்டலாகும்... இறையாண்மை என்பது ஆப்பிரிக்க மக்களின் விடுதலைக்கான ஒரு கருவியாகும்; அடிமை வர்த்தகம், காலனியம் மற்றும் நவகாலனியம் ஆகியவற்றால் நூற்றாண்டு கணக்கில் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளின் மக்கள் மாற்றத்திற்கான பாதையை வகுக்கத் துவங்கியுள்ளார்கள். ஆதலால், மக்கள் மீது அக்கறையின்றி ஆப்பிரிக்க நாடுகளின் இறையாண்மை மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஆப்பிரிக்க மக்களின் ஊழ்வினையின் மீது புதிய காயங்களை ஏற்படுத்துவதற்கு ஒப்பாகும்.
3. அரசுப் படைகளுக்கும் ஆயுதத் தாங்கிய கலகக்காரர்களுக்கும் இடையிலான போர் இனப்படுகொலை ஆகாது. அது ஒரு உள்நாட்டு யுத்தம்.....அரசுகளின் இறையாண்மையை அழிப்பதற்கு ஒரு சாக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு வன்முறையையும் இனப்படுகொலை என்றோ அல்லது நடக்கவிருக்கும் இனப்படுகொலை என்றோ வகைப்படுத்துவது தவறாகும்.
4. ஒரு உள்நாட்டு யுத்தத்தில் ஐநா எந்தத் தரப்பையும் ஆதரிக்கக் கூடாது. ஐநா பேச்சு வார்த்தையையே ஊக்குவிக்க வேண்டும்....பேச்சு வார்த்தைக்கு முன்னர் கர்னல் முவம்மர் கடாபி பதவி விலக வேண்டும் என்ற சில நாடுகளின் கோரிக்கை சரியல்ல. கடாபி பதவியில் இருக்க வேண்டுமா அல்லது போக வேண்டுமா என்பது லிபிய மக்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம். குறிப்பாக, கடாபி வெளியேற வேண்டும் என்று அந்நியர்கள் கோருவது தவறாகும். 2011 ஏப்ரல் 11 அன்று ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சமரசக் குழு திரிபோலிக்குச் சென்றபோது கடாபி பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொண்டார். அதற்குப் பிந்தைய யுத்தச் செயல்பாடுகள் எதுவும் ஆப்பிரிக்காவிற்கு ஆத்திரமூட்டுவதாகும். இது ஒரு தேவையற்ற யுத்தமாகும். இது நிற்க வேண்டும்...கடாபி வெளியேறாமல் கலகக்காரர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட முடியாது என்கிற கதையை நாங்கள் ஏற்கவில்லை. அவர்கள் பேச்சு வார்த்தையை விரும்பவில்லை என்றால் அவர்கள் கடாபியுடனான தங்களது யுத்தத்தை நேட்டோ குண்டு வீச்சுகள் இல்லாமல் நடத்திக் கொள்ளட்டும்....அந்நியர்களின் ஆதரவு பெற்ற குழுக்கள் பேச்சு வார்த்தையையும், உள்நாட்டில் கருத்தொற்றுமையை வளர்ப்பதையும் அலட்சியப்படுத்துகின்றன; அந்நிய ஆதரவாளர்களை வென்றெடுப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.
ஆப்பிரிக்க ஒன்றியம் எந்த வகையிலும் முற்போக்குவாதிகளின் ஒரு கூட்டமைப்பு அல்ல என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அது தேச அரசாங்கங்களின் ஒரு பழமைவாதக் குழுவாகும்; அவற்றில் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகையில் மேற்கின் கூட்டாளிகளாக இருப்பவை; எந்தக் குறிப்பிட்ட நேரத்திலும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் கூட்டங்களில் கலந்து கொள்ளும் அரசுகளின் தலைவர்களில் பலர் பணத்திற்காக எதையும் செய்பவர்கள், ஊழல்வாதிகள், எதேச்சாதிகாரிகள் அல்லது இன்னும் மோசமானவர்கள். என்றபோதிலும், சர்கோசி அல்லது சில்வியோ பெர்லுஸ்கோனி அல்லது மற்ற எந்த மேற்கத்திய தலைவரின் தனிப்பட்ட நீசத்தனத்தை விடவும் அவர்களது நீசத்தனம் பெரியதல்ல. விஷயம் என்னவென்றால், ஆப்பிரிக்க நாடுகள் ஒற்றுமையாக தங்களது குரலை எழுப்பும் ஒரே அமைப்பு ஆப்பிரிக்க ஒன்றியம்தான்; அது எழுப்பியுள்ள கோட்பாடுகளும், உண்மை விஷயங்களும் மறுக்க முடியாதவை.
முதல் விஷயமே என்னவென்றால், ஆப்பிரிக்க அரசுகளின் கூட்மைப்பின் கருத்திற்கு எதிராக பாதுகாப்புக் கவுன்சிலோ அல்லது நேட்டோவோ அல்லது அரசுகள் மற்றும் அமைப்புகளின் கூட்டமைப்புகள் எதுவுமோ கருத்து கூறும்போது தங்களது கருத்தை சர்வதேசச் சமுதாயத்தின் கருத்து என்று கூறிக் கொள்ளக் கூடாது என்பதுதான். இரண்டாவது விஷயம் என்னவென்றால், ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் எழுப்பப்படும் இறையாண்மை பிரச்சனை ஐரோப்பிய மற்றும் வெஸ்ட்பாலியன் குறிப்பிடும் வகையில் மட்டும் எழுப்பப்படவில்லை; ஆனால், அதை விட மிகவும் உணர்வு பூர்வமாகவும் மற்றும் வெடிப்புடனும், காலனியச் சூறையாடலின் நீண்ட வரலாற்றுக்குப் பின்னர் சமீபத்தில்தான் நாடுகள் விடுதலையடைந்தன என்கிற கண்ணோட்டத்திலிருந்து எழுப்பப்படுகின்றது; அந்த நாடுகளின் சுதந்திரம் இன்னும் பலவீனமானதாகவே இருக்கின்றது. மேலும், ஓபாமா, நேட்டோ கூட்டாளிகள் மற்றும் பாதுகாப்புக் கவுன்சில் ஆகியவற்றின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டையும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் கடிதம் நிராகரிக்கின்றது; அதாவது லிபியாவில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது அல்லது நடக்கவிருக்கின்றது என்கிற நிலைப்பாட்டை நிராகரிக்கின்றது. மாறாக, அரசுப் படைகளுக்கும் ஆயுதம் தாங்கிய கலகக்காரர்களுக்கும் இடையில் உள்நாட்டு யுத்தம்தான் நடக்கிறது என்று கறாராகக் கூறுகின்றது; எந்தத் தரப்பையும் ஆதரிக்கக் கூடாது என்று ஐநாவிடம் கேட்டுக் கொள்கிறது; மேலும், அந்நியர்களின் ஆதரவு பெற்ற குழுக்களையும், அந்நிய ஆதரவாளர்களை வென்றெடுப்பதற்காகவே வடிவமைக்கப்பட்ட கோரிக்கைகளையும் வெறுப்புடன் ஒதுக்கித் தள்ளுகிறது.
எப்படியாயினும் மிகுந்த காரிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்னவெனில், ஏப்ரல் 10ம் தேதியே கடாபி பேச்சுவார்த்தைக்கும், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சமரசத்திற்கும் ஒப்புக் கொண்டு விட்டார்; அதற்குப் பின்னர் ஆப்பிரிக்க ஒன்றியம் மிகச் சரியாகவே நேட்டோ தன்னுடைய ராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரியது; ஆப்பிரிக்க ஒன்றியத்தின் ஆதரவுடன் ஐநா சமரசப் பேச்சு வார்த்தைகளுக்கு உதவ வேண்டும் என்றும் கோரியது. பேச்சு வாத்தைக்காகவும், புருண்டியில் செய்தது போல் ஆப்பிரிக்க ஒன்றியப் படையைக் கொண்டு லிபியாவிற்குள் வன்முறையைக் கட்டுப்படுத்தவும், அமைதிப் பேச்சு வாத்தைக் காலத்தில் தண்டனையிலிருந்து தற்காலிகப் பாதுகாப்பு எனும் கோட்பாடுகளைப் பயன்படுத்தி மோதலை முடிவிற்குக் கொண்டு வரவும், அமைதி மீட்டெடுக்கப்பட்ட பின்னர் உண்மை அறியும் குழுக்கள் மற்றும் இணக்கத்தை ஏற்படுத்தும் குழுக்களை அமைக்கவும் ஒரு விரிவான திட்டத்தை அக்கடிதம் விவரித்திருந்தது.
இதில் எதுவுமே செவி மடுக்கப்படவில்லை; ஏனெனில், நியாயத்தின் குரல் பலவீனமானவர்களிடமிருந்து வந்திருந்தது; தலையிடுவதற்கும், ஆட்சியை மாற்றுவதற்குமான விருப்பம் உலகின் எஜமானர்களாக தங்களைத் தாங்களே நியமித்துக் கொண்டவர்களிடமிருந்து வந்திருந்தது.

நாகரீகமும் வெற்றிக் களிப்பும்

வெற்றியின் தருணத்தில், மற்ற மேற்கத்திய தலைவர்களைவிட அதிபர் ஒபாமா வார்த்தைகளை அளந்து பேசினார். நேட்டோவின் 40000க்கும் மேற்ப்பட்ட குண்டு வீச்சுக்களுக்கு லிபியா வீழ்ந்ததானது உலகெங்கும் அமெரிக்காவின் தலைமை வலுவாக இருக்கின்றது என்பதற்குச் சான்று என்றார். அவர் அந்தப் பெருமைக்கு உரிமை கொண்டாடுவது முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது. அமெரிக்காவின் கட்டாயப்படுத்தும் சக்தியில்லாமல் நேட்டோவிற்கு தாக்குதல் நடத்தும் அதிகாரத்தை வழங்கிய பாதுகாப்புக் கவுன்சிலின் தீர்மானத்தை நினைத்துப் பார்க்கவும் முடியாது. ஒசாமா பின் லேடன் மற்றும் அன்வர் அல் அவலாக்கி ஆகியோர் உள்ளிட்ட பலரின் படுகொலைகளை, நீதித்துறைக்கு அப்பாற்பட்ட தண்டனை நிறைவேற்றங்களை ஒபாமா இறுமாப்புடன் ஏற்றுக் கொண்டது நிராயுதபாணியான கடாபியைக் கொல்வதற்கும் வழங்கப்பட்ட பரிபூரண ஒப்புதலாகும். கடாபி உண்மையில் கொல்லப்படுவதற்கு முந்தைய 48 மணி நேரத்திற்குள் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் திரிபோலிக்கு வெற்றி விஜயம் செய்தார்; நேட்டோவாலும் அதன் உள்ளூர் வாடிக்கையாளர்களாலும் இப்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அங்கு கிளின்டன் சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் மிகத் தெளிவாகக் கூறினார்: 'கடாபியை விரைவிலேயே பிடித்து விடுவோம் அல்லது கொன்று விடுவோம் என்று நம்புகிறோம்'. கொலை செய்யத் தூண்டுவதை இத்தகைய கடுமையான வார்த்தைகளிற்குள் ஒளித்து வைக்க முடியாது.
அதிகார ஒப்புதல் அளிக்கப்பட்ட படுகொலைப் பிரச்சனை நம்மை ஒரு வகையில் தடுத்து நிறுத்துகிறது; ஏனெனில், மனித உரிமைகள் விஷயத்தில் ஏகாதிபத்தியத்தின் இரட்டை வேடத்துடன் அது மோதுகின்றது. கடாபியின் மரணமும் அவர் புதைக்கப்பட்டதும் பற்றிய விவரங்கள் இன்னும் தெளிவாக இல்லை. திரிபோலி சுற்றி வளைக்கப்பட்ட போது கடாபி பின்வாங்கிய நகரம் அவரையும் அவரைச் சுற்றி இருப்பவர்களையும் கொல்லும் ஒரே நோக்கத்துடன் நடத்தப்பட்ட நேட்டோ விமானங்களின் நூற்றுக்கணக்கான குண்டு வீச்சுகளினால் அழிக்கப்பட்டது என்பது நமக்குத் தெரியும். வாகனங்களின் மூலம் சிர்டே நகரத்தை விட்டு அவர் வெளியேறிக் கொண்டிருந்தபோது அந்த வாகனங்கள் மீதும் குண்டு வீசப்பட்டன என்பது நமக்குத் தெரியும். தங்களுடைய ரபாலே போர் விமானம்தான் கடாபியின் வாகனத்தைச் செயலிழக்கச் செய்தது என்று பிரெஞ்சுக்காரர்கள் கூறிக் கொண்டனர். தங்களுடைய நரபட்சிணிகளில் (யுத்த விமானங்கள்-மொர்) ஒன்றின் வேலைதான் அது என்று அமெரிக்கர்கள் கூறிக் கொண்டனர். முக்கியமான விஷயம் என்னவெனில் அவர் நேட்டோ கூலிப்படையினரால் நிராயுதபாணியாகவும் உயிருடனும் பிடிக்கப்பட்டார், அங்கும் இங்குமாக உதைத்திழுக்கப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்டார். லிபியக் கலகக்காரர்களைக் கட்டுப்படுத்தும் பணியில் அமெரிக்க, பிரெஞ்சு, பிரிட்டிஷ், கத்தார் நாட்டுப் படைகளும், இதர சிறப்புப் படையினரும் எவ்வளவு பேர் அந்த இடத்தில் இருந்தார்கள் என்பதை வைத்துப் பார்க்கும்போது, சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த கலகக்காரர்களிடமிருந்து அந்த செத்துப் போன மனிதனின் உடல் எடுத்துப் போகப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐநாவின் அதிகாரபூர்வ விசாரணை அதிகாரியான கிறிஸ்டோப் ஹெய்ன்ஸ் இந்த விஷயத்தில் தெளிவாக இருப்பது போல் தெரிகிறது: 'கைதிகள் சிறைப் பிடிக்கப்படும்போது அவர்களை வேண்டுமென்றே கொல்லக் கூடாது என்று ஜெனிவா ஒப்பந்தங்கள் மிகத் தெளிவாகக் கூறுகின்றன. ஒரு போர்க் குற்றத்தில் இதுதான் நடந்திருக்கிறது என்றால் அது விசாரிக்கபட வேண்டும்'.
என்றபோதிலும், சிக்கல் என்னவென்றால் கடாபியைக் கொல்பவருக்கு அல்லது கொல்லவோ, பிடிக்கவோ உதவுகிறவருக்கு 20 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என்று மேற்கத்தியக் கூட்டணி முன்னர் அறிவித்திருக்கிறது. எனவே, மேற்கத்திய விழுமியங்களுக்கு இங்கு ஒரு சோதனை: கடாபியைக் கொன்ற மனிதர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டுமா? அவருக்கு 20 மில்லியன் டாலர்கள் பரிசாகக் கொடுத்து, வீரனாகக் கொண்டாட வேண்டுமா? அல்லது சட்டத்தின் பிடியிலிருந்தும், வரலாற்றிலிருந்தும், நினைவிலிருந்தும் தப்பிக்க அனுமதிக்கப்பட வேண்டுமா? அப்படித் தப்பித்து ஒரு பெரிய தொகையுடன் மியாமியிலோ, தெற்கு கலிபோர்னியாவிலோ அல்லது ரைன் நதிக்கரையில் ஒரு மாளிகையிலோ அமைதியாக வாழ்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமா?
கடாபின் சொந்த இனம் பின்வரும் அறிக்கையை வெளியிட்டது: 'இஸலாமிய சம்பிரதாயங்கள் மற்றும் விதிகளின் படி புதைப்பதற்கு ஏதுவாக சிர்டேவில் உள்ள எங்களது இனத்தவரிடம் தியாகிகளின் உடல்களைக் கொடுக்கும்படி தேசிய இடைக்கால அரசாங்கத்தை நிர்ப்பந்திக்குமாறு ஐநா, இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு மற்றும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் ஆகிய அமைப்புகளைக் கேட்டுக் கொள்கிறோம்.' ஆனால், அப்படி ஒரு பாக்கியம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை! நேட்டோவின் கூலிப்படையினர் குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இடுப்பு வரை நிர்வாணமான கடாபியின் உடலையும், அவரது மகன் முடாசிமின் உடலையும் மிஸ்ராடாவில் உள்ள ஒரு கிடங்கில் காட்சிக்கு வைத்திருந்தார்கள்; நினைவுச் சின்னம் போல் பலர் அதைப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
மனித உரிமைகள் ஏகாதிபத்தியம் ஒரு புதிய பொழுது போக்குத் தொழிலைக் கண்டுபிடிப்பது போல் தெரிகிறது; பிணங்களுடன் உறவு கொள்ளும் சுற்றுலாத் தொழில்!
அது அப்படியே இருக்கட்டும். இந்த நிகழ்வு அமெரிக்காவின் தலைமைப் பண்பின் பலத்தை நிரூபிக்கிறது என்று அதிபர் ஒபாமா சரியாகவேச் சொன்னார். நேட்டோவின் கூலிப் படையினராகக் களத்தில் போரிட விதிக்கப்பட்டவர்கள் துவக்கத்திலிருந்தே ஆயுதம் தாங்கியவர்களாக இருப்பதை உறுதி செய்வதற்காக அமெரிக்கச் சிறப்புப் படையினரும் சிஐஏவினரும் கலகம் துவங்குவதற்கு முன்பே களத்தில் இருந்தனர்; பின்னர் அவர்களுடன் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு சிறப்புப் படைகளும், உளவுத் துறையினரும் சேர்ந்து கொண்டனர்; அவர்களுக்கு ஆதரவாக கத்தார், எமிரெட்ஸ் மற்றும் அவற்றைப் போன்ற நாடுகளின் ஆயுதம் தாங்கியக் குழுக்களும் சேர்ந்து கொண்டனர். பெரும்பாலான குண்டு வீச்சுக்களை நேட்டோவின் பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் பிரிவுகளே கவனித்துக் கொண்டன; ஆனால், உயர் மின்னணு தொழில் நுட்பத்தின் பெரும்பகுதியையும், (லிபியா) உள்கட்டமைப்பின் அடிப்படையான விஷயங்களையும் அமெரிக்கப் படைகள் கவனித்துக் கொண்டன; எடுத்துக் காட்டாக, மின்னணு உளவுத் தகவல்களைச் சேகரிப்பதையும், லிபியாவின் விமான எதிர்ப்பு ஏற்பாடுகளை அழிப்பதையும், அதன் கடற்கரையை யாரும் அணுக முடியாதபடிச் செய்வதையும் அமெரிக்கப் படைகள் கவனித்துக் கொண்டன. நேட்டோ விமானங்கள் எரிபொருள் நிரப்பிக் கொள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைப் பயன்படுத்திக் கொண்டன; அமெரிக்காவின் ஐரோப்பியக் கூட்டாளிகளுக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டபோது அவற்றைக் கொடுத்தன. ஒரு முக்கியமான பொருளில், இந்த ராணுவ நடவடிக்கை, 'ஆப்ரிகாம்' என்றழைக்கப்படும் ஆப்பிரிக்காவைக் கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்கப் படைத்தலைமை மற்றும் அதன் ஐரோப்பியக் கூட்டாளிகளும் சேர்ந்து நடத்திய இந்த தாக்குதல், ஒரு வெற்றிகரமான பரிசோதனையாகும் லிபியா.
ஒபாமா சூசகமாகப் பேசினார் என்றால் அவருடைய ஜடம் போன்ற துணை அதிபர் ஜோ பிடென் நறுக்கென்று கூறினார்: 'இந்தப் போரில் அமெரிக்கா 200 கோடி டாலர்கள் செலவழித்தது; ஒரு உயிரைக் கூட இழக்கவில்லை. கடந்த காலத்தைவிட வரும் காலத்தில் உலகை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறையாகும் இது.' உயிர் எனும்போது பிடென் அமெரிக்க உயிரையே குறிப்பிடுகிறார் என்பது கண்கூடு. மிகக் குறைவான மதிப்பீடுகள் கூட லிபியாவில் நடந்த யுத்தம் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் உயிர்களின் இழப்பிற்கு இட்டுச் சென்றது என்று கூறுகின்றன; அவர்களில் பெரும்பாலானோர் நேட்டோ குண்டு வீச்சு விமானங்களாலும், அவற்றின் உள்ளூர் கூட்டாளிகளாலும் கொல்லப்பட்டவர்கள்.
இன்னும் பொதுவாக இங்கு நாம் கூற வருவது என்னவென்றால், மிகவும் முன்னேறிய தொழில்நுட்பங்களைக் கொண்டு யுத்த களத்தை 'இயந்திரமயமாக்கப்பட்ட யுத்தகளமாக' மாற்றுவதும், அதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவு தரைப்படைகளைப் பயன்படுத்தாமலேயே யுத்தங்களை வெல்வது மற்றும் நாடுகளைக் கைப்பற்றுவது என்கிற அமெரிக்காவின் குறிக்கோள்தான். இந்தக் கருத்து முதன் முதலில் வியட்நாம் யுத்தத்தின்போது உருவானது. அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் (ஐரோப்பாவில்), இனி முதற்கொண்டு மேற்கு நாடுகள் இராக்கில் செய்தது போல் லட்சக்கணக்கான வீரர்களை கொண்டு படையெடுப்பதைவிட லிபிய மாதிரி தலையீட்டையே மேற்கொள்ள வேண்டும் என்று இதே கருத்தை பாடி ஆஸ்டவுன் போன்றோர் கூறினர்; ஆஸ்டவுன் ஒரு காலத்தில் போஸ்னியா-ஹெர்சகோவினாவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதியாகப் பணியாற்றினார்.
இம்மரிதிரியான ஈவிரக்கமற்ற ஆங்கிலோ-சாக்ஸன் ஆணவத்தை தற்போதைய பிரெஞ்சு அதிபர் சர்கோஷி போன்ற பேராசை கொண்ட அரசியல்வாதிகளால் வரலாறு மற்றும் நாகரீகம் பற்றிய உயர் கோட்பாடுகள் கொண்ட பிரெஞ்சு சொல்லாடலின் சொற்புரட்டுகளாக எளிதில் மாற்றிவிட முடியும். 'லா ஹீயூமனைட்' என்கிற பிரெஞ்சு இதழின் முன்னாள் ஆசிரியர் பியர்ரே லெவ்வி 2007ல் சர்கோஷி ஆற்றிய உரையொன்றின் ஒரு பத்தியை சமீபத்தில் நினைவூட்டியிருந்தார். அதில் 'சா£லிமேக்னே (8-9 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமப் பேரரசர்-மொர்) மற்றும் புனித ரோமப் பேரரசின் உடைத்தெறியப்பட்ட கனவுகள், புனிதப் போர்கள், கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய கிறித்துவத்திற்கு இடையிலான மாபெரும் பிளவு, 14ம் லூயி மற்றும் நெப்போலியன்  ஆகியோரின் வீழ்ச்சி.....' போன்றவற்றை சர்கோஷி மிக உயர்வாகப் புகழ்ந்தார். மேலும் தொடர்ந்த அவர் 'ஒரு நாகரீகத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடிய இன்று ஐரோப்பாவிற்கு மட்டுமே இருக்கிறது' என்றார். நாகரீகமயமாக்கும் ஆற்றல் தங்களுக்கு மட்டுமே இருப்பதாக அவர் கூறிக் கொண்ட உடனேயே அது வென்றடக்குவதற்கான பேராவலுக்கு இட்டுச் சென்றது. '12 நூற்றாண்டுகள் நீடித்த பிரிவினைக்கும், வேதனை மிக்க மோதலுக்கும் பின்னர் மத்திய தரைக் கடல் பகுதிகளை ஒன்றிணைக்கும்போக்கிற்குக் கொண்டு வரும் பிரான்சின் அதிபராக நான் இருக்க விரும்புகிறேன்....அமெரிக்காவும், சீனாவும் ஆப்பிரிக்காவை வென்றடக்கும் வேலையை ஏற்கனவே துவக்கி விட்டன. நாளைய ஆப்பிரிக்காவை நிர்மாணிப்பதற்கு பிரான்ஸ் எவ்வளவு காலம் காத்திருக்கும்? ஐரோப்பா தயங்கிக் கொண்டிருக்கும் போது மற்றவர்கள் முன்னேறுகிறார்கள்.'
லெவ்வி பின்னர் பிரான்ஸ் சோஷலிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டொமினிக் ஸ்டிராஸ்-கானை (பாலியல் துர்நடத்தைகளுக்காக சமீபத்தில் செய்திகளில் அதிகமாக அடிபட்டவர்) மேற்கோள் காட்டுகிறார். அவரும் சர்கோஷிக்கு இணையாக ஆராவரமாகப் பேசுகிறார்: 'வடக்கே ஆர்க்டிக்கின் குளிரும் பனியிலிருந்து தெற்கே சகாராவின் சுடும் மணல் வரை விரிந்து கிடக்கும் ஐரோப்பா' வேண்டும் என தன்னுடைய ஆசையை வெளிப்படுத்துகிறார். அந்த ஐரோப்பா தொடர்ந்து இருந்தால் மத்திய தரைக் கடலை ஒரு நிலப்பரப்பின் உள்புறத்தில் இருக்கும் கடலாக மாற்றி அமைத்து விடும்; ரோமானியர்கள் அல்லது மிகச் சமீபத்தில் நெப்போலியன் ஒன்று சேர்க்க முயற்சித்த பரப்பை மீண்டும் வென்றுவிடும்'.      
இந்த உலகக் கண்ணோட்டத்தின்படி, ரோமானியப் பேரரசிடமிருந்தும்,  நெப்போலியனிய யுத்தங்களிடமிருந்தும் ஒரு பணித் திட்டத்தை மரபுரிமையாக நேட்டோ பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது; அப்படியெனில், வட ஆப்பிரிக்காவை மீண்டும் கைப்பற்றுவதும் அதில் உள்ளடங்கியிருக்கிறது. அல்ஜீரியா ஒரு அந்நிய காலனி நாடு அல்ல, பிரான்சின் தொலைதூர மாகாணம்தான் என்று கொண்டாடி வந்த உரிமையை 50 வருடங்களுக்கு முன்னர்தான் பிரான்ஸ் துறந்தது. எப்படியாயினும், 'நாகரீகத்தை' முதலில் 'நாடுகளைக் கைப்பற்றுவதுடனும்' பின்னர் 'மீண்டும் கைப்பற்றுவதுடனும்' மிக நெருக்கமாகச் சேர்த்து நெய்திருப்பதுதான் கவனத்தை ஈர்க்கின்றது.

ஒபாமா, ஆப்பிரிக்கா மற்றும் ஏகாதிபத்திய திட்டம்

பரிதாபத்திற்குரிய 'பழைய ஐரோப்பா'! அதன் மூர்க்கத்தனமான நாகரீகப் பிதற்றல்களிலும் கூட அதனால் வட ஆப்பிரிக்காவில் இருந்த தன்னுடைய காலனியப் பேரரசை மீண்டும் கைப்பற்றுவது பற்றிதான் கற்பனை செய்ய முடிகின்றது. அதற்கு மாறாக, எப்படி நேரடியாக விஷயத்திற்கு வருவது என்பது அமெரிக்காவிற்குத் தெரிந்திருக்கிறது. லிபியாவிற்கு எதிரான யுத்தம் வெல்லப்பட்டு, ஆனால் கடாபி இன்னும் கொல்லப்படாமலிருந்த அக்டோபர் இரண்டாவது வாரத்தில் அதிபர் ஒபாமா பின்வருமாறு அறிவித்தார்: 'மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள பிராந்திய சக்திகளுக்கு உதவுவதற்காக சிறு எண்ணிக்கையிலான அமெரிக்கப் படைகளை அப்பகுதிக்கு அனுப்புவதற்கு நான் அதிகாரமளித்துள்ளேன்...அக்டோபர் 12ம் தேதி பொருத்தமான போர்க் கருவிகளுடன் அமெரிக்க ராணுவத்தின் முதல் குழு உகாண்டாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் கூடுதலான படைகள் அனுப்பப்படும்...யுத்த களத்திலிருந்து எல்ஆர்ஏவின் (கடவுளின் புரட்சிப் படை) ஜோசப் கோனி மற்றும் அதன் மூத்த தலைமையை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ள கூட்டாளிப் படைகளுக்கு இந்தப் படைகள் ஆலோசகர்களாகச் செயல்படும்....சம்பந்தப்பட்ட நாடுகள் ஒவ்வொன்றின் ஒப்புதலுடன் இது போன்ற அமெரிக்கப் படைகள் உகாண்டா, தெற்கு சூடான், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளுக்குள் அனுப்பப்படும்'.
எனவே, லிபியாவில் வெற்றி பெற்றவுடன் உடனடியாக அமெரிக்கப் படைகள் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள நான்கு நாடுகளுக்கு அனுப்பப்பட உள்ளன; மனித உரிமைகள் மீறலில் ஈடுபடும், கொடூரமான சர்வாதிகாரச் செயல்கள் புரியும் ஆட்சிகளின் சேர்ந்து ஒத்துழைக்கப் போகிறார்கள். கொடூரமான சர்வாதிகாரிகளில் உகாண்டாவின் 'நிரந்தர அதிபர்' யொவேரி முசெவேனியும் அடங்குவார். உகாண்டாவில் இந்த மனிதாபிமானப் பணித் திட்டத்தை எல்ஆர்ஏ-வை அகற்றுவது என்கிற காரணத்தைக் கூறி ஒபாமா நியாயப்படுத்தினார். இது விநோதமாக இருக்கிறது. எல்ஆர்ஏ சுமார் 25 வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறது; அது இப்போது போல் எப்போதும் பலவீனமாக இருந்ததில்லை. ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியில் ஏன் இப்படியொரு நடவடிக்கை திடீரென்று எடுக்கப்பட வேண்டும்? ரொனால்ட் ரீகன் அமைச்சரவையில் நிதித் துறை துணை அமைச்சராக இருந்த (அதனால் இடதுசாரி என்று சொல்ல முடியாத) பால் கிரெய்க் ராபர்ட்ஸ் விஷயத்தை ரத்னச் சுருக்கமாகக் கூறினார்: 'லிபியா கைப்பற்றப்பட்டு விட்டதால், எரிசக்தியிலும் கனிமப் பொருட்களிலும் சீனா முதலீடு செய்துள்ள மற்ற ஆப்பிரிக்க நாடுகளின் மீது ஆப்ரிகாம் தன்னுடைய வேலைகளைத் துவங்கும்.... ஆப்பிரிக்காவிற்கு முதலீடுகளையும், பரிசுகளையும் சீனா கொண்டு வருகின்றது; அமெரிக்கா படைகளையும், குண்டுகளையும், ராணுவத் தளங்களையும் அனுப்பி வைக்கிறது'.
இப்போது இப்படிப் படைவீரர்களை அனுப்பி வைப்பதும் கூட வரப் போகும் பெரிய நடவடிக்கையின் ஒரு அறிகுறி மட்டும்தான். மேற்காசியாவில் எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கைகளுக்காக  'சென்ட்காம்' என்ற ராணுவக் கேந்திரத்தை அமைத்திருப்பது போல் ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைகளுக்கு என ஆப்ரிகாம் என்கிற ராணுவ கேந்திரத்தை கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்கா நிர்மாணித்து வருகின்றது. ஆப்பிரிக்காவில் இந்த ஏகாதிபத்தியப் பணித் திட்டத்தின் ஒரு பகுதியாக மாலி, சாட், நைஜர், பெனின், போட்ஸ்வானா, கேமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, எத்தியோப்பியா, காபோன், ஜாம்பியா, உகாண்டா, செனகல், மொசாம்பிக், கானா, மாளாவி மற்றும் மொரிடானியா ஆகிய நாடுகளின் ராணுவங்களுக்கு சுறுசுறுப்பாக பயிற்சி அளித்து வருகின்றது. இதர நேட்டோ நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா எண்ணற்ற ராணுவப் பயிற்சிகளை ஆப்பிரிக்காவில் நடத்தியுள்ளது; இதற்கு நைஜர் டெல்டா பகுதியிலிருந்தும் கினியா வளைகுடாவிலிருந்தும் வரும் எண்ணை விநியோகத்தைப் பாதுகாப்பது என்று வெளித் தோற்றத்திற்குக் காரணம் சொல்லப்பட்டது. அப்பகுதியில் லிபியா தவிர்த்து அங்கோலா, நைஜீரியா, கேமரூன், பூமத்தியரேகை கினியா, சாட் மற்றும் மொரிடானியா ஆகியவை எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கியமானவையாகும். இவை அனைத்தும், அவற்றுடன் மற்றவையும், தேவை ஏற்பட்டால் லிபியாவைப் போலவே பாதுகாக்கப்படும்.
விவரங்களுக்குள் போவதற்கான இடம் இதுவல்ல. ஆப்பிரிக்காவில் மிதமிஞ்சி கிடைக்கும் இயற்கை வளங்களைக் கைப்பற்றுவதற்கான யுத்தத்தில் லிபியாவின் வீழ்ச்சி முதல் படியாக இருக்கும் என்று சொல்வது போதுமானது. பல்வேறு கலகங்களும், ரத்தக்களறிகளும் ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால் இறுதியில் இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் செய்தது போலவே ஆப்ரிகாம்-நேட்டோ கூட்டணியின் பல புதிய ராணுவத் தளங்கள் நிர்மாணிக்கப்படப் போவதை நாம் காணப் போகிறோம். ஆப்பிரிக்காவின் இயற்கை வளங்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஐரோப்பிய-அமெரிக்க ஏகாதிபத்தியக் கூட்டணிக்காக பாதுகாத்து வைப்பது மட்டுமல்ல நோக்கம்; சீனாவிற்கு அவை கிடைக்காமல் மறுப்பதும் நோக்கம்; சீனா தன்னுடைய எண்ணைத் தேவைகளில் மூன்றில் ஒரு பகுதியை ஆப்பிரிக்காவிலிருந்து, குறிப்பாக அங்கோலா மற்றும் சூடான் ஆகிய நாடுகளிலிருந்து, பெறுகின்றது; அது மட்டுமின்றி பிளாட்டினம், செம்பு, மரம் மற்றும் இரும்புத் தாது ஆகியவற்றையும் பெறுகின்றது. சுமார் 75 சீன நிறுவனங்கள் 36000 ஊழியர்களுடன் லிபியாவில் செயல்பட்டு வந்தன; எண்ணைத் துறையைவிட உள்கட்டமைப்புத் துறையில் அதிகமாகச் செயல்பட்டு வந்தன. போருக்கு முந்தைய லிபியாவின் ஏற்றுமதியில் சீனாவின் பங்கு மட்டும் 11% ஆகும். அது தன்னுடைய ஊழியர்களை லிபியாவிலிருந்து வெளியேற்றியது; லிபிய மக்களைப் பாதுகாப்பது என்ற பாதுகாப்புக் கவுன்சிலின் தீர்மானத்தை ஆட்சியை மாற்றுவது என்பதாக நேட்டோ தன்னிச்சையாக மாற்றிக் கொண்டது என்று குற்றம் சாட்டியது.
லிபியாவிலிருந்து சீனா வெளியேறியதை நிரந்தரமாக்க வேண்டும் என்றும், ஆப்பிரிக்கா எங்கும் அத்தகைய வெளியேற்றம் மீண்டும் மீண்டும் நிகழ வேண்டும் என்றும் அமெரிக்கா விரும்புகிறது. அது நடக்குமா? இப்போதே சொல்ல முடியாது. அமெரிக்காவிடம் ராணுவ பலமும், வீழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வல்லரசின் மூ£க்கத்தனமும் இருக்கின்றது; ஆனால், சீனாவிடம் பணமும், வளரும் ஒரு பொருளாதார சக்திக்கு உரிய பனி போன்ற பொறுமையும் இருக்கிறது. ஒரு மோதல் நடந்து கொண்டிருக்கிறது; அது முடிவதற்கு பல பத்தாண்டுகள் ஆகும்.

நிறைவு

லிபிய யுத்தத்தின் முக்கியத்துவம் தொடர்பான முக்கியமான பிரச்சனைகள் இங்கு விவாதிக்கப்படவில்லை; அரேபிய எழுச்சி என்று சொல்லப்படுகிறதே அதன் மீது இவை எல்லாம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? தூக்கி எறியப்பட்ட கடாபி ஆட்சியின் தன்மை என்ன? உருவாகிக் கொண்டிருக்கும் ஆட்சியில் எந்தெந்த சக்திகள் இருக்கக் கூடும்? லிபிய யுத்தத்தால் சாகேல் பகுதியின் ஸ்திரத்தன்மை குலைக்கப்பட்டிருப்பது மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட உள்நாட்டு யுத்தங்கள் வெடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இன்னும் அது போன்றவை பற்றி இங்கு எழுதப்படவில்லை. இக்கட்டுரையாளர் எதிர்காலத்தில் அவை குறித்து எழுதக் கூடும்.
எனவே, கடாபி உண்மையில் ஒரு உயில் எழுதி வைத்திருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டும், அவரது இறுதி வார்த்தைகளில் சிலவற்றை நினைவு கூர்ந்தும் இக்கட்டுரையை முடிக்கிறேன்.
''தனிப்பட்ட முறையில் பாதுகாப்பான, நிலையான வாழ்க்கைக்கு கைம்மாறாக எங்களது லட்சியத்தை விட்டுக் கொடுத்து எங்களால் பேரம் பேசியிருக்க முடியும் என்பதை இவ்வுலகின் சுதந்திர சிந்தனை உள்ள மக்கள் தெரிந்து கொள்ளட்டும். அப்படியொரு வாய்ப்பை அளிக்கத் தயாராக இருப்பதாகப் பலர் எங்களிடம் கூறினார்கள்; ஆனால், இந்தப் போரின் முன்னணியில் கடமை மற்றும் கண்ணியத்தின் அடையாளமாக இருப்பது என்று நாங்கள் தீர்மானித்தோம். உடனடியாக நாங்கள் வெல்லவில்லை என்றாலும் தேசத்தைப் பாதுகாக்கத் தீர்மானிப்பது ஒரு கவுரவம் என்றும், அதை விற்றுவிடுவது என்பது, மற்றவர்கள் வேறு மாதிரிச் சொல்ல முயற்சித்தாலும், வரலாறு எப்போதும் மறக்காமல் நினைவில் வைத்திருக்கும் ஒரு மாபெரும் துரோகமாகும் என்கிற பாடத்தை எதிர்கால தலைமுறைகளுக்கு கொடுத்துச் செல்வோம்.''
அது உண்மைதான். ஆப்பிரிக்க நட்பு நாடுகள் சில பாதுகாப்பான புகலிடம் அளிக்க முன்வந்தன; சில ஐரோப்பிய நாடுகள் அவர் ஒரு கொண்டாடப்படும் தியாகியாக (குறைந்தபட்சம் லிபியாவின் சில பகுதிகளிலாவது) ஆவதைவிட முனை மழுங்கடிக்கப்பட்ட நண்பராக வைத்திருப்பதை விரும்பின. உண்மையில் அவருக்கு வாழ்வதற்கான வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. இருந்தும் அவர் மரணத்தைத் தேர்வு செய்தார். அந்த சிறிய உயிலில் அவர் ஒரு எளிய ஆசையை வெளிப்படுத்தியிருந்தார்.
''நான் கொல்லப்பட்டால் இஸ்லாமிய சடங்குகளின் படி, மரணத்தின்போது நான் அணிந்திருந்த உடைகளுடன், குளிப்பாட்டாமல், சிர்டேவில் உள்ள கல்லறையில், என்னுடைய குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு அருகே புதைக்கப்படுவதை விரும்புகிறேன். என்னுடைய மரணத்திற்குப் பின்னர் என்னுடைய குடும்பத்தார், குறிப்பாக பெண்களும் குழந்தைகளும், நன்றாக நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறேன்.''
இஸ்லாமிய சம்பிராதாயத்தில், இறந்தவர்கள் குளிப்பாட்டுப்பட்டு, புதிய போர்வையால் சுற்றப்பட்டு புதைக்கப்பட வேண்டும் என்கிற விதி தியாகிகளின் விஷயத்தில் தளர்த்தப்படுகின்றது. சரியோ அல்லது தவறோ தன்னை நெருங்கிக் கொண்டிருந்த மரணத்தை வீரமரணம் என்று கடாபி எண்ணினார். நாம் அப்படி நினைக்காமல் இருக்கலாம்; ஆனால் பலர் அப்படித்தான் நினைப்பார்கள். கடாபி மிகப் பெருமளவிற்கு ஒரு கோமாளியாகவே இருந்தார்; பல வகைகளில் மிருகத்தனமானவராக இருந்தார்; வயது ஆக ஆக மிருகத்தனமும் அதிகரித்தது; தான் என்ற அகங்காரமும் அதிகரித்தது; ஆனால், அவருக்கு ஒரு தொலை நோக்குப் பார்வையும் இருந்தது என்பதையும், தன்னுடைய மக்களுக்கு ஆப்பிரிக்காவிலேயே மிகவும் முன்னேறிய ஒரு சமூக நல அரசை நிர்மாணித்தார் என்பதையும் எல்லோரும் மறக்கப் போவதில்லை. அவருடைய மரபு ஒரு முரண்பட்ட மரபாகும். போரில் வெற்றி பெற்றவர்கள் அவருடைய சடலத்திற்கு என்ன செய்தார்கள் என்பதை முன்னர் விவரித்திருக்கிறோம். அவருடைய குடும்பத்தினர் அல்லது அவரது இனக்குழுவினரால் மட்டுமல்ல, எண்ணற்ற வேறு பலராலும் அதை எளிதில் மறந்துவிட முடியாது.

--------------------------------------------நன்றி: பிரன்ட்லைன், நவம்பர் 18, 2011                  
       
   



                             
                       

Friday, November 18, 2011

விலை உயர்வு




        அம்மா என்று
        இனி எந்த உயிரும்
       அழைக்கப்போவதில்லை
       வளைந்து நெளிந்து
       குனிந்து நெகிழும்
       ஜடங்களைத் தவிர.
       ஏனெனில்
       வாழ்வதற்கான தகுதிகள்
       உயர்த்தப்பட்டிருக்கின்றன

Thursday, November 17, 2011

உரையாடல்: ஜான்-லுக் கோடார்டும் சொலானசும்






 தமிழில்: அசோகன் முத்துசாமி

ஜான் லுக் கோடார்ட்: 'தி ஹவர் ஆப் தி பர்னேசஸ்' என்கிற உங்கள் படத்தை நீங்கள் எப்படி வரையறுக்கிறீர்கள்?
பெர்ணான்டோ சொலானஸ்: அதை ஒரு தத்துவார்த்த மற்றும் அரசியல் திரைக்கட்டுரை என்பேன். சிலர் அதை ஒரு திரைப் புத்தகம் என்று கூறியிருக்கிறார்கள். அது சரிதான். ஏனெனில், நாங்கள் தகவல்களை, சிந்திப்பதற்கான மூலக்கூறுகளை, தலைப்புகளை, மற்றும் அறிவூட்டக் கூடிய வடிவங்களை அளிக்கின்றோம்.....ஒரு நூலில் உள்ளது போலவே கதை விவரிப்பு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ..முன்னுரை, அத்தியாயங்கள், நிறைவுரை. தன்னுடைய வடிவத்திலும் மொழியிலும் முற்றிலும் எளிமையான ஒரு திரைப்படம் அது. எங்களுடைய கல்வி நோக்கங்களுக்குத் தேவையான அல்லது பயன்படக் கூடிய அனைத்தையும் நாங்கள் பயன்படுத்தியிருக்கிறோம். நேரடிக் காட்சிகள் அல்லது பேட்டிகள் போன்றவற்றிலிருந்து கதை வடிவில் அல்லது பாடல் வடிவில் அல்லது கருத்துருக்களை புகைப்படத் தொகுப்பு வடிவில் வரையிலும் பயன்படுத்தியிருக்கிறோம். படத்தின் துணைத் தலைப்புகள் அதன் ஆவணத் தன்மையைக் காட்டுகின்றன; 'நவகாலனியம், வன்முறை மற்றும் விடுதலை ஆகியவை பற்றிய குறிப்புகள், வாக்குமூலங்கள்' என்கிற ஒரு குறிப்பிட்ட யதார்த்தத்தின் நிரூபணமாக, வாக்குமூலமாக, திட்டவட்டமான சான்றாக அவை போடப்பட்டுள்ளன. அது குற்றம் சாட்டும் ஒரு ஆவணப் படம். ஆனால், அதே நேரத்தில் அது மக்களுக்கு போதிக்க விரும்புகிறது; ஆய்வு செய்ய விரும்புகிறது. இந்தப் படத்தின் திசையமைவில் இருக்கிறது அதன் பங்களிப்பு; அது ஒரு பாதையையும், ஒரு திசையையும் காட்டுகிறது. இந்தப் படம் குறிப்பிட்ட எந்த ஒருவரைக் குறி வைத்தும் எடுக்கப்பட்டதல்ல; 'கலாச்சார ரீதியாக உடனொத்து வாழ்தலை' நம்புகிற பார்வையாளர்களைக் குறிவைத்தும் எடுக்கப்படவில்லை; ஆனால், நவகாலனிய ஒடுக்குமுறையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டுள்ளது. இது முக்கியமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்களில் காட்டப்பட்டுள்ளது; ஏனெனில், முதல் பாகம் மக்களுக்கு ஏற்கனவே தெரிந்தவற்றைத்தான் கூறுகின்றது; அவர்கள் ஏற்கனவே உள்ளுணர்வால் உணர்ந்ததையும், அனுபவிப்பதையும்தான் கூறுகிறது. முதல் பகுதி முன்னுரையின் பணியைச் செய்கின்றது. 'தி ஹவர் ஆப் தி பர்னேசஸ்' என்கிற இந்தப் படம் ஒரு திரைச் 'செயல்' ஆகும்; இது ஒரு காட்சி மறுப்பு; ஏனெனில், அது தன்னைத் தானே ஒரு திரைப்படமல்ல என்கிறது; மக்கள் விவாதிப்பதற்கும், உரையாடுவதற்கும், தான் மேலும் வளர்க்கப்படுவதற்கும் ஏற்ற வகையில் இந்தப் படம் வெளிப்படையாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் விடுதலைக்கான இடமாக ஆகின்றது; மனிதன் தன்னுடைய நிலைமையையும், அந்த நிலைமையை மாற்றுவதற்கு இன்னும் ஆழமான பயிற்சி தேவை என்பதையும் அறிந்து கொள்ளும் ஒரு செயலாகும்.
கோடார்ட்: எப்படி இந்தச் செயல் நிகழ்கிறது?
சொலானஸ்: படத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவாதப் பொருள்கள் திரையிலிருந்து பார்வையாளர்களுக்குச் சென்றடைவதற்கு, அதாவது உயிர் பெறுவதற்கு, நிகழ்காலத்திற்கு வருவதற்கு ஏற்ற வகையில் படத்தில் இடைநிறுத்தங்களும், குறுக்கீடுகளும் இருக்கின்றன. கலைகள் பற்றிய 1800களின் முதலாளித்துவக் கோட்பாட்டிலிருந்து வளர்த்தெடுக்கப்படும் மரபான திரைப்படங்களின் பார்வையாளர் வெறும் வேடிக்கை பார்ப்பவர் மட்டுமே; திரையில் நடப்பவற்றில் பங்கேற்பவர் அல்ல; இப்போது அவர் உயிருள்ள கதாபாத்திரமாக, திரைப்படக் கதையில் ஒரு நடிகராக, வரலாற்றின் ஒரு பாத்திரமாகவே ஆகிவிடுகிறார்; ஏனெனில், அந்தத் திரைப்படம் நமது சமகால வரலாறு பற்றியது. இந்தப் படம் விடுதலை குறித்தது; நமது வரலாற்றில் முடிக்கப்படாத ஒரு கட்டம் பற்றியது; அது முடிக்கப்படாத ஒரு படமாக அன்றி வேறு எதுவாகவும் இருக்க முடியாது; விடுதலைக்கான இந்தச் செயலின் நிகழ் காலத்தாலும், எதிர்காலத்தாலும் மாற்றப்படத்தக்கதாக இந்தப் படம் இருக்கின்றது. அதனால்தான் இந்தப் படம் அதன் கதாபாத்திரங்களால், அதில் பங்கேற்பவர்களால் பூர்த்தி செய்யப்பட வேண்டியிருக்கிறது. இப்படத்துடன் இணைத்துக் கொள்ளப்பட வேண்டிய புதிய சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழ்ந்தால் புதிய குறிப்புகளையும், புதிய சான்றுகளையும் இணக்கும் சாத்தியத்தை ஒதுக்கித் தள்ள முடியாது. பங்கேற்பாளர்கள் முடிக்கலாம் என்று தீர்மானிக்கின்ற போது இந்தச் செயல்கள் முடிவுறும். இந்தப் படம் பழைய பார்வையாளரை அசைக்கும் அந்தச் செயலை வெடிக்கச் செய்கிறது. மேலும், பனான் கூறியதில் நாம் நம்பிக்கை வைக்கிறோம்: 'நமது பொது விடுதலைக்காக நாம் அனைவரையும் பங்கேற்கச் செய்ய வேண்டும்; வெறும் பார்வையாளர்கள் இருக்க முடியாது; அப்பாவிகளும் இருக்க முடியாது. நமது மண்ணின் சகதியிலும், நமது மனங்களின் வெறுமையிலும் நமது கைகளை அழுக்காக்கிக் கொள்கிறோம். வெறும் பார்வையாளர் ஒவ்வொருவரும் ஒன்று கோழையாக இருக்க வேண்டும் அல்லது துரோகியாக இருக்க வேண்டும்.' அதாவது, எதையும் சொல்வதற்கான அல்லது மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான படத்தை நாம் எதிர்கொள்ளவில்லை; ஆனால், செயலுக்கான ஒரு படம், விடுதலைக்கான ஒரு படம்.
கோடார்ட்: என்ன மாதிரியான பிரச்சனைகளைச் சந்தித்தீர்கள்?
சொலானஸ்: பணம் போட்டு எடுக்கப்படும் எல்லாப் படங்களுக்கும் பொதுவான பிரச்சனைகள் தவிர நாங்கள் சமாளிக்க வேண்டியிருந்த மிகப் பெரும் பிரச்சனை அந்நிய திரைப்பட மாதிரிகளைச் சார்ந்திருந்த நிலைதான். அதாவது, படைப்பாளிகள் என்கிற வகையில் எங்களை நாங்கள் விடுவித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அமெரிக்க மற்றும் ஐரோப்பியப் படங்களை கலையுணர்வின் அடிப்படையில் நமது படங்கள் சார்ந்திருப்பதுதான் அவற்றின் மிகப் பெரும் குறையாகும். அர்ஜென்டினாவின் கலாச்சார நிலைமையின் ஆய்விலிருந்து இதைத் தனியே பிரித்துப் புரிந்து கொள்ள முடியாது. அதிகாரபூர்வ அர்ஜென்டினாக் கலாச்சாரம் நவகாலனிய முதலாளிகளின் கலாச்சாரமாகும்; போலிக் கலாச்சாரம், பிறரால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கலாச்சாரம், பழைய, அழுகிப் போன கலாச்சாரம். ஏகாதிபத்திய, கொடிய முதலாளிகளின் கலாச்சார மாதிரிகளைக் கொண்டு கட்டப்பட்டது அது. ஐரோப்பிய பாணியிலான, இன்று அமெரிக்கமயமாக்கப்பட்ட ஒரு கலாச்சாரம். அதனால்தான் இன்று தயாரிக்கப்படும் பெரும்பாலான அர்ஜென்டினா படங்கள் அமெரிக்கப் படங்களின் தயாரிப்பு, அளவு மற்றும் கலையுணர்வு மாதிரிகளின் மீதே கட்டமைக்கப்படுகின்றன. அல்லது படைப்பாசிரியருக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஐரோப்பிய மாதிரிகளின் மீதே கட்டமைக்கப்படுகின்றன. புதிய கண்டுபிடிப்புகள் இல்லை, நமது சொந்த தேடல் இல்லை. மொழியாக்கம் செய்வது, அந்த மாதிரிகளை வைத்துக் கொண்டு அதன் மேல் வளர்த்துக் கொள்வது அல்லது அப்படியே பிரதி எடுப்பது மட்டும்தான் இருக்கிறது. அந்தப் படங்களைச் சார்ந்திருக்கிறோம்...
கோடார்ட்: அமெரிக்கப் படங்கள் விற்பதற்கான படங்கள்....
சொலானஸ்: மிகச் சரி. காட்சிகளுடனும், வர்த்தகத்துடனும் பிணைக்கப்பட்டுள்ள ஒரு படம்; முதலாளித்துவச் சுரண்டலினால் கட்டுப்படுத்தப்படுவதும், அதற்குச் சேவை செய்வதற்குமான படம். இந்த லாப நோக்கத்திற்கான தயாரிப்பு முறையிலிருந்துதான் அனைத்து வகையான பாணிகள், உத்திகள், மொழி மற்றும் இன்றைய படங்களின் கால அளவுகளையும் கொண்ட படங்களும் உருவாகின்றன. இந்த கருத்துருக்களிலிருந்தும், இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்தும் முறித்துக் கொள்வதுதான் எங்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. எங்களை நாங்களே விடுவித்துக் கொள்ள வேண்டியிருந்தது: எடுத்துக் கொண்ட பணியை நிறைவேற்றுவதற்கு திரைப்படத்தை ஒரு எழுத்தாளராக அல்லது ஓவியராகப் பயன்படுத்த முடிந்தால் அதில் அர்த்தம் இருக்கிறது. நமது தேவைகளிலிருந்து நமது அனுபவங்களை நடைமுறைக்குக் கொண்டு வர முடிந்தால் அதில் அர்த்தம் இருக்கிறது. எனவே 'ஏழாவது கலையில்' தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏற்ற வகையில் எங்களை நாங்கள் தகமைத்துக் கொள்வதற்கு முன்னர் ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்ளவும், முயற்சிக்கவும், தேடவும் நாங்கள் தீர்மானித்தோம். விஸ்கோண்டிஸ், ரெனோய்ர்ஸ், ஜியோகொண்டாஸ், ரெசனாய்சஸ், பாவேசஸ் மற்றிதரவர்களிடமிருந்து (பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஐரோப்பிய கலைஞர்கள்-மொர்) எங்களை நாங்கள் விடுவித்துக் கொள்ளத் துவங்கினோம்....அர்ஜென்டினா மனிதனின் பரிபூரண விடுதலையின் தேவைகளுடன், நமது பார்வையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய புதிய வடிவம், நமது வடிவம், நமது மொழி, நமது கட்டமைப்பைக் கண்டுபிடிக்க பற்றுறுதி கொண்டோம்: திரைப்பட ஊடகத்தில் நடத்தப்படும் இந்தத் தேடல் கலையம்சம் தொடர்பான ஒன்றல்ல; நமது நாட்டின், நமது மக்களின் விடுதலை தொடர்பான ஒன்று. இந்த வகையில் ஒரு புதிய திரைப்படம் பிறந்தது; நாவலின் கதைக் கருவைப் பற்றி நிற்பதைக் கைவிட்டு அல்லது நடிகர்களின், கதைகளின், உணர்வுகளின் திரைப்படம் என்பதைக் கைவிட்டு, கோட்பாடுகள், சிந்தனைகள், விவாதப் பொருள்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு புதிய திரைப்படம் பிறந்தது. கதையாகச் சொல்லப்படும் வரலாறு கருத்துக்களால் சொல்லப்படும் வரலாற்றிற்கு வழிவிட்டது; பார்ப்பதற்கும், படிப்பதற்குமான ஒரு படம்; உணரவும் சிந்திக்கவுமான ஒரு படம்; ஒரு தத்துவக் கட்டுரைக்கு இணையாக ஆய்வு செய்யும் ஒரு படம் பிறந்தது.
கோடார்ட்: விடுதலைப் போக்கில் இந்தப் படம் என்ன பாத்திரம் வகிக்க முடியும்?
சொலானஸ்: முதலாவதாக, நம்மிடம் இல்லாத தகவல்களை மற்றவர்களுக்குப் பரப்புகிற பாத்திரத்தை இது வகிக்கும். தகவல் தொடர்பு சாதனங்களும், கலாச்சார இயங்கமைப்புகளும் இந்த (சமூக/அரசியல் அமைப்பு-மொர்) அமைப்பினால் கட்டுப்படுத்தப்படுகின்றன அல்லது அதன் கைகளில் இருக்கின்றன. எந்தத் தகவல்கள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று இந்த அமைப்பு விரும்புகிறதோ அந்தத் தகவல்கள் மட்டுமே கிடைக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, விடுதலைக்கான திரைப்படத்தின் பணி நம்முடைய தகவல்களை தயாரித்து, அவற்றைப் பரப்புவதாகும். அதன் மூலம் நம்முடையது என்ன, அவர்களுடையது என்ன என்கிற கேள்வியை எழுப்புவதாகும். மற்றொரு கண்ணோட்டத்தில் பார்த்தால், நமது திரைப்படம் குறித்த கோட்பாடு முழுவதும்-திறந்த படம், பார்வையாளர் பங்கேற்கும் படம், இத்யாதி-ஒரேயொரு அடிப்படை நோக்கத்தை மட்டுமே சுட்டிக் காட்டுகிறது: மனிதனை விடுவிக்க, மனிதன் விடுதலை அடைய உதவும் ஒரே நோக்கம். ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, விலங்கிடப்பட்ட மனிதன். இந்தப் போருக்கான படம் இது. தங்களது நிலை குறித்து மிகவும் மன உலைச்சலுக்கு உள்ளாகியுள்ள மக்களின் விழிப்புணர்வின் மட்டத்தையும், புரிதலின் மட்டத்தையும் உயர்த்துவதுதான் இந்தப் படத்தின் நோக்கம். அது ஒரு வரம்பிற்குட்பட்ட மக்களை மட்டுமே சென்றடையுமா? இருக்கலாம். ஆனால், வெகுஜன திரைப்படம் என்று அழைக்கப்படும் படங்கள் இந்த அமைப்பு எதை அனுமதிக்கிறதோ அதை மட்டுமே பரப்புகிறது; அதாவது, அது தப்பித்துக் கொள்வதற்கான ஒரு சாதனமாகிவிடுகிறது; நழுவுவதற்கான ஒரு சாதனமாக, புரியாத புதிராக்குவதற்கான ஒரு சாதனமாகிவிடுகிறது. மறுபுறமோ விடுதலைக்கான படம் இந்தக் கட்டத்தில் சிறிய குழுக்களையே சென்றடைகின்றன; ஆனால், இன்னும் அதிக ஆழமாகச் சென்றடைகின்றது. அது உண்மையுடன் வருகின்றது; மக்களை காலனியமயமாக்குவதற்கு உதவுவதைவிடவும் ஒரு ஒற்றை மனிதனை விடுதலை செய்ய உதவும் கருத்துக்களைப் பரப்புவது சிறந்தது.
கோடார்ட்: ஒவ்வொரு புரட்சியாளரின் கடமையும் புரட்சியை உருவாக்குவதுதான் என்று கியூபாக்காரர்கள் கூறுகிறார்கள். புரட்சிகர படத்தாயரிப்பாளர்/இயக்குனரின் கடமை என்ன?
சொலானஸ்: திரைப்படத்தை ஒரு ஆயுதமாக அல்லது ஒரு தூப்பாக்கியாகப் பயன்படுத்துவது; இந்த வேலையையே ஒரு செயலாக, புரட்சிகரச் செயலாக மாற்றுவது. இந்தக் கடமை அல்லது பொறுப்பு உங்களுக்கு என்னவாக இருக்கிறது?
கோடார்ட்: ஒரு போராளியாக முழுமையாக வேலை பார்ப்பது, திரைப்படங்கள் தயாரிப்பதைக் குறைத்து போராளியாக இருப்பதை அதிகப்படுத்துவது. இது மிகவும் கடினமானது; ஏனெனில், திரைப்படங்களை உருவாக்குபவர்கள் தனிமனிதவாத செயற்களத்தில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், திரைப்படங்களிலும் மீண்டும் புதிதாகத் துவக்க வேண்டிய அவசியம் இருக்கிறது....
சொலானஸ்: 'மே' சம்பவங்களுக்குப் பிந்தைய (மே 1968) உங்களது அனுபவம் அதிமுக்கியமானது. எங்களது லத்தீன் அமெரிக்கச் சகாக்களுடன் நீங்கள் அதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.
கோடார்ட்: 'மே' சம்பவங்கள் அபாரமான விடுதலையைக் கொணர்ந்துள்ளன. 'மே' தன்னுடைய உண்மையை திணித்துவிட்டது. பிரச்சனைகளைப் பற்றிப் பேசவும், வித்தியாசமான வெளிச்சத்தில் தெளிவாகப் பேசும்படி கட்டாயப்படுத்தியுள்ளது. 'மே'க்கு முன்னர் இங்கு பிரான்சில் உள்ள அறிவுஜீவிகள் அனைவரும் ஒரு சாக்கு சொல்லி வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள்; கார், அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு......ஆனால், எங்களது வாழ்க்கை முறையை மாற்றுவது தொடர்பான, இந்த அமைப்பிடமிருந்து முறித்துக் கொள்வது தொடர்பான மிகச் சாதாரணமான ஒரு பிரச்சனையை 'மே' உருவாக்கிவிட்டது. மளிகைக் கடைக்காரருக்கு நான்கு மாதப் பாக்கி வைத்திருப்பதால் தொழிலாளி வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டிய கட்டாயத்தை ஒத்த ஒரு நிலையை வெற்றிகரமான அறிவுஜீவிகளுக்கும் 'மே' வரவழைத்துவிட்டது. தங்களது வாழ்க்கை முறையை மாற்றப் போவதில்லை என்று உண்மையாகக் கூறும் ட்ரூபாட் போன்ற திரைப்பட இயக்குனர்களும் இருக்கிறார்கள்; கேயர்ஸ் போன்ற இரட்டை வேடம் போடுகிறவர்களும் இருக்கிறார்கள்....
சொலானஸ்: படைப்பாசிரியருக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் முதலாளித்துவ வகை சார்ந்தவையா?
கோடார்ட்: மிகச் சரியாக. படைப்பாசிரியர் என்பவர் பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர் போன்றவர்....
சொலானஸ்: இந்த மாதிரியான 'படைப்பாசிரியரின்' படங்களை நீங்கள் எப்படி வரையறுப்பீர்கள்?
கோடார்ட்: விருப்பி வெறுப்பின்றி கூறினால், இன்றைய 'படைப்பாசியருக்கு' முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் பிற்போக்குத்னமானவை....
சொலானஸ்: எடுத்துக் காட்டுகளாக தனித்து நிற்பவர்கள் யார்?
கோடார்ட்: பெலினி, அன்டோனியோனி, விஸ்கோன்டி, பிரஸ்சன், பெர்க்மேன்.....
சொலானஸ்: இளைய இயக்குனர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கோடார்ட்: பிரான்சில் 'மே'க்குப் பின்னர் கோடார்ட், டிரூபாட், ரிவெட், டெமி, ரெஸ்னாய்ஸ்.... எல்லோரும்... இங்கிலாந்தில்...லெஸ்டர், புரூக்ஸ்....இத்தாலியில் பசோலினி, பெர்ட்டோலுச்சி...கடைசியாக போலன்ஸ்கி....
சொலானஸ்: இந்த திரைப்பட இயக்குனர்கள் அமைப்புடன் ஒன்றிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
கோடார்ட்: ஆம், அவர்கள் ஒருன்றிணைப்பட்டிருக்கிறார்கள்; அதிலிருந்து பிரிக்கப்பட அவர்கள் விரும்பவில்லை.
சொலானஸ்: கூடுதல் விமரிசனத் தன்மை கொண்ட படங்களும் இந்த அமைப்பிற்குள் உள்ளடங்கியவையா?
கோடார்ட்: ஆம். செயல்திறனை ஒன்றிணைக்கும் விஷயத்தில் இந்தப் படங்கள் போதுமான அளவு வலுமிக்கவையாக இல்லை. உதாரணமாக, அமெரிக்க 'நியூஸ்ரீல்ஸ்' (செய்திப் படங்கள்) நிறுவனம் நீங்களும் நானும் எவ்வளவு வறியவர்களோ அவ்வளவு வறியது; ஆனால், சிபிஎஸ் தங்களுடைய படம் ஒன்றை முன்னிறுத்துவதற்காக நியூஸ் ரீல் தயாரிப்பாளர்களுக்கு 10000 டாலர் அளிக்க முன்வந்தால் அவர்கள் மறுத்து விடுவார்கள்; ஏனெனில், அவர்கள் இந்த சமூக அமைப்புடன் ஒன்றிணைக்கப்பட்டுவிடுவார்கள்....ஏன் அவர்கள் இந்த சமூக அமைப்புடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும்? ஏனெனில், அமெரிக்கத் தொலைக்காட்சி தான் எவ்வளவு காட்டுகிறதோ அவ்வளவையும் இந்த சமூக அமைப்பிற்காக மீட்டுக் கொடுக்கும் அளவிற்கு வலுவானது. அமெரிக்கத் தொலைக்காட்சியில் நாம் இடம் பெற வேண்டுமானால் அதற்கு ஒரே வழி தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்புவதற்காகவும் மீட்பதற்காகவுமே பணம் கொடுக்கும் (அதிக பார்வையாளர்கள் பார்க்கும் நேரம்-மொர்) இரண்டு அல்லது நான்கு மணி நேரங்களில் எதையும் முன்னிறுத்த முயற்சிக்காமல் இருப்பதே ஆகும். ஹாலிவுட்டில் அவர்கள் இப்போது சேகுவேராவைப் பற்றி ஒரு படம் தாயரிக்கிறார்கள்...கிரிகோரி பெக் நடிக்க மாசேதுங்கைப் பற்றியும் ஒரு படம் எடுக்கிறார்களாம்...அந்த நியூஸ்ரீல் படங்களை பிரான்ஸ் தொலைக்காட்சியில் காட்டுவதாக இருந்தால் அது பயனளிக்கக் கூடியதாக இருக்காது....குறைந்தபட்சம் முழுமையாக பயனளிக்கக் கூடியதாக இருக்காது. ஏனெனில், அவை வேறொரு நாட்டிலிருந்து வருகின்றன.... அது போல், இங்கு பயனளிக்கக் கூடிய என்னுடைய படங்களுக்கு லத்தீன் அமெரிக்காவிலும் ஒரு மதிப்பு இருக்கிறது...
சொலானஸ்: நீங்கள் கடைசியாகக் கூறியதை நான் ஏற்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணோட்டத்திலிருந்து ஒரு பிரச்சனையைப் பார்க்கும் ஒரு தேசியப் படம், அது தெளிவாகவும் ஆழமாகவும் இருந்தால், இந்த சமூக அமைப்பால் அதை ஜீரணித்துக் கொள்ள முடியாது. ...கருப்பு அதிகாரம் குறித்த ஒரு படத்தையோ அல்லது கிராமிச்சால் வன்முறை குறித்து கருப்பின மக்களிடம் உரையாடும் ஒரு படத்தையோ சிபிஎஸ் வாங்கும் என்று நான் நம்பவில்லை; அல்லது கோன்-பென்ட் தான் நம்பும் அனைத்தையும் கூறும் ஒரு படத்தை பிரெஞ்சுத் தொலைக்காட்சி ஒளிபரப்பும் என்று நான் நம்பவில்லை. அந்நியப் பிரச்சனைகளைப் பற்றிக் குறிப்பிடும் ஏராளமான விஷயங்கள் நமது நாடுகளில் அனுமதிக்கப்படுகின்றன; ஆனால், இந்தப் பிரச்சனைகளே அவற்றின் அரசியல் தன்மைகளின் காரணமாக சர்வதேசப் பிரச்சனைகளாக இருந்தால், அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது.... சில மாதங்களுக்கு முன்னர் ஐசன்ஸ்டைனின் 'ஸ்டிரைக்' மற்றும் 'அக்டோபர்' ஆகிய படங்களை தணிக்கைத்துறை தடுத்தது...மறுபக்கமோ, படைப்பாசியருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெரும்பாலான படங்கள் முதலாளிகளின் கண்ணோட்டத்திலிருந்து முதலாளிகளின் பிரச்சனைகளைப் பேசுகின்றன. அப்படங்களை இந்த அமைப்பு உட்கிரகித்துக் கொள்வது மட்டுமின்றி, படைப்பாசிரியருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நமது நவகாலனிய திரைப்படத் தயாரிப்புக்கான அழகியல் மற்றும் கருப்பொருள் முன்மாதிரிகளாக நமது நாடுகளில் அவை ஆகிவிடுகின்றன.
கோடார்ட்: நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், இங்கே பிரான்சில் அரசியல் நிலைமை கடினமாகும்போது இந்த சமூக அமைப்பால் முன்பு போல் உட்கிரகித்துக் கொள்ள முடியவில்லை...இதுதான் உங்களது படத்தைப் பொருத்த வரை நிலைமை. அது நிச்சயமாக உட்கிரகித்துக் கொள்ளப்படாது; தணிக்கை செய்யப்படும்.....ஆனால், அரசியல் களத்தில் மட்டும் இந்த இணைத்துக் கொள்ளல் (உட்கிரகித்துக் கொள்ளல்) நிகழ்வதில்லை; கலைக் களத்திலும் இது நிகழ்கிறது.
நான் கடைசியாக இந்த அமைப்பிற்குள் தயாரித்த படங்கள்தான் உட்கிரகித்துக் கொள்வதற்கு மிகக் கடியமான படங்களாக இருந்தன; 'வீக் என்ட்' மற்றும் 'லா சினோயிஸ்' போல அழகியல் அரசியலாக மாற்றப்பட்ட படங்கள்.....ஒரு அரசியல் நிலை அழகியல் நிலையுடன் பொருந்திப் போக வேண்டும். படைப்பாசிரியருக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை நாம் தயாரிக்கக் கூடாது; ஆனால், அறிவியல் பூர்வமான திரைப்படம் தயாரிக்க வேண்டும். அழகியலும் அறிவியல் ரீதியாக ஆராயப்பட வேண்டும். அறிவியலில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ஆய்வும், கலையைப் போலவே, நீங்கள் அலட்சியப்படுத்தினாலும் ஒரு அரசியல் நிலைப்பாட்டுடன் பொருந்துகின்றது. அதே விதத்தில், அறிவியல் கண்டுபிடிப்புகள் இருப்பது போலவே அழகியல் கண்டுபிடிப்புகளும் இருக்கின்றன. அதனால்தான் நாம் தேர்ந்தெடுத்த பாத்திரத்தை, நாம் பற்றுறுதி கொண்டுள்ள பாத்திரத்தை தெளிவுபடுத்த வேண்டும். உதாரணமாக, அன்டோனியோனி ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு செல்லுபடியாகத்தக்க பணியைச் செய்து முடித்தார். ஆனால், இப்போது அவர் அப்படிச் செய்வதில்லை....அவர் தன்னைத்தானே தீவிரமாக மாற்றிக் கொள்ளவில்லை. அவர் அமெரிக்காவில் தயாரிக்கப்படுவது போலவே மாணவாகளைப் பற்றி ஒரு படம் உருவாக்குகிறார். ஆனால், மாணவர்களிடமிருந்து வரக் கூடிய ஒரு படத்தை உருவாக்குவதில்லை......பசோலினியிடம் திறமை இருக்கிறது; ஏராளமான திறமை இருக்கிறது. பள்ளியில் ஒருவர் கட்டுரை எழுதக் கற்றுக் கொள்வது போல் ஒரு குறிப்பிட்ட வகையான படத்தை எப்படி எடுப்பது என்பது அவருக்குத் தெரியும்... எடுத்துக் காட்டாக, மூன்றாம் உலகைப் பற்றி அவரால் ஒரு அழகான கவிதையைப் படைக்க முடியும்...ஆனால், அந்தக் கவிதையைப் படைத்தது மூன்றாம் உலகமல்ல. அப்படி எனில், அது மூன்றாம் உலகமாக இருக்க வேண்டியது அவசியம் என்று நான் கருதுகிறேன். ஒரு நாள் மூன்றாம் உலகம் கவிதையைப் படைக்கும்; அதை நீங்கள் பாடுகிறீர்கள் என்றால், அதற்குக் காரணம் நீங்கள் கவிஞர் என்பதுதான், உங்களுக்கு அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பது தெரிந்திருப்பதால்தான்....யாரோ கூறியது போல், ஒரு திரைப்படம் என்பது ஆயுதமாக, ஒரு துப்பாக்கியாக இருக்க வேண்டும்....ஆனால் இன்னும் இருளில் மூழ்கியிருக்கும் மக்கள் இருக்கிறார்கள்; தங்களைச் சுற்றிலும் வெளிச்சமாக்கிக் கொள்ள அவர்களுக்கு ஒரு பாக்கெட் டார்ச் லைட்டை விடப் பெரிதாகத் தேவைப்படுகின்றது; இதுதான் தத்துவத்தின் பாத்திரம்...பிம்பங்கள் மற்றும் ஒலிகள் பற்றிய ஒரு மார்க்சிய ஆய்வு நமக்குத் தேவைப்படுகிறது. லெனின் கூட திரைப்படங்களைப் பற்றிப் பேசும்போது அவர் தத்துவார்த்த ஆய்வு செய்யவில்லை; எங்கெங்கும் திரைப்படங்கள் இருக்கிற வகையில் எவ்வளவு படங்கள் தயாரிக்கப்படுகின்றன என்கிற அடிப்படையில் ஆய்வு செய்தார்; ஐசன்ஸ்டைனும் ஜிகா வெர்டோவும் இந்த விஷயத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
சொலானஸ்: நீங்கள் இப்போது எப்படிப் படம் எடுக்கிறீ£கள்? உங்களுக்கு தயாரிப்பாளர் இருக்கிறாரா?
கோடார்ட்: நான் எப்போதுமே தயாரிப்பாளர் வைத்துக் கொண்டதில்லை; என்னுடைய நண்பர்கள் ஓரிருவர் தயாரிப்பாளர்களாக இருந்தார்கள். ஆனால், வழக்கமான படத் தயாரிப்பு நிறுவனங்களுடன் எப்போதுமே சேர்ந்து பணியாற்றியதில்லை. ஒன்று அல்லது இரண்டு தடவை நான் அதைச் செய்தபோது அது பிழையாக இருந்தது....அது எனக்குச் சாத்தியமில்லை. மற்றவர்கள் எப்படிச் செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. கோர்நாட் மற்றும் பெர்டோலுச்சி போன்ற என்னுடைய தோழர்கள் சிலர்தங்களது தயாரிப்பை முடிப்பதற்காக குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்களை நாடியதை நான் பார்க்கிறேன். ஆனால், நான் எப்போதும் இதைச் செய்ததில்லை. நான் இப்போது என்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து ஒரு தயாரிப்பளராக இருக்கிறேன்...முன்பை விட அதிகமாக படங்கள் தயாரிக்கிறேன். ஏனெனில், ஒரு வித்தியாசமான முறையில் நான் படம் எடுக்கிறேன்; 16எம்எம் படம் அல்லது என்னுடைய சிறிய டிவி கேமராவைக் கொண்டு படம் எடுக்கிறேன்....இன்னொரு பொருளிலும் நான் வித்தியாசமாகப் படம் எடுக்கிறேன்; வியட்நாம் உதாரணத்தின்படிக் கூறினால், அது பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகக் கூடத் தோன்றலாம். யுத்தத்தில் வியட்நாமியர்கள் சைக்கிளை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றிக் குறிப்பிடுகிறேன். இங்கு ஒரு சைக்கிள் பந்தயச் சாம்பியன் கூட வியட்நாமியர்கள் போல் சைக்கிளைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. நல்லது, நான் ஒரு வியட்நாமியரைப் போல சைக்கிளைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய சைக்கிளை வைத்து நான் ஏராளமாகச் செய்ய வேண்டியிருக்கிறது; ஏராளமான வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது; இதைத்தான் நான் செய்ய வேண்டும்; இதைத்தான் நான் கட்டாயம் செய்ய வேண்டும். அதனால்தான் றான் இப்போது அதிகமாகப் படங்கள் எடுக்கிறேன். இவ்வருடம் நான்கு படங்கள் எடுத்தேன்.
சொலானஸ்: நீங்கள் வழக்கமாக எடுத்துக் கொண்டிருந்த திரைப்படங்களுக்கும் இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் திரைப்படங்களுக்கும் என்ன வேறுபாடு?
கோடார்ட்: இப்போது நான் தெரிந்தே அரசியல் போராட்டத்தில் பங்கேற்க முயற்சிக்கும் படங்களைத் தயாரிக்க முயற்சிக்கிறேன். முன்னர் நான் அதைத் தெரிந்து செய்யவில்லை. உணர்ச்சிவயப்படும் மனிதன் நான்....நான் ஒரு வலதுசாரியாகத் துவங்கிய போதிலும், நான் ஒரு முதலாளித்துவவாதியாக, ஒரு தனியுரிமைக் கோட்பாட்டளராக இருந்தததாலும் நான் இடதுசாரியாக இருந்தேன். பின்னர் உளரீதியாக படிப்படியாக ஒரு இடதுசாரியாக உருவானேன்; நான் ஒரு பாராளுமன்ற இடதுசாரி எனும் நிலையை அடையவில்லை; ஆனால், ஒரு புரட்சிகர இடதுசாரி எனும் நிலையை அடையும் வரை, அதன் முன்நிபந்தனையாக இருக்கின்ற அனைத்து முரண்பாடுகளுடனும், படிப்படியாக உருவானேன்.
சொலானஸ்: திரைப்படக் கலை ரீதியாக?
கோடார்ட்: திரைப்படக் கலை ரீதியாக, இந்த அமைப்பிற்குள்ளேயே செயல்பட்டபோதிலும் முன்னெப்போதும் செய்யப்படாதததையே நான் எப்போதும் செய்ய முயற்சித்திருக்கிறேன். எப்போதும் செய்யப்படாதததை இப்போது புரட்சிகரப் போராட்டத்துடன் இணைக்க விரும்புகிறேன். முன்னர் என்னுடைய தேடல் ஒரு தனிநபர் போராட்டம். நான் செய்தது தவறு என்றால் ஏன் அது தவறு, சரி என்றால் ஏன் அது சரி என்பதை அறிந்து கொள்ள இப்போது விரும்புகிறேன். முன்னர் செய்யப்பட்ட அனைத்தும் கிட்டத்தட்ட ஏகாதிபத்தியத் தன்மை கொண்டதாக இருந்ததால் நான் இப்போது இதற்கு முன்னர் செய்யப்படாததைச் செய்ய முயற்சிக்கிறேன். கிழக்கத்திய திரைப்படம் ஏகாதிபத்தியத் திரைப்படம்; சான்டியாகோ அல்வாரெஸ் மற்றும் ஒன்றிரண்டு ஆவணப்படஇணக்குனர்கள் தவிர கியூபத் திரைப்படம் பாதி ஏகாதிபத்திய மாதிரியாகும். ரஷ்ய திரைப்படங்கள் அனைத்தும் ஏகாதிபத்திய தன்மை கொண்டவையாக மிக வேகமாக மாறிவிட்டன; யாருக்கும் தெரியாத ஐசன்ஸ்டைன், ஜிகா வெர்டோ மற்றும் மெட்ரேகின் போன்ற இதற்கு எதிராகப் போராடிய இரண்டு, மூன்று பேரைத் தவிர ரஷ்யத் திரைப்படம் அதிகாரவர்க்க மயமாக்கப்பட்டுவிட்டது. நான் இப்போது தொழிலாளர்களுடன் திரைப்படம் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு தத்துவார்த்த ரீதியாக என்ன தேவைப்படுகிறதோ அதைச் செய்கிறேன்; ஆனால், எச்சரிக்கையாக இருங்கள் என்றும் கூறுகிறேன்....இந்த மாதிரியான படங்களை உருவாக்கும்போது ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த அமைப்பின் குப்பை மாதிரி படங்களை அவர்கள் ஆதரிக்கும் விதமாக நடந்து கொள்ளக் கூடாது என்பதும் அவசியம். இது எங்களது கடமையும், திரைப்படக் கலைஞர்களின் போராட்டத்திற்கு நாங்கள் உதவும் விதமும் ஆகும். சுருக்கமாகக் கூறினால், திரைப்படக் களம் மிகவும் சிக்கலாகவும், குழப்பமாகவும் இருக்கும் நிலையில், திரைப்படத் துறையைச் சாராத மக்களுடன் சேர்ந்து படங்களைத் தயாரிப்பது மிகவும் முக்கியமாகும்; திரையில் காண்பதற்கும் தங்களுக்கும் என்ன தொடர்பிருக்கிறது என்பதில் ஆர்வம் உள்ள மக்களுடனும் சேர்ந்து படங்களைத் தயாரிப்பது....
சொலானஸ்: திரைப்படத் துறை சாராத மக்களுடன் சேர்ந்து ஏன் நீங்கள் படம் தயாரிக்கிறீர்கள்?
கோடார்ட்: திரைப்படத் தயாரிப்பு மொழியைப் பொருத்தவரை ஹாலிவுட் அல்லது மோஸ்பிலிம் அல்லது வேறு எங்காயினும் உள்ள விரல் விட்டு எண்ணத்தகுந்த நபர்கள் தங்களது மொழியை, தங்களது பேச்சை ஒட்டு மொத்த மக்களின் மீதும் திணிக்கிறார்கள்; இவர்களிடமிருந்து விட்டு விலகுவதும், 'நான் ஒரு வித்தியாசமான படம் எடுக்கிறேன்' என்று கூறுவதும் மட்டும் போதுமானதல்ல....திரைப்படத்தை உருவாக்குவது குறித்து ஒவ்வொருவரும் இன்னும் அதே கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். இதை வெல்வதற்கு திரை மொழியில் பேசுவதற்கான வாய்ப்பு எப்போதுமே கிடைக்கப் பெறாதவர்களுக்கு அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். கடந்த மே மாதம் பாரீசில் நடந்த சம்பவங்களில் அசாதாரணமானது எல்லோரும் சுவர்களில் எழுதத் துவங்கியதாகும்; ஏனெனில், விளம்பரதாரர்களுக்கு மட்டுமே சுவர்களில் எழுதும் உரிமை இருந்தது....சுவர்களில் எழுதுவது அசுத்தம், அசிங்கம் என்று மக்கள் நம்ப வைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், சுவர்களில் எழுத வேண்டும் என்கிற தூண்டுதல் எனக்கும் இருந்தது. 'மே' மாதம் வரை நான் அதை நான் தக்கவைத்துக் கொண்டிருந்தேன்.....அது இனியும் ஒரு அராஜகமான கருத்து அல்ல; ஆனால், ஒரு ஆழமான வேட்கையாகும்....திரைப்படங்களைத் தயாரிப்பதிலும் நாம் புதிதாகத் துவங்க வேண்டியிருந்தது.....மாணவர்கள் தொழிலாளர்களுடன் உரையாடும் ஒரு படம் நான் தயாரித்தேன். அது மிகத் தெளிவாக இருந்தது: மாணவர்கள் மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்கள்; தொழிலாளர்கள் பேசவேயில்லை.....தங்களுக்கு இடையில் தொழிலாளர்கள் ஏராளமாகப் பேசிக் கொண்டார்கள்....ஆனால் அவர்களது சொற்கள் எங்கே? செய்தித்தாள்களில் இல்லை; திரைப்படங்களில் இல்லை. மக்கள் தொகையில் 80% இருப்பவர்களின் சொற்கள் எங்கே? பெரும்பான்மை மக்களின் சொற்கள் பேசப்படுவதை நாம் அனுமதிக்க வேண்டும். அதனால்தான் எப்போதுமே பேசிக்கொண்டிருக்கும் சிறுபான்மையினருடன் அல்லது திரைப்படங்கள் தயாரிக்கும் சிறுபான்மையினருடன் சேர்ந்திருக்க நான் விரும்பவில்லை; ஆனால், 80% மக்கள் என்ன சொல்ல விரும்புகிறார்களோ அதையே என் மொழி வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்... அதனால்தான் திரைப்படத் துறையினருடன் படம் தயாரிக்க நான் விரும்பவில்லை; மனித குலத்தின் மிகப் பெரும்பான்மை மக்களுடன் படம் தயாரிக்க விரும்புகிறேன்.


(அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் 'தி ஹவர் ஆப் பர்னேசஸ்' படம் 1969ல் வெளியானபோது பதிவு செய்யப்பட்டது).
---------------------------------------------        
படப்பெட்டி, நவம்பர் 2011 இதழில் வெளியானது.
           
                     
 






Sunday, November 13, 2011

பிச்சை எடுக்கும் அனுமாரும் பிடுங்கித் தின்னும் பெருமாளும்.

மூலதனம் அடித்தித் தின்றும் தன்னைப் பெருக்கிக்கொள்ளும். பிச்சை எடுத்தும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். இரண்டையுமே சட்ட பூர்வமாக்கிக் கொள்ளும். முதலாவதற்கு இன்றைய உதாரணம் பட்ஜெட்டில் முதலாளிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் மற்றும் விலை உயர்வுகள்  என்றால், இரண்டாவதற்கு மல்லையாக்களுக்கு வழ்ங்கப்படும் வங்கிக் கடன்களாகும். இரண்டுமே மக்களின் பணத்திலிருந்துதான் செய்யப்படுகின்றன.  
மல்லையாவின் கிங்பிஷ்சர் ஏர்லைன்ஸ் பெரும் கடன் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. அதனால அவருக்குச் சொந்தமான யுபி உள்ளிட்ட தாய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்திருந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உதாரணமாக யுனைட்டெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் 90% பங்குகள் கிங்க்பிஷ்சர் ஏர்லைன்ஸ் வாங்கியுள்ள கட்ன்களுக்கு பிணையாக வைக்கப்பட்டுள்ளன என இந்து நாளிதழின் (13.11.11) கட்டுரை ஒன்று கூறுகிறது. (மக்கள் பணத்திலிருந்து பெற்ற கடனுக்கு பிணையாக மக்களிடமிருந்து பங்காகப் பெற்ற பணமே பிணையாக வைக்கப்படுகிறது).அதாவது மல்லையா எதற்காக பங்குதாரர்களிடமிருந்து பணம் வாங்கினாரோ அந்தப் பணத்தை அவர்களிடம் சொல்லாமலேயே வேறு தொழிலில் முதலீடு செய்துள்ளார். சாமனியர்கள் அதைச் செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன? கையாடல் என்பார்கள். அதையும் மீறி அவரால் தன்னுடைய ஏர்லைன்ஸைக் காப்பாற்ற முடியவில்லை. அரசாங்கத்தை அணுக்குகிறார். தனக்குக் கடன் கொடுக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்க் கோருகிறார். காங்கிரஸ்-திமுக கூட்டணி அரச்சாங்கத்தின் நிதி அமைச்சர் பிரனாப் முகர்ஜி அதற்கேற்ப வங்கிகளுக்கு அறிவுறுத்துகிறார். மல்லையா தப்பிப்பதும் மூழ்குவதும் அரசாங்கத்தின் கொள்கைகளை தீர்மானிப்பதில் அவருக்கும் அவரது தொழில் எதிரிகளுக்கும் உள்ள செல்வாக்கை வைத்து நிர்ணயிக்கப்படுமா அல்லது பொதுவாக மூலதனத்திற்கு உள்ள செல்வாக்கை வைத்து நிர்ணயிக்கப்படுமா என்பதைப் பொறுத்தது.  

Tuesday, October 25, 2011

தீபாவளிக் கவிதைகள்






குழந்தைகளின் ஏக்கங்களும்
பெற்றோர்களின் கடமைகளும்
தவிப்புடன் 
அலைந்து கொண்டிருந்தன
கடைவீதிகளில்
தீபாவளி அன்றும்
மறுநாளும்
அதற்கு மறுநாளும்.....


----


வெடிச் சத்தத்தில்
நடுங்கிச் சிலிர்த்தன
கசாப்புக் கடையில்
கட்டப்பட்டிருந்த ஆடுகள்.




------

வயிற்று நெருப்பால்
அடுப்புக்கு ஒளி 
ஏற்ற முடியுமா 
என்று ஆராய்ச்சி 
செய்து கொண்டிருபவனுக்கு
தீபாவளி 
தேவர்கள் அசுரர்கள்
யாருடைய பண்டிகையாக
இருந்தால் என்ன?
அந்நியர்களின் பண்டிகைதான்!
-----

பெரிய கடைகள்
மூடிக் கிடக்கின்றன
அவற்றின் வாடிக்கையாளர்களைப் போலவே
கொண்டாடுவதற்கு.


சாலையோர, தள்ளு வண்டிக்
கடைகள் காத்திருக்கின்றன
இன்னும்  
யாராவது வந்தால்
கொண்டாடலாம் என்று. 


1,2,4 கவிதைகள் வண்ணக்கதிர் 6.11.11 இதழில் வெளிவந்துள்ளன. 


Thursday, October 13, 2011

ஊழல் யாத்திரை



அசோகன் முத்துசாமி


மோடியின் ஆட்சி ஊழலற்ற ஆட்சி என்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். டாடாக்களும் அம்பானிகளும் வேறு தனியாக சான்றளிக்கிறார்கள், மோடி நல்லவர் வல்லவர் என்று. கோட்சேயின் வாரிசுகளைப் புகழ்ந்தே பழக்கப்பட்ட நவீன காந்தியவாதி அன்னா ஹசாரேவும் ஆமாம் சாமி என்கிறார்.
ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருப்பது முதலாளித்துவமும் அதன் லாப வெறியும்தான். ஆனால், அந்த முதலாளிகள் ஒருவருக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார்கள் என்றால் நிறையவே யோசிக்க வேண்டியிருக்கிறது. எங்கேயோ இடிக்கிறதே என்கிற சந்தேகம் எழுகின்றது.  ஒரு வேளை இவர் மற்றவர்களைவிடக் குறைவாக வாங்குகிறாரோ? அந்த மகிழ்ச்சியில் அமெரிக்காவும் முதலாளிகளும்  மோடியைக் கொஞ்சி மகிழ்கிறார்களோ? ஒரு மாநிலத்திலேயே இவ்வளவு (எவ்வளவு என்று பின்னால் பார்க்கப் போகிறோம்) அள்ளிக் கொடுக்கிறவர் மத்தியில் அதிகாரத்திற்கு வந்தால் எவ்வளவு அள்ளிக் கொடுப்பார் என்பதால்தான் அம்பானிகள் அவர் பிரதமராக வேண்டும் என்கிறார்களோ?
வாருங்கள்  என்னதான் விஷயம் என்று பார்த்துவிடுவோம்.
குஜராத் மாநில காங்கிர° கட்சியின் சார்பில் குடியரசுத் லைவரிடம் மோடி செய்துள்ள ஊழல்கள் பற்றி விரிவாக ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு அந்த யோக்கியதை இருக்கிறதா என்பது வேறு விஷயம். முதலாளித்துவக் கட்சிகள் தங்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியில் எதிரிகளைப் பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்துவது வழக்கம்தானே?
இனி பட்டியல்:
1. மாநிலத் தலைநகர் காந்தி நகரில் மட்டும் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு நிலம் வழங்கப்பட்டதில் 5197 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கின்றது. மாநிலத் தலைநகரம் தனியே உருவாக்கப்பட்ட ஒரு நகரம். இப்படி தலிநைகரை உருவாக்கும் திட்டத்திற்கு என்று கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அரசு அலுவலகங்கள், சட்டமன்றம், தலைமைச் செயலகம் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கும், அரசு ஊழியர்கள், முன்னுரிமைச் சமூகப் பிரிவினர் ஆகியோருக்கு விடுகள் கட்டிக் கொள்வதற்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். எதிர்காலக் கட்டமைப்புப் பணிகளுக்குத் தேவைப்படும் என்பதால் அந்த நிலத்தை எந்த தனியாருக்கும் விற்கக் கூடாது. அப்படி விற்க வேண்டிய விசேட நிலை ஏற்படுகின்ற போது அவற்றை பகிரங்க ஏலம் மூலமே விற்க வேண்டும். ஆனால், ஏல முறை பின்பற்றப்படாமல் (2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு போல்) அற்ப விலைக்கு டிஎல்எப் என்கிற கட்டுமான நிறுவனம், ஐசிஐசிஐ வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீச°, சத்யம் கம்ப்யூட்டர்°, ரகேஜா காhப்பரேஷன் மற்றும் பூரி பவுண்டேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு துhக்கிக் கொடுத்திருக்கிறார்கள். மொத்த 17,67,442 சதுர கிமீ நிலத்தை வெறும் 105 கோடிக்கு விற்றிருக்கிறார்கள். பத்திரப் பதிவுக் கட்டணத்திற்கெனப் பரிந்துரைக்கப்பட்ட விலையின் படி அதன் மதிப்பு 3358 கோடி. சந்தை விலையின்படி அதன் மதிப்பு 5323 கோடி. விற்றதோ வெறும் 105 கோடி. ஆக இழப்பு 5197 கோடி.
2.  டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு 1100 ஏக்கர் நிலம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர மீட்டர் 900ரூபாய்க்கு கொடுக்கப்பட்டுள்ளது. சந்தை விலையோ ரூ10,000 என்கிறார்கள். டாடா நிறுவனம் இந்த நிலத்திற்காகக் கொடுக்க வேண்டியது (ரூ900 என்கிற கணக்கில்) ரூ400 கோடி. அதையும் 6 மாதங்களுக்கு ஒரு முறை ரூ50 கோடி என்று தவணை முறையில் கொடுத்தால் போதும். இந்த நிலமும் கால்நடை பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்பட்டதாகும். முறையான, வெளிப்படையான நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படாமல் அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளார்கள்.
இந்த நில பரிமாற்றத்திற்கு டாடா நிறுவனம் செலுத்த வேண்டிய °டாம்ப் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
இந்த திட்டத்தின் மொத்த மதிப்பே வெறும் 2200 கோடிதான். மேற்கு வங்கத்திலிருந்து இந்த திட்டத்தை குஜராத்திற்கு மாற்றிய செலவு 700 கோடி. இரண்டையும் சேர்த்தால் மொத்தம் 2900 கோடி. பொதுவாக கடன் கொடுக்கும்போது இந்த 700 கோடி செலவை நிதிநிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளாது. ஆக அதைக் கழித்துவிட்டால் 2200 கோடிதான் அதன் மதிப்பு. ஆனால், மோடி அரசாங்கத்தால் அதற்கு எவ்வளவு கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது தெரியுமா? 9570 கோடி. கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று சொன்னால் தொழிற்சாலையைக் கையகப்படுத்தி, அது அதே 2200 கோடிக்கு விற்றாலும் கூட அரசாங்கத்துக்கு 7370 கோடி நட்டம்.  அதாவது, மக்கள் பணம்.
இந்தக் கடனையும் இருபது வருடங்கள் கழித்து திருப்பிச் செலுத்தினால் போதும். அது வரைக்கும் வட்டி எவ்வளவு தெரியுமா? வெறும் 0.10 சதவீதம்தான். இது போதாதென்று தயாரிக்கப்பட்டு வெளியே வரும் ஒவ்வொரு நானோ காருக்கும் ரூ60,000 மானியமாக வழங்கப்படுகிறது. இது இந்தத் தொழிற்சாலை இயங்கும் வரை தொடரக் கூடியது. குஜராத் மாநில மக்களின் வரிப்பணத்தை எப்படியெல்லாம் துhக்கிக் கொடுக்கிறார் பாருங்கள், மோடி?
இந்த ஆலை அமைக்கப்பட்டிருக்கும் இடம் நீர்ப்பற்றாக்குறை இடமாக அறிவிக்கப்பட்டுள்ள இடம். ஆதலால், எந்த விவசாயிக்கும் நிலத்தடி நீரை எடுத்துக் கொள்ளும் உரிமை இல்லை. விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பும் கொடுக்கப்படுவதில்லை. நிலத்தடி நீரை உறிஞ்சி விடுவார்களாம். அடப்பாவிகளா, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் நீங்கள் எப்படி உருப்படுவீர்கள் என்று பார்ப்போம்.
ஆனால், டாடா நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு 1400 கியூபிக் மீட்டர் நீர் வழங்கப்படுகின்றது. அதாவது, 14 லட்சம் லிட்டர் தண்ணீர். அவசரத் தேவைக்கு நிலத்தடி நீரையும் உறிஞ்சிக் கொள்ளலாம்.
நானோ கார் தொழிற்சாலைக்கு மோடி காட்டியிருக்கும் மொத்த சலுகை சுமார் 33000 கோடி. இந்தத் திட்டத்தை பேசி முடித்தது வெவ்வேறு வகையான கொள்ளையர்களுக்கு இடையில் தரகு பேசும் நீரா ராடியா.
3. முந்த்ரா துறைமுகம் மற்றும் முந்த்ரா சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகியவற்றுக்காக அதானி குழுமத்திற்கு 2003, 2004ம் ஆண்டுகளில் 3,86,83,079 சதுர மீட்டர் நிலத்தை பாஜக அரசாங்கம் வழங்கியிருக்கிறது. முதலில் ஒரு ச.மீ. 1 ரூபாய்க்கும் கடைசியாக 32 ரூபாய்க்கும் விற்றிருக்கிறது. உண்மையில் விலை கொஞ்சம் அதிகம்தான். மொத்தம் 46 கோடி ரூபாய். ஆயிரக்கணக்கான கோடி சொத்து மதிப்புள்ள அதானி குழுமம் அநேகமாக கடன் வாங்கித்தான் இந்தத் தொகையைக் கட்டியிருக்கும்.  பாவம், மிகவும் கஷ்டப்படுகிறார்கள் அல்லவா?
இதைவிடப் பெரிய அநியாயம் என்னவென்றால், இதே பகுதியில் சில பொதுத்துறை நிறுவனங்களுக்கு ச.மீ. 800லிருந்து 10000 வரை குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள். விற்கவில்லை என்பதைக் கவனிக்கவும். லாபம் தனியாருக்கு, நட்டம் பொது மக்களுக்கு என்பது தனியார்மயம். இதுதான் இந்துத்துவத்தின் கொள்கையும்.
இதன் மூலம் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு 10000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
4. குஜராத் மாநில பெட்ரோலியம் கார்ப்பரேஷன் என்பது ஒரு நவரத்னா பொதுத்துறை நிறுவனம். நல்ல லாபத்தில் இயங்கக் கூடியது. மாநிலத்தில் எங்கே எண்ணை, எரிவாயு இருக்கிறது என்று தேடிக் கண்டுபிடித்து, உற்பத்தி செய்யும் வேலை அதனிடம் ஒப்படைக்கப்பட்டது. எதிர்காலத்தில் அது பல கோடிக்கணக்கான லிட்டர்கள் எண்ணை,எரிவாயுவை உற்பத்தி செய்யும் என்று கூறப்பட்டது. குஜராத் பெட்ரோலிய மையமாக ஆகும் என்கிறார்கள். பல்வேறு இடங்களிலிருந்து கடன் பெற்று 4933 கோடி ரூபாய் முதலீடு செய்தது அந்த நிறுவனம். 51 இடங்களில் எண்ணை தேடும் உரிமம் பேற்ற அந்நிறுவனம் வெறும் 13 இடங்களில் மட்டும் எண்ணை இருப்பதைக் கண்டுபிடித்தது. 2009, மார்ச் 31 வரை அது வெறும் 297 கோடி பெறுமானமுள்ள எண்ணையையும், எரிவாயுவையும் மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. முதலீடோ 4933 கோடி.
இதற்கிடையே ஜியோ குளோபல் என்கிற பன்னாட்டு நிறுவனத்துடன் இந்த அரசுத் துறை நிறுவனம் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டுள்ளது. எதற்காக, ஏன் இந்த ஒப்பந்தம் என்பது யாருக்கும் தெரியாது. எனவே இது விரிவான விசாரணைக்கு உட்டுபடுத்தப்பட வேண்டும். ஏனெனில், ஒன்று எண்ணை கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது அங்கு நிச்சயமாக எண்ணை இருப்பு இருக்க வேண்டும்.
இப்போது அந்நிறுவனம் வேண்டுமென்றே எந்த உற்பத்தியிலும் ஈடுபடவில்லை. அப்படி எனில் என்ன ஆகும்? காலப் போக்கில் அது நட்டத்தில் இயங்கும் நிறுவனமாக அறிவிக்கப்பட்டு, எண்ணை வளத்தோடு சேர்த்து அடிமாட்டு விலைக்கு யாராவது தனியாருக்கு விற்கப்படக் கூடும்.
மேலும், கிருஷ்ணா கோதாவரி படுகை ஊழலைப் போலவே இதிலும் நடக்கிறதோ என்கிற சந்தேகம் இருக்கிறது. ஜியோ குளோபல் நிறுவனம் தேவையான இயந்திரங்களை அளிக்கும் என்றும், அதற்கான வாடகையை மட்டுமின்றி உற்பத்தியில் ஒரு பங்கும் அந்நிறுவனத்திற்கு அளிக்கப்படும் என்றும் அந்த ஒப்பந்தம் கூறுகிறது. வெறும் இயந்திரச் சேவை மட்டும் வழங்குவதாக இருந்தால் வாடகைக் கட்டணம் மட்டும் கொடுத்தால் போதும். லாபத்தில் பங்கு கொடுக்க வேண்டியதில்லை. இதுதான் வர்த்தக முறை. லாபத்தில் பங்கு வேண்டும் எனில், அந்த நிறுவனமும் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், அப்படி எதுவும் இல்லை.
இந்தப் பட்டியல் மிகவும் பெரியது. பாஜக தலைவர்களில் ஒருவரான வெங்கய்யா நாயுடுவிற்குத் தொடர்புள்ள நிறுவனங்களுக்கு கட்ச் மாவட்டத்தில்  மிகக் குறைந்த விலைக்கு நிலம் அளித்தது, விவசாயப் பல்கலைக்கழக நிலத்தை 7 நட்சத்திர விடுதி கட்டுவதற்கு சாத்ராலா ஹோட்டல் நிறுவனத்திற்கு அற்ப விலைக்கு விற்றது, எ°ஸார் நிறுவனத்திற்கு வன நிலத்தை வழங்கியது,  அகமதாபாத்துக்கு அருகில் ச.மீ. ஒரு லட்சம் மதிப்புள்ள நிலத்தை வெறும் 4424 ரூபாய் விலைக்கு பாரத் ஹோட்டல்° என்கிற நிறுவனத்திற்கு விற்றது என மொத்தம் 17 குற்றச்சாட்டுகள் அந்த மனுவில் உள்ளன.
அரசுக்குச் சொந்தமான விமானத்தையோ, ஹெலிகாப்டரையோ மோடி பயன்படுத்துவதே இல்லை. உள்நாட்டுப் பயணமாகட்டும், வெளிநாட்டுப் பயணமாகட்டும் பெரு முதலாளிகள் கொடுக்கும் மிக ஆடம்பரமான தனியார் விமானங்களில்தான் பயணிக்கிறார். மோடி ஏன் தான் விரும்புகிற நபரே ஊழல் தடுப்பு அதிகாரியாக (லோகாயுக்தா) நியமிக்கப்பட வேண்டும் என்கிறார் என்பது இப்போது புரிந்திருக்கும்.
இந்த லட்சணத்தில் அத்வானி ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை போகிறார். அதை அவர் பீகாரில் இருந்து துவக்கியிருக்கிறார். கர்நாடகாவிலிருந்தோ, குஜராத்திலிருந்தோ துவங்கியிருந்தால் அவர் உண்மையிலேயே ஊழலை எதிர்க்கிறார் என்று நம்பலாம்.
------------------------------------------------13.10.11      

Tuesday, October 4, 2011

நீதி சிறையில், அநீதி வெளியில்




அசோகன் முத்துசாமி


நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்கிறீர்கள், ஆனால் அவர் மீது 2002ம் ஆண்டு கலவரக் கறை படிந்திருக்கிறதே என்று ‘புதிய தலைமுறை’ தொலைக் காட்சியின் நிருபர் சோ ராமசாமியிடம் கேட்கிறார். எந்த நீதிமன்றமாவது அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறதா என்று சோ பதில் கேள்வி கேட்கிறார்.
உண்மைதான். இன்னும் எந்த நீதிமன்றமும் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கவில்லைதான். அப்படியொரு தீர்ப்பு அளிக்கப்படுவதற்கு மோடி விடுவாரா என்பதுதான் இப்போது பிரச்சனையே.
மதப் படுகொலைப் புகார்களில் பல எடுத்துக் கொள்ளப்படவேயில்லை என்பதும், அதை மீறி காவல்துறையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புகார்களில் பலவற்றுக்கு முதல் தகவல் அறிக்கையே எழுதப்படவில்லை என்பதும், அப்படி எழுதப்பட்ட வழக்குகளில் பலவற்றுக்குக் குற்றப் பத்திரிக்கையே தாக்கல் செய்யப்படவில்லை என்பதும் ஏற்கனவே தெரிந்ததுதான். அதையும் மீறி வழக்கு விசாரணை என்கிற கட்டத்தை அடைந்த பிரபலமான பெஸ்ட் பேக்கரி வழக்கு உள்பட சில வழக்குகளில் சாட்சிகள் அடுத்தடுத்து பல்டி அடித்தார்கள் என்பதும் நாம் அறிந்ததுதான்.
ஆனால், இவை எதுவும் மோடி மீது நேரடியாகக் குற்றம் சாட்டும் வழக்குகள் அல்ல. மோடியால் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு பிரமாணப் பத்திரம்தான் மோடி மீது நேரடியாகக் குற்றம் சாட்டுகிறது. அதன் ஒரு முக்கியமான பகுதி பின்வருமாறு:
“...கோத்ரா ரயில் எரிப்பில் கொல்லப்பட்டவர்களின் பிணங்களை அகமதாபாத்திற்கு எடுத்து வருவது என்கிற முடிவும், விஎச்பி பந்தை ஆதரிப்பதாக பாஜக அறிவித்திருப்பதும் அகமதாபாத்திலும் மாநிலம் முழுவதிலும் மத வன்முறைகள் வெடிப்பதற்கு நிச்சயம் இட்டுச் செல்லும் என்று அந்தக் கூட்டத்தின் முடிவில் அவருக்கு (மோடி) புரிய வைக்க முயற்சிக்கப்பட்டது.  அத்தகைய ஒரு நிலைமையைச் சமாளிக்கத் தேவையான ஆட்கள் குஜராத் காவல்துறையிடம் இல்லை என்பதையும் அவருக்குப் புரிய வைக்க முயற்சிக்கப்பட்டது. சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு நான் அளித்த சாட்சியத்தின் அது தொடர்பான பகுதி பின்வருமாறு கூறுகிறது:
“பந்திற்கான அறைகூவல் ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டது என்றும், கோத்ராவில் கரசேவகர்கள் எரிக்கப்பட்டது போன்ற சம்பவங்களைச் சகித்துக் கொள்ள முடியாது என்பதால் பந்தை ஆதரிப்பது என்று கட்சி முடிவு செய்து விட்டது என்றும் முதலமைச்சர் நரேந்திர மோடி கூறினார். மேலும், குஜராத்தில் மதக் கலவரங்களைச் சமாளிக்கும் விஷயத்தில் மாநிலக் காவல்துறை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் சமமாக இருக்க வேண்டும் என்கிற கோட்பாட்டை நீண்ட காலமாகக் கடைப்பிடித்து வருகின்றது என்றும், இப்போது இது போன்ற சம்பவங்கள் இனி எப்போதும் நடக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றால் முஸ்லிம்களுக்குப் பாடம் புகட்ட வேண்டிய தேவை இருக்கிறது என்றும் அவர் அங்கு கூடியிருந்தவர்களிடம் வலியுறுத்திப் பேசினார். இந்துக்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்த அனுமதிப்பது தவிர்க்க முடியாதது’’ (ஐபிஎன் லைவ் தொலைக் காட்சி இணையதளம்).
பிணங்களைக் கொண்டு வந்து ‘இந்துக்களின்’ கோபத்தை அதிகரிப்பது, பந்த் நடத்தி கலவரம் செய்வதற்குத் தோதான சூழலை உருவாக்குவது, காவல்துறையினர் தலையிட்டு காரியத்தைக் கெடுத்துவிடக் கூடாது என்பதற்காக கண்டு கொள்ளாதீர்கள் என்று அவர்களுக்கு உத்தரவிடுவது என்று எல்லாவும் திட்டமிட்டே நடத்தப்பட்டிருக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கிறது.
காவல்துறை கண்டு கொள்ளவில்லை என்பது இப்போது வரலாறு. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் குல்பர்க் சொசைட்டி கொலைகள். முன்னாள் காங்கிரஸ் எம்பி இஷான் ஜாப்ரி பல முறை அபயக் குரல் எழுப்பியும் காவல்துறை காது கோளாத துறையாக இருந்தது. இந்துத்துவ வெறியர்களால் 69 பேர் கொல்லப்பட்டார்கள்.
மோடி இட்ட வாய்மொழி உத்தரவிற்கு ஆதாரம் சஞ்சீவ் பட்டின் பிரமாணப் பத்திரம்தான். அந்த பத்திரத்தையும் பட் அவர்கள் ஜாப்ரியின் மனைவி தொடுத்திருக்கும் வழக்கிற்கொரு ஆதாரமாகவும்தான் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். அதில் 2002ம் ஆண்டு மாநில உளவுத் துறை துணை அதிகாரியாகவும், பட்டின் வாகன ஓட்டுநராக இருந்தவருமான கே.டி.பந்தும் சாட்சிக் கையொப்பம் இட்டிருந்தார். பட் 2002ம் ஆண்டு மாநில உளவுத் துறையின் துணை ஆணையராக பதவி வகித்தவர்.
அந்தப் பிரமாணப் பத்திரத்தில் பட் மேலும் பல முக்கியமான விவரங்களைக் கொடுத்துள்ளார். 2002 பிப்ரவரி 27ம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-6 பெட்டி எரிக்கப்படுவதற்கு இட்டுச் சென்ற உண்மைச் சம்பவங்கள் -பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் கோத்ராவில் நடந்த சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அந்த இரண்டு நாட்களில் கோத்ரா நகரின் அனைத்து தொலை பேசிகளின் அழைப்பு விவரங்களும் உளவுத் துறை அதிகாரி என்கிற வகையில் அவரிடம் இருந்தன. அதற்குப் பின்னர் மோடி நடத்திய கூட்டம், அதைத் தொடர்ந்து நடந்த படுகொலைகள் ஆகியவை தொடர்பான ஆதாரங்களும் அவரிடம் இருந்தன. காவல்துறை உள்ளிட்ட அரசு உயரதிகாரிகளின் தொலை பேசி அழைப்புகள், அவர்கள் செய்த தவறுகள் மற்றும் அவர்கள் செய்யத் தவறியவை குறித்த விவரங்களும் அவற்றில் அடங்கும். அவற்றைஎல்லாம் அவர் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் (எஸ்ஐடி) விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
பிரச்சனை என்னவென்றால் எஸ்ஐடி அதன் அடிப்படையில் மேற்கொண்டு தொடர வேண்டிய விசாரணையை பாரபட்சமின்றி நடத்தவில்லை. அது மட்டுமின்றி, மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய இந்த தகவல்களை ‘சம்பந்தப்பட்டவர்களுக்குத்’ தெரிவித்தும் விட்டது. (போதாக்குறைக்கு அது பத்திரிக்கைகளுக்கும் கசிந்துவிட்டது. இவ்வருடம் பிப்ரவரி மாத டெகல்கா இதழ்களில் இந்த விவரங்கள் வெளி வந்துவிட்டன என்பதையும் பட் இந்த பத்திரத்தில் தெரிவித்துள்ளார்).
விளைவு? மோடி அரசின் உயரதிகாரிகள் பட்டை மிரட்டத் துவங்கினர். பல வகையான தொல்லைகள் கொடுத்தனர். அவருக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பையும் குறைத்து, கிட்டத்தட்ட பாதுகாப்பே இல்லாமல் செய்து அச்சுறுத்தினர். ஒன்றும் பலிக்கவில்லை என்றவுடன் கே.டி.பந்த்தை எஸ்ஐடியே மிரட்டியுள்ளது. இவ்வருடம் ஏப்ரல் 5ம் தேதி எஸ்ஐடியால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பந்த் கிட்டத்தட்ட குற்றவாளி போல் நடத்தப்பட்டிருக்கிறார். அவரைக் கைது செய்து விடுவோம், பயங்கரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டியுள்ளார்கள். மற்ற சாட்சிகளும் இது போல் மிரட்டிப் பணிய வைக்கப்பட்டிருப்பார்கள் என்கிறார் பட். நிற்க.
இப்போது இந்த பந்த் என்பவர்தான் பல்டி அடித்துவிட்டார். மிரட்டினால் அவரும்தான் என்ன செய்வார்? பட் என்னை மிரட்டி பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார் என்று குற்றம் சாட்டியிருக்கின்றார். அதன் பேரில் பட் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார். அவரது வீடு இதுவரை இரண்டு முறை சோதனையிடப்பட்டுள்ளது. குடும்பத்தினர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
பட்டின் நேர்மைக்கு ஒன்றை உதாரணமாகச் சொல்லலாம். தற்போது அவர் ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளார். அதற்கு முன்னதாக நீதிமன்றக் காவலில் இருக்கும் அவரை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று மோடி அரசாங்கம் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மனு செய்திருந்தது. ஜாமீன் கேட்ட பட்டிற்கு செப்டம்பர் 4ம் தேதி நீதிமன்றம் ஒரு ஆலோசனை சொன்னது. காவல்துறையின் காவலில் மூன்று மணி நேரம் இருந்து வருவதற்குச் சம்மதித்தால், அந்த நேரத்தில் அவர் தன்னுடைய வங்கி லாக்கர்களில் என்ன இருக்கிறது என்று காவலர்களுக்குக் காட்டினால் (பட் தன்னுடைய லாக்கர்களில் குஜராத் மதப் படுகொலைகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை வைத்திருக்கலாம் என்று மோடியின் காவல்துறை ‘பயப்படுகிறது’) உடனடியாக ஜாமீன் வழங்கப்படும் என்று கூறியது. ஆனால் பட் அதை மறுத்துவிட்டார். இந்த குண்டர்களுடன் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்றும், அரசாங்கம் தனக்கு என்ன தீங்கு செய்தாலும் அதைச் சகித்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும், எவ்வளவு நாள் வேண்டுமானாலும் கம்பிகளுக்குப் பின்னால் இருந்தாலும் இருப்பேன், கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்  என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். .
பட்டின் கைது மதப் படுகொலை வழக்குகளின் சாட்சிகளுக்கு விடப்பட்டுள்ள மிரட்டல் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஒன்றாக அறிக்கை விட்டுள்ளன. அதிலும், இஷான் ஜாப்ரின் மனைவி ஜாகியா ஜாப்ரி தொடுத்திருக்கும் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில் பட் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
உண்ணாவிரதம், பேரணி, இப்போது கைது என்று மோடி தொடர்ந்து நீதிமன்றங்களையும், சாட்சிகளையும், நேர்மையான காவல்துறை அதிகாரிகளையும் மிரட்டிக் கொண்டிருக்கிறார். சோ சொன்னது போல் ஒரு வேளை மோடி எந்த நீதிமன்றத்திலும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாமல் போகலாம். ஆனால், சங் பரிவாரிகள் தங்கள் வழக்கம் போல் ‘முஸ்லிம்களுக்கு எப்படிப் பாடம் புகட்டினோம் பாருங்கள்’ என்று நீதிமன்றத்திற்கு வெளியே சில இடங்களில் ரகசியமாகவும், சில இடங்களில் பகிரங்கமாகவும் பெருமை பேசிக் கொண்டேதான் இருப்பார்கள்.

-----------------------------------------------5.10.11